(Reading time: 3 - 6 minutes)

கருத்துக் கதைகள் – 11. தலைப்பில்லாக் கதை... - ஜான்சி

prayer

ஹாய் சில்ஜீ தோழமைகளே.....அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

இன்றைய கதை இரண்டு பக்கத்து பக்கத்து வீட்டுக் காரங்களோடது. ஒருத்தர் பேரு ராபர்ட் இன்னொருத்தர் பேரு கிறிஸ்.பொதுவா பக்கத்து ஊரு, பக்கத்து நாட்டுல இருக்கிறவங்க கூட எல்லாம் நல்லா நட்பா பழக முடியுற நமக்கு, இந்த பக்கத்து வீட்டுக்காரங்க இருக்கிறாங்களே அவங்க கூட நட்பு பராட்டுறது தான் மிகப் பெரிய சவால் இல்லையா?. ஏன்னா வாசல்ல குப்பை போடுறது, தண்ணீர் பிர்ச்சனை, பொறாமை, போட்டியுணர்வுன்னு சொல்லிட்டே போகலாம்.அதே மாதிரி அன்பான உறவு(?) இருக்கிறவங்கதான் இந்த ரெண்டு பேரும்.

இதில் கிறிஸ் மிக நல்லவர், தினமும் பகலும் இரவும் செபிப்பவர். அன்பாக பிறருடன் பழகுபவர் தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவ எண்ணுபவர். ஆனால் ராபர்ட் அதற்கு நேர் எதிரான குணம் கொண்டவர். சிடுசிடுவென்ற குணமும், எந்நேரமும் பிறருடன் வம்பு வளர்ப்பதும் தான் அவர் வேலை.ஜெபிக்கின்ற, பிறருக்கு உதவுகின்ற பழக்கமும் கிடையாது.அடிக்கடி கிறிஸ்ஸிடம் சின்ன சின்ன பிரச்சனைகளுக்காக சண்டையிடுவார், கடைசியில் கிறிஸ் சண்டையை பெரிது படுத்தாமல் விட்டு விடுவார்.

ஒரு நாள் காலை கிறிஸ் சர்ச் போய் செபித்து விட்டு திரும்பி வருகையில் அவருக்கு வழியில் இருந்த ஒரு சிறிய கல் தடுக்கி கீழே விழுந்ததில் கைமுறிவு ஏற்பட்டது நான்கைந்து நாட்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகி, அறுவைச் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.

வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அவருக்கு பக்கத்து வீட்டு ராபர்ட் மிக உற்சாகமாக பிறரோடு அளவளாவுவது கேட்டுக் கொண்டிருந்தது.அதன் காரணம் அறிய விரும்பி கிறிஸ் தன் மனைவியை அழைத்தார். அவரது மனைவியோ " ராபர்ட்டிற்கு வழியில் ஒரு தங்க நாணயம் கிடைத்ததாகவும், அது குறித்தே அவர் மிகவும் பெருமை பாராட்டுவதாகவும் கூறினார். அதிலும் கிறிஸ்ஸிற்கு விபத்து நிகழ்ந்த நாளில் அந்த சம்பவம் நடந்ததால் பிறரிடம் தன்னைக் குறித்து உயர்வாக பேசுவதோடு நில்லாமல்,

"பார்த்தீர்களா ஒரே நாளில் அந்த கிறிஸ்ஸிற்கு கை உடைந்திருக்கிறது எனக்கோ தங்க நாணயம் கிடைத்திருக்கிறது யார் நல்லவன் என்று உங்களுக்கே புரிந்தால் சரிதான்" என்று பெருமை பேசுவதாகவும் கூறி வருந்தினார்.

கிறிஸ் தன் மனைவியிடம் "ராபர்ட்டின் பேச்சுக்களை பெரிது படுத்த வேண்டாம், அதற்கு வருந்த வேண்டாம்" என்று ஆறுதல் கூறினார். ஆனாலும்அவர் மனதில் இது ஒரு வகையான வருத்தத்திற்கு வழி வகுத்து விட்டது. அவர் மனதிற்குள்ளாக ......

"ஆண்டவரே நான் உம்மிடம் தினம் தோறும் செபித்தேன், என்னால் முடிந்த அளவு அன்போடும் இரக்கத்தோடும் நடந்து கொண்டேன். ஆனால் நீர் எனக்கு பாராபட்சமாக நடந்து கொண்டு விட்டீர்களே?" என்று பல முறை சிந்தித்தவாறு கண் அயர்ந்தார்.

அவருக்கு கனவில் இறைவன் தோன்றி,

"கிறிஸ் நீ வருத்தம் கொள்ளாதே. நீ எனக்கு அன்பிற்கு உரியவன்,உன்னுடைய அன்றாட இறைவேண்டல் காரணமாகவே நீ இன்று உயிரோடு இருக்கின்றாய். ஆம், அன்றைய விபத்தில் நீ உயிரை இழந்திருக்க வேண்டியது ஆனால் அது உன் கை முறிவோடு போயிற்று. அதே நேரம் நீ ராபர்ட் குறித்து எண்ணி மனச் சஞ்சலம் கொள்ள வேண்டியதும் இல்லை. ஏனென்றால் அவன் தன் மனம் போன போக்கில் வாழ்கின்ற காரணத்தினாலேயே அன்றைக்கு அவனுக்கு ஒரு குடம் தங்கக் காசுகள் கிடைப்பதாக இருந்தும் ஒரே ஒரு தங்க காசு கிடைக்கப் பெற்றது." என்று கூறி மறைந்தார்.

தூக்கத்திலிருந்து எழுந்த கிறிஸ் இறைவனுக்கு நன்றி கூறினார்.

 

கதை சொல்லும் கருத்து:

நாம் எப்போதும் நமது வாழ்க்கையை பிறரோடு ஒப்பிட்டு மனம் வருந்தக் கூடாது.பிறருடைய மதிப்புக் குறைவான வார்த்தைகளால் தன்னைத் தானே குறைவாக மதிப்பிடவும், புண்படவும் கூடாது.யார் என்னக் கூறினாலும் நம் நல்லசெயல்களில் தயங்காது நிலை நிற்க வேண்டும்.

Story # 10 - Alavodu aasaipadu

Story # 12 - Appanukitta kapparai

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.