(Reading time: 9 - 17 minutes)

‘கழுதை, வழுக்கி விழுந்து காலை உடைத்துக் கொண்டால்தான் புத்தி வரும். குறைந்தது ஒரு மாதம் படுத்த படுக்கையாக கிடந்தால்தான் மகன் எல்லா விஷயத்திலும் நம் பேச்சை  

கேட்பான்’ சிந்தித்துக்கொண்டே கோயிலை நோக்கி நடந்தாள். செல்போன் சிணுங்கியது, எடுத்துப் பார்த்தால் மகன் நெம்பர்.

அவசரமாக எடுத்து “ஹலோ ஆகாஷ் என்னப்பா...இந்த நேரத்துல போன் பண்றே, நீ வர லேட்டகுமா?” என்றாள்.

எதிர்முனையில் மகன் குரல் குதூகலமாக ஒலித்தது.." அம்மா ..உனக்கு ஒரு குட்னியூஸ்....நீ பாட்டியாகப்போறே”

ஒரு நிமிடம்  திகைத்து நின்றாள் மீனாட்சி . இதை அவள் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் மகனுக்கு ஜாதகப்படி ஐந்து வருடங்களுக்கு பிறகுதான் குழந்தை இருக்கும் என்று  நம்பிக்கையான  ஜோதிடர்  சொன்னார் . எனவேதான் இப்படி ஒரு திட்டம் போட்டாள்.

நம்பமுடியாமல் "நீ என்னடா சொல்றே ...உம் பொண்டாட்டி  எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலியே...?” என்றாள்.

“இல்லம்மா அவ சொல்லலாம்னுதான் சொன்னாள், நான்தான் கன்பார்ம் ஆன பிறகு சொல்லிக்கலாம்னு சொல்லிட்டேன். ...இப்போதான் டாக்டர் கன்பர்ம் பண்ணாங்க. சுமியை வீட்டுக்கு அனுப்பிட்டு நான் ஆபீஸ் வந்துட்டேன். உன்கிட்ட இந்த விஷயத்தை  நானே முதல்ல சொல்லனும்னு தான் போன் பண்ணேன். நீ வீட்டுல தானே இருக்கே, சுமியை கொஞ்சம் பாத்துக்கோம்மா...அவ ரொம்ப வீக்கா இருக்கறதாவும் இன்னும் இரண்டு மாசத்துக்கு எந்த அதிர்ச்சியும் கூடாதுன்னும் டாக்டர் சொன்னார்.” என்றான்.

“சரிப்பா ..எல்லாம் நா பாத்துக்கறேன் " என்றபடி போனை அவசரமாக துண்டித்தாள் மீனாட்சி.  

அவளுக்கு திகில் உண்டானது .’ மருமகள் இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பாளோ, இந்த நிலமையில் அவள் வழுக்கி விழுந்து அபார்ஷன் ஏதாவது ஆகிவிட்டால் என்னாவது... ஜோசியர் சொன்னது பலித்துவிடுமோ? அதனால்தான் என்றைக்கும் இல்லாது இன்று என் புத்தி இவ்வளோ கீழ்த்தரமாக போனதோ?

என்ன காரியம் பண்ணிவிட்டேன். ஐயோ மருமகளுக்கு நினைத்த கெடுதல் வம்ச விளக்கையே அழிச்சுடும் போலருக்கே .... எனக்குத்‌தான் கல்யாணமாகி பத்து வருடம் கழித்து மகன் பிறந்தான் அவனுக்காவது உடனடியாக ஒரு குழந்தை பிறக்கக்கூடாதா... அதை நானே என் கையால அழிச்சதா ஆயிடுமோ? பகவானே அவளுக்கு ஒன்னும் அசம்பாவிதம் ஆகாம நீதான் காப்பாத்தனும்..’.பதறியபடி மருமகள் நம்பருக்கு போன் செய்தாள் மீனாட்சி. ஸ்விச் ஆப் என்று வந்தது.

மீனாட்சிக்கு பதற்றம் இன்னும் அதிகமானது. கோயிலுக்கு உள்ளே கூட போகாமல் வெளியிலேயே சேவித்துவிட்டு வீட்டுக்கு விரைந்தாள்.

‘ஐயோ, என்னாச்சோ, இந்நேரம் அவ வழுக்கி விழுந்திருப்பாளோ அவளுக்கு எங்கே அடி பட்டதோ.......’ ஓட்டமும் நடையுமாக வீட்டை அடைந்தாள் மீனாட்சி.  

நல்ல வேளையாக மருமகள் வாசலிலேயே நின்றிருந்தாள். ஒருவேளை உள்ளே சென்று விழுந்து எழுந்து வெளியே வந்திருப்பாளோ...எங்காவது அடி பட்டிருக்குமோ...?’

பரபரப்புடன் “சுமி இப்போதான் அவன் போன் பண்ணி எல்லா விஷயமும் சொன்னான். எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.....ஆமா..நீ ஏன் வெளியிலே நிக்கறே... உனக்கு எத்தனை தடவை போன் பண்றது. ஏன் ஸ்விச் ஆப் ஆச்சு ? ஏதாவது பிரச்சனையா...” என்று பதற்றத்துடன் விசாரித்தாள்.

அவள் பதற்றத்தை கண்டு பயந்தவாறு “அத்தே... சாவி , மொபைல் போன் எல்லாம் பர்ஸ்ல வச்சிருந்தேன் . பர்ஸ் எங்கேயோ விழுந்திடிச்சி போலருக்கு. அதான் கதவை திறக்க முடியாம வெளியிலேயே நிக்கறேன்” என்றாள்.

அவ்வ்ளோ நேரம் மனதில் இருந்த இறுக்கம் குறைய மீனாட்சியின் முகம் தானாகவே மலர்ந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் மனசுக்குள் கடவுளுக்கு நன்றி சொன்னாள் அவள்.

பர்ஸை   தொலைத்ததற்கு  என்ன மண்டகப்படி கிடைக்கப்போகிறதோ என்று பயந்தபடி அவளை நோக்கிய சுமிதாவுக்கு மாமியார் முகம் ஏன் மலர்ந்தது என்று புரியவேயில்லை.

“சரி சரி அதையே நெனைச்சு டென்ஷன் ஆகாதே, உடம்புக்கு நல்லதில்லை " என்றதோடு நிறுத்திக்கொண்டு பக்கத்தில் இருந்த சேரை விரித்துப்போட்டு அவளை  அதில்   உட்காரவைத்தாள்  மீனாட்சி.

 “இந்தாம்மா..நீ கொஞ்ச நேரம் இந்த சேரிலேயே உக்காரு, அங்கே படியோரம் தண்ணி சொட்டி வழுக்குது,..நா போயி எல்லாத்தையும் தொடச்சிட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்” என்றபடி வேகமாக நடந்தாள்.

சுமிதாவுக்கு தான் காதுககளையே நம்ப முடியவில்லை.அவளது மாமியார் தரையை துடைப்பதா? அதுவும் அவளுக்காக ஒரு துரும்பைக்கூட நகர்த்தாத மாமியார். பூமி மாற்றி சுழலத் தொடங்கிவிட்டதா?. எல்லாம் வயிற்றில் இருக்கும் குட்டிகண்ணன் செய்யும் மாஜிக் தான், வேறு என்ன. இந்த மாமியார்களே பேரப்பிள்ளை என்றதுமே தலைகீழாக மாறிவிடுகிறார்களே!’ ஆச்சரியப்பட்டாள் சுமிதா. 

"இல்லத்தே நானே க்ளீன் பண்றனே “என்றவளை "ஷ்...இனி நீ நான் சொல்றபடிதான் கேக்கணும்" என்று அடக்கிவிட்டு உள்ளே சென்றவள் வாசற்படியையும் அவள் ஊற்றியிருந்த எண்ணெயையும் சுத்தமாக துடைத்தாள். கூடவே அவள் மனதில் மருமகள் மீதிருந்த காழ்ப்புணர்வை பேரப்பிள்ளை என்ற சிறு பிஞ்சு சுத்தமாக துடைத்தெரிந்தது.

மகிழ்ச்சியுடன் திருஷ்டி கழித்து மருமகளை மிகுந்த கவனத்துடன் உள்ளே அழைத்துச் சென்றாள் மீனாட்சி.  

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.