(Reading time: 8 - 15 minutes)

சிறுகதை - நிலவும் சூரியனும் - K.சௌந்தர்

moonSun

ஷில்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை. யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அவளுக்குக் கிடைத்திருக்கிறது. சீப் மினிஸ்டருக்கே பொக்கே கொடுப்பது என்றால் சும்மாவா? இந்த வருடம் கல்லூரி  ஆண்டுவிழாவும் அதைத் தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் ஜோதியை ஏற்றும் நிகழ்சியும் இந்த வாரம் நடப்பதாக இருக்கிறது. அதற்குத்தான் முதல்வர் திருமதி. கண்மணி சுப்ரமணியம் வருவதாக உள்ளது .

அவரை வரவேற்பதற்க்கு பத்து அழகிய பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களில்  சி.எம்க்கு பொக்கே கொடுக்கும் வாய்ப்பு பேரழகியான ஷில்பாவுக்கே அளிக்கப்பட்டது. சீனியர் மாணவிகள் பலர் இருக்க முதல் வருட மாணவியான தன்னைத் தேர்ந்தெடுத்தது ஷில்பாவுக்கு  மிகவும் பெருமையாக இருந்தது.

எல்லாம் அவளது நிலவு முகத்தின் கவர்ச்சியால்தான். பத்தாவது முறையாக அறையிலிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள் ஷில்பா. அவளாலேயே வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை.

பொன்னிற முகமும் கருவண்டு கண்களும் லேயர் கட்  பண்ணி அலை அலையாக புரளும் கூந்தலும் அவளுக்கு நிகர் அவளேதான் என்று  எண்ணிக்கொள்ள வைத்தன.

இந்த விஷயம் இதற்குள் கல்லூரி முழுக்க பரவியிருக்கும். இருந்தாலும் தனக்குக் கிடைத்திருக்கும் இந்த அறிய வாய்ப்பை யாரிடமாவது சொல்லி டம்பம் அடிக்கவில்லையென்றால்  தலை வெடித்துவிடும் போல இருந்தது ஷில்பாவுக்கு. 

ஹாஸ்டல் காம்ப்ளெக்ஸ் உள்ளே தான் மெஸ் இருந்தது. ஆனால் அங்கே கூட ஷில்பா மேக்கப் இல்லாமல் போகமாட்டாள். பார்த்துப் பார்த்து செய்த மேக்அப்  மற்றும்   நீல நிற ஜீன்ஸ் , அதற்கேற்ற வெளிர் ரோஜா நிற  டீஷர்ட்டுடன் வெளியே கிளம்பியவள் எதிரே அவளது ரூம் மேட் இலக்கியா வருவதைக் கண்டு நின்றாள். ஷில்பாவுக்கு தான் அழகில் பெருமை, அதைவிட இலக்கியாவின் சாதாரண தோற்றத்தில் அவளுக்கு சற்று இளக்காரம். அவள் தன் ரூம் மேட் ஆக  இருப்பதே ஷில்பாவுக்குப் பிடிக்கவில்லை. எப்போதும் அவளால் முடிந்த அளவு இலக்கியாவை கேவலப் படுத்திக்கொண்டே இருப்பாள்.

முதலில் இவளிடம் சொல்லிப் பீற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவள் "ஹாய் இலக்கியா...எங்கே உன்னைக் காலையிலிருந்து காணோம்? ஒருவேளை ஊருக்குப் போயிட்டியோன்னு நெனைச்சேன்...அப்புறம் ஊருக்குப் போவதா இருந்தாலும் அதை நெக்ஸ்ட் வீக் வச்சிக்கோ. நாளிக்கு சீப் மினிஸ்டர் வர்றாங்க, தெரியுமா... இப்போ விட்டா அவுங்களைப் பாக்கவே முடியாது. ஆனா நா அவுங்க  கூடவே இருக்கப்போறேன்னா பாத்துக்கோயேன், நாளைக்கு பூராவும் நா ரொம்ப பிஸி. அதனால என் கிட்ட எதைக் கேக்கணும்னாலும் இன்னிக்கே கேட்டுக்கோ. இந்த மாதிரி சான்ஸுக்கெல்லாம் குடுத்து வச்சிருக்கணும். ஹீம், உனக்கு படிப்பை விட்ட வேற ஒன்னும் தெரியாது. நாளைக்கப்புறம் ஷில்பவோட  ரூம்மேட்டுன்னு  உன்னை சொல்லி அறிமுகப் படுத்திக்கலாம் அந்த அளவுக்கு நா  பேமஸ் ஆகப் போறேன்”  

அவளின் சுய புராணாத்தைக் கேட்டு ஏற்கனவே ஒரு பக்கம் வலித்துக் கொண்டிருந்த தலை இப்போது இரண்டு பக்கமும் பிளக்கத் தொடங்கியது இலக்கியாவுக்கு.

என்ன செய்வது. ஷில்பா பேசிக்கொண்டே போக இலக்கியா ஆர்வமே இல்லாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தாள். இயற்கையின் கொடையான அழகு ஷில்பாவுக்கு அதிகமாகவே இருப்பதாகப் பட்டது. ஆனால் அதில் அவள் பங்கு என்ன? பெருமையடித்துக்கொள்ள என்ன இருக்கிறது? அழகு என்பது வழி வழியாக வருவது. அழகுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் புகழ் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்தில் தான் பெருமையடிப்பது போன்றது. தன் முயற்சியால் புகழ் கிடைப்பது தான் உண்மையான அங்கீகாரம் என்பது இலக்கியாவின் கருத்து. 

இதையெல்லாம் ஷில்பாவிடம் சொன்னால் என்னவோ அவள் அழகைப் பார்த்து பொறாமைப் படுவதாக நினைத்துவிடுவாள். எனவே "காங்கிராட்ஸ் ஷில்பா, உன் ரூம் மேட்டுன்னு சொல்லிக்க எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு", என்று கூறியவள் ஷில்பா தன் சுயபுராணத்தை மீண்டும் தொடங்கும் முன் விலகி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

‘ஹீம் இதெல்லாம் ஒரு ஜென்மம், அழகை ரசிக்கவும் தெரியாது, அழகுபடுத்திக் கொள்ளவும் தெரியாது. இதுகிட்ட பேசி டைம் வெஸ்ட் பண்ணிட்டனே என்னோட பேன்ஸ் எத்தனை பேர் எனக்காக காத்திருப்பாங்க, உடனே அங்கே போகணும்’ என்று எண்ணியபடி வேகமாக நடக்க ஆரம்பித்தாள் ஷில்பா. மறுநாள் கல்லூரியே களை கட்டியது. வண்ணத்துப் பூச்சிகளாக ஆடை அணிந்த  மாணவியரும் அவர்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் ரேஞ்சுக்கு மாணவர்களும் கல்லூரியை சுற்றி  வளைய வந்து கொண்டிருந்தனர். 

எல்லோரையும் விட அதிக அழகாக நீல வண்ணப் பட்டுச் சேலை மற்றும் அதற்குப் பொருத்தமான அணிகலங்களுடன் வானத்து நிலவே இறங்கி வந்ததுபோல் வந்தாள் ஷில்பா. லெக்சரர் உட்பட அனைவரும் வாய் பிளந்து அவளைப் பார்க்கவும் அவளுக்குப் பெருமை பிடிபடவில்லை.

முன் வரிசையில் அமர்ந்திருந்த இலக்கியாவும் இதை கவனிக்கத் தவறவில்லை.

இவுங்கல்லாம் எப்போதான் திருந்தப் போறாங்களோ? வெறுப்புடன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.