(Reading time: 10 - 19 minutes)

சிறுகதை - குப்பைத் தொட்டி - K.சௌந்தர்

size0

"வீல்" ..என்ற குழந்தையின் அழுகுரல் கீத்திகாவை விழிப்படைய வைத்தது, மணி காலை நான்கு என்று கடிகாரம் காட்டியது. பக்கத்தில் ஐந்து வயது மகன் தீபக்கும் கணவன் பிரபாகரும் உறங்கி கொண்டு இருந்தனர்.

“குழந்தையை தூக்கக் கூடாதா, எருமை மாடு கணக்கா அப்படி என்னதான் தூக்கமோ? மனுஷன் நாளெல்லாம் வேலை செய்துட்டு நிம்மதியா தூங்க முடியுதா?" அலுப்புடன் கூறியபடி திரும்பிப் படுத்தான் பிரபாகர்.

கீத்திகாவுக்கு கோபமாக வந்தது. அவள் மட்டும் சும்மாவா இருக்கிறாள்? வீட்டில் இருந்தாலும் அவளுக்கும் ஆயிரம் வேலைகள் இருக்கத்தான் இருந்தன. இருந்தாலும் அதெல்லாம் யாருக்குப் புரியும்? புரிய வேண்டியவனுக்கே புரியவில்லையே., என்னவோ அவன் மட்டுமே வேலை செய்வது போலவும் மற்றவர்கள் ஓய்வெடுப்பது போலவும் அவனது அலுப்பு அவளுக்கு எரிச்சல் ஊட்டியது.

மீண்டும் அவன் எரிச்சலடைந்து கத்துவதற்குள் குழந்தையை தூக்கிக் கொண்டாள். அது பசியில் அழுவது புரிந்தது.

அதை சமாதானம் செய்வதற்குள் யாராவது பால் கலந்து கொடுத்தால் வசதியாயிருக்கும். அப்படி செய்வதற்கு யாரும் இல்லாததால் தானே குழந்தையை தோளில் சாய்த்துக்கொண்டு பால் கலந்து ஊட்டுவதற்குள் அவளுக்கு மூச்சு வாங்கியது. அதுவும் இந்த இரண்டாவது குழந்தை ரீத்து பிறந்தபிறகு பூசணிக்காயாக உப்பிய உடல் அவளது வேலைகளை மேலும் சிரமமாக்கியது.

மெல்ல குழந்தையை தூங்க  வைத்து  விட்டு  படுத்தவளுக்கு ஏனோ அதன்பிறகு தூக்கமே வரவில்லை. அவள் கணவனின் நடவடிக்கைகள் அவளுக்கு மிகுந்த மனச் சோர்வை கொடுத்தன. அவனது வெறுப்பை அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.                                      ‘மனைவி குண்டாகிவிட்டால்  ஒரு கணவனுக்கு அவள் மேல் வெறுப்பு வந்துவிடுமா?  திருமணம் ஆன புதிதில் கீத்து, கீத்து  என்று சுற்றி வந்தவன் கண்களுக்கு இப்போ நான் எருமையாக தெரிகிறேனோ?  இவ்வளோ கஷ்டப்பட்டு உயிரைக் கொடுத்து ஒரு பிள்ளையை ஈன்று கொடுத்ததால் தானே இவன் தானும் ஒரு அப்பா  என்று கம்பீரமாக நடை போட முடிகிறது? பிரசவம்  சிசேரியன்   என்று சத்து குறைந்து அதற்கு ஈடுகட்ட, பாலூட்ட என்று  அதிகமாக சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யக்கூட நேரமில்லாமல் கணவன் மற்றும் குழந்தையின் தேவைகளை கவனித்து தனக்கென்று ஒரு டயட்டும் செய்ய நேரமின்றி இவர்கள் மீதிவைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு தன்னை கவனிக்காமல் விட்டதற்கு தனக்கு இந்த எருமைப் பட்டம் தேவைதான்’ என்று எண்ணியபடி லேசாக கண்ணயர்ந்த நேரம்   

  "எப்போ பாத்தாலும் அப்படி என்னதான் தூக்கம் ? மணி ஏழாவது தெரியலை? இதுக்கு மேலே எப்போ எழுந்து நீ டிபன் செய்து நா ஆபீஸ் போறது?" என்ற பிரபாவின் கத்தலில் பதறிக்கொண்டு எழுந்தாள்.

அச்சச்சோ மணி ஏழாகிவிட்டதா? இப்போ என்ன செய்வது? அவசர அவசரமாக வேலைகளை கவனித்தாள். டிபன் தட்டை அவன் முன்னால் வைத்துவிட்டு மூச்சு வாங்க நின்றவளை ஏற இறங்க பார்த்தான் பிரபா.

"இந்த சின்ன வேலை செய்யவே உனக்கு மூச்சு வாங்குது, நீ எங்கே மதியத்துக்கு சாப்பாடு செய்யறது? நா கேன்டீன்லயே சாப்பிட்டுக்கறேன், எல்லாம் என் தலையெழுத்து" என்றபடி நன்கு மொறுமொறுத்த நெய் தோசைகளை மொக்கிவிட்டு கிளம்பினான் அவன், ஆனால் அதில் ஒன்றை மீதி வைத்துவிட்டு போய்விட்டான். அவனுக்கு  அது  பேஷன் . எப்போதுமே  தட்டில்  வைத்த அனைத்தையும்  அவன் சாப்பிடுவதில்லை . அதில் ஒன்றிரண்டு  மிச்சம்  வைத்துவிடுவான் . ஆனால் கீத்திகாவுக்கு  பண்டங்கள்  வீணாவது  பிடிக்காது . அதனால் அந்த  தோசையை  எடுத்து  வைத்தாள். அடுத்து  கிளம்பி  தயாரான  மகன்  நூடுல்ஸ்  கேட்டான் , அது  இல்லையென்றால்  சாப்பிடமாட்டேன்  என்று வேறு  அடம். வேறு  வழியில்லாமல்  அவனுக்கு  நூடுல்ஸ்  செய்து கொடுத்து அதில் பாதியை  அவன் அப்படியே  வைத்து விட்டு பள்ளிக்கு  கிளம்பிவிட அதற்குமேல் தனக்கென்று எதுவும் செய்ய நேரமில்லாததால் மிச்சமிருந்த நூடுல்ஸையும் நெய்தோசையையும் சாப்பிட்டுவிட்டு காலை உணவை முடித்தாள்.டாக்டர் சொன்னதுபோல நிறைய காய்கறிகள் , நேரத்துக்கு சூப் எதுவுமே அவளால் தனக்கென்று செய்து கொள்ள  முடியவில்லை. மதியத்துக்கு தனக்கென்று எதுவும் செய்ய இஷ்டமில்லாமல் நேத்து ராத்திரி மீந்துபோன ப்ரைடு ரைஸை  சூடுபண்ணி சாப்பிட்டாள்.

இந்த மாதம் அவளது எடை எழுபதை நெருங்கியது. இரண்டு நாட்களில் குழந்தையின் முதலாவது பிறந்தநாள் வந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்கப் பட்டனர். விழாவிலும்  கூட பிரபாகரின் பட்டும் படாத நடவடிக்கைகள் அவளுக்கு வெறுப்பையே அளித்தன. அவள் பக்கத்தில் கூட அவன் வந்து நிற்கவேயில்லை. அவள் காரணம் கேட்டதற்கு ‘யாராவது அவள் அவனுக்கு அக்காவா ? என்று கேட்டு விடுவார்களாம்’ என்று பதில் வந்தது. கஷ்டப்பட்டு கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டவளுக்கு முகவாட்டத்தை மறைக்க முடியவில்லை.  விழா முடிந்து சோர்வாக அமர்த்திருந்தவளிடம் அவளது ஒன்று விட்ட அக்கா ராகா நெருங்கி அமர்ந்து பேச்சு கொடுத்தாள்.

"என்ன கீதா ரொம்ப டயர்டா தெரியரியே?" என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.