(Reading time: 10 - 19 minutes)

சிறுகதை - என்னை விட்டுப் போகாதே - K.சௌந்தர்

Family

டிகாரம் காலை ஆறு மணியடித்து ஓய்ந்தது. கண்விழித்துப் பார்த்த ஜெயசீலன் எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தான். பக்கத்தில் மனைவி திவ்யா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். ஞாயிற்றுக்கிழமை சோம்பல் ஜெயசீலனையும் எழுந்திருக்க விடவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று கெஞ்சிய மனத்தை பிடிவாதமாக திருப்பியது கிச்சனில்  கேட்ட பாத்திரங்கள் உருட்டும் ஒலி.

அவனது வயதான தயார் பார்வதியாகத் தான் இருக்க வேண்டும். என்ன செய்வது, இப்போதெல்லாம் திவ்யா அதிகமாக வேலை செய்வதே கிடையாது. அவளும் வேலைக்குப் போகிறாள் அல்லவா. ஆனால் அவனுக்கு பிடிக்காதது அவனது தாயார் வீட்டு வேலைகளை செய்வதுதான்.

வேலைக்கு ஆள் வைக்கலாம் என்றதும் திவ்யா "அதெல்லாம் ஒன்னும் அவசியமில்லை. இப்போ இங்கே காசு கொட்டிக் கிடக்குதா என்ன? எல்லாம் வேலைக்குப் போயிட்டு வந்து நானே  பாத்துக்கறேன் " என்றாள்.

என்னதான் அவள் சொன்னாலும் வேலைக்குப் போவதால் அவளால் அதிக வேலைகளை செய்ய முடிவதில்லை. அம்மாவுக்கு வேலைகள் அப்படியே கிடந்தால் பிடிக்காது. ஆகையால் அம்மாவே முடிந்த அளவு செய்துவிடுவது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது.

கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. திவ்யா அசைவதாகத் தெரியவில்லை. எனவே ஜெயசீலனே எழுந்து சென்று கதவைத் திறந்தான். அம்மா தான் நின்றிருந்தாள். கையில் ட்ரேயில் அவனுக்கு டீ இருந்தது. "ஜெயா, இந்தாப்பா இதை எடுத்துக்கோ” என்றதும்

ஜெயசீலனுக்கு  கோபம் கோபமாக வந்தது.

"என்னமா நீ இந்த வேலையெல்லாம் உன்னை யார் செய்யச் சொன்னது, நீ பேசாம ரெஸ்ட் எடுத்துக்கோ எல்லாம் திவ்யா செய்ய மாட்டாளா?" என்றான்.

"உக்கூம் , உன் பொண்டாட்டி இதுக்கு மேலே எப்போ எழுந்துவந்து உனக்கு டீ போட்டுக் குடுக்கறது? அவ வேணும்ணேதான் தூங்கரா மாதிரி நடிக்காறா. அப்போதானே வேலையை என் தலைல கட்ட முடியும். நா ஒரு ஹார்ட் பேஷண்ட்ன்னு  அவளுக்கு ஞாபகம் இருக்காறா மாதிரியே தெரியலை" பொறுமியபடி திரும்பிச் சென்றாள் பார்வதி.

'உண்மைதான் , அம்மாவுக்கு மூன்று மாதம் முன்புதான் தான் மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்தது. உடனடியாக திவ்யாதான் ஹாஸ்பிடல் கொண்டுபோய் காப்பாற்றினாள். ஆனால் உடனேயே திவ்யா வேலைக்குப் போக ஆரம்பித்தாள். அதிலிருந்து அம்மா ஓய்வெடுக்க முடியவில்லை. அம்மா இப்போ எவ்ளோ இளைச்சுட்டாங்க, எல்லாம் இவளால தான். ஒருவேளை அம்மா சொல்றது சரிதானோ? இவ வேணும்னே தான் அம்மாவை வேலை வாங்கணும்னு இப்படியெல்லாம் நடக்கிறாளோ?'கல்யாணம் ஆன புதிதில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவள் இப்போ மாறிவிட்டது நன்றாகவே தெரிந்தது. அவன் மீதும் பழைய ஒட்டுதல் இல்லை.

இதை இனிமே வளர விடக் கூடாது. என்னை எவ்வளோ கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா மருமகளிடம் கஷ்டப்பட விடக்கூடாது. முடிவு கட்டியவன் அன்று திவ்யாவின் நடவடிக்கைகளை கண்காணித்தபடி சும்மா இருந்தான். மதியம் உணவு வரை எப்போதும் போல் இருந்தவள் உணவுக்குப் பின் திடீரென வெளியே கிளம்பினாள்.

" நா கொஞ்சம் ஷாப்பிங் போயிட்டு வர்றேன்” , என்றவள் பார்வதியிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் .

"இது என்ன சாப்பிட்ட பாத்திரங்கள் அப்பிடியே கிடக்குது, வீடு கூட்டாம கிடக்குது? நீ பாட்டில் வெளியே கிளம்பிட்டே?” என்றான் ஜெயசீலன்.

அவனை வித்தியாசமாக பார்த்துவிட்டு " நீங்க இதுல எல்லாம்  ஏன் தலையிடாறீங்க? நான் போய் வந்து க்ளீன் பண்ணிக்கறேன்" என்றவள் மட மட வென்று வெளியே சென்று விட்டாள்.

ஜெயசீலனுக்கு கோபம் அதிகமானது. ‘வெளியே போவதென்றால் கணவனுடன் போகவேண்டும் என்ற எண்ணமே இல்லை. முன்னெல்லாம் மாமா...மாமா..என்று நாய் குட்டி போல சுற்றிவந்த பெண்ணுக்கு இப்போது மட்டும் என்னவாயிற்று? அவள் இப்போ ரொம்ப மாறிட்ட மாதிரி தெரியுது. எல்லாம் வேலைக்குப் போற திமிர்’. மனதுக்குள் திட்டியபடி காத்திருந்தவன் சற்று நேரத்தில் தூங்கிப் போனான்.

திடீரென்று பாத்திரங்கள் உருட்டும் ஒலி அவனை எழுப்பியது. வெளியே வந்து பார்த்தான்.  அம்மாதான், பாத்திரங்களைக் கழுவத் தொடங்கியிருந்தாள். " அம்மா நீ போயி ரெஸ்ட் எடுத்துக்கோ, அவ வந்து கழுவட்டும்" என்றான் ஜெயசீலன்.

“ஆமாம், அவ எப்போ வந்து எப்போ கழுவறது? எனக்குப் பாத்திரங்கள் காய்ஞ்சு கிடந்தால் பிடிக்காது"என்றபடி வேலையைத் தொடர்ந்தாள் பார்வதி.

 ஜெயசீலனுக்கு சட்டென பொறி தட்டியது. திவ்யாவின் தந்திரம் புரிந்தது. ‘எவ்வளோ சாமர்த்தியமாக மாமியாரை வேலை வாங்குகிறாள். இதுக்கு இன்னிக்கே ஒரு முடிவு கட்டனும்' என்று முடிவு கட்டினான்.

“இதுக்குத்தான் என் கூட படிச்ச ஷோபிகாவை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன், அவளா இருந்தா இப்படி நடப்பாளா. நீதான் ஒரே பிடியாய் உங்க அண்ணன் பொண்ணுன்னு இவளைக் கட்டி வச்சே. இப்போ உனக்கே பிரச்னை ஆச்சு பாரு" என்று சந்தடி சாக்கில் தன் ஆதங்கத்‌தையும் வெளியிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.