(Reading time: 8 - 15 minutes)

அப்போது அவள் அருகில் கிடந்த சேரில் சோர்வுடன் வந்து அமர்ந்தான் அவள் அண்ணன் முகிலன். அவனும் இதே கல்லூரியில் முதுகலை படித்து வருகிறான். "என்னாச்சு முகில்? ஏன் ஒருமாதிரியா இருக்கே?" என்றாள் இலக்கியா.

“எல்லாம் உன்னாலதான். ஏதோ தெரியாத மாதிரி கேக்கரியே? அந்த நிகேஷ் என்னமா அலட்டுறான் தெரியுமா? அவன் தங்கச்சி ஷில்பா தான் ஏதோ உலக அழகி மாதிரி என்னமா பெருமை பேசறான். எனக்கும் ஒரு தங்கச்சி இருந்து என்ன பிரயோஜனம்? எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? ஹீம் என்ன செய்யறது.. நீ தான் என்ன செய்வே பாவம் உன் ஒட்டடைக் குச்சி உடம்புக்கு உன்னை ஸ்டேஜ் பக்கம் கூட யாரும் நிக்க விட மாட்டாங்க. .ம்...ம்ம் எல்லாதுக்கும் குடுப்பனை வேணும்.   உன்னைக் குறை சொல்லி என்ன பண்றது. நீ அப்படியே அப்பாவை உரிச்சுக்கிட்டு பொறந்துட்டே. என்ன மாதிரி அம்மா சாயல் இருந்திருந்தா கூட நல்லா இருந்திருக்கும்” என்றான் அங்கலாய்ப்புடன்.

இலக்கியாவுக்கு கோபம் வரவில்லை. அவனைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. "அண்ணா என்ன சந்தடி சாக்குல உன்னை நீயே புகழ்ந்துக்கறே? நீ நல்லாயிருக்கறதா இப்போ யார் சொன்னது?" என்றாள் சிரிப்புடன்.

"சாரிம்மா.. ஏதோ அவன் மேல இருந்த கோபத்துல உன்னை மட்டமா பேசிட்டேன் . ப்ளீஸ், மறந்துடு" என்றான் உண்மையான வருத்ததுடன்.

“சரி சரி விடு முதல்வர் வந்துட்டாங்க பாரு” என்றாள் இலக்கியா.

முதல்வர் திருமதி. கண்மணி சுப்ரமணியம் மேடைக்கு வந்தார். ஷில்பா அளித்த பொக்கேயைப் பெற்றுக் கொண்டார். பிறகு மைக் அருகே வந்தார்.

"உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இது கலை மற்றும் அறிவியல் கல்லூரி.  எனவே கலை மற்றும் அறிவியலின் பயன்கள் குறித்து உங்களில்  யாராவது ஒருவர் ஒரு ஐந்து நிமிடங்கள் பேச முடியுமா?” என்றார்.

இவ்வளோ நேரம் ஆரவாரமாக இருந்த அரங்கம் இப்போது அமைதியானது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனரே தவிர யாருமே பேச முன்வரவில்லை.

போக்கே கொடுத்துவிட்டு பக்கத்திலேயே நின்ற ஷில்பவை நோக்கித் திரும்பினார் முதல்வர். அவளோ பூமியையே குனிந்து பார்த்துக்கொண்டிருந்தாள். கல்லூரி முதல்வர் முகத்தில் சங்கடம் தெரிந்தது.

இதையெல்லாம் கவனித்த இலக்கியா உடனடியாக இருக்கையை விட்டு எழுந்தாள்.மேடையை நோக்கி நடந்தாள். மைக்கை கையில் வாங்கிய இலக்கியா பேச ஆரம்பித்தாள் . அவளது பொருள் பொதிந்த பேச்சைக் கேட்ட அனைவரும் வியந்தனர். ஐந்து நிமிடங்கள் தாண்டியும் அவள் பேச்சை நிறுத்தவில்லை. கரகோஷம் விண்ணை பிளந்தது.

முதல்வர் அவளை அருகில் அழைத்து தோளோடு அணைத்துக் கொண்டார். காமராக்கள் பளிச்சிட்டன.

முதல்வர் மைக்கை வாங்கி "இங்கே அழகான பல  பெண்கள்  இருந்தனர். அவர்களில் யாருக்கும் இல்லாத பிரகாசமான அறிவு இந்தப் பெண்ணுக்குத் தான் இருக்கிறது. அழகான நிலவை விட பிரகாசிக்கும் சூரியனால் தான் உலகுக்கு பயன் அதிகம். இங்கு உள்ள கலை மற்றும் அறிவியல் ஜோதியை நான் ஏற்றுவதை விட இந்தக் கல்லூரியின் விடிவெள்ளி இலக்கியா ஏற்றுவதுதான் பொருந்தும்" என்று கூறினார்.

ரிசப்ஷனில் நின்ற பத்து அழகிய பெண்களும் ஷில்பாவும் ஒரு ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்க்க கலை மற்றும் அறிவியல் ஜோதியை ஏற்றினாள் இலக்கியா.

நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் இலக்கியாவை தனியே அழைத்து சிறிது  நேரம் பேசியதுடன் அவள் அண்ணன் முகிலனுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முகிலன் வானத்திலேயே பரப்பதாக உணர்ந்தான். இது போன்ற பெருமை வேறு யாருக்குக் கிடைக்கும். மெல்ல மெல்ல அவனை சுற்றி அவனது நண்பர்கள் கூட்டம் அதிகமானது. "டே முகில், உன் தங்கச்சி மாதிரி எனக்கும் ஒரு தங்கச்சி இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்" என்று அங்கலாய்த்னர்.

“என் தங்கச்சி மாதிரி இன்னொரு பெண் இருக்க முடியாதுடா. இந்த சின்ன வயதிலேயே எத்தனை தெளிவு? அழகினால் கிடைக்கும் புகழ் தற்காலிகமானது, திறமையால் கிடைக்கும் புகழ்தான் நிரந்தரமானதுன்னு அவ சொன்னது எவ்வளோ உண்மை” என்றான் முகிலன் பெருமையுடன்.

மறுநாள் பத்திரிகைகளிலும் இந்த செய்தி புகைப் படத்துடன் வெளிவந்தது. கல்லூரி முழுக்க இலக்கியாவைப் பற்றியே பேச்சாக இருந்தது.

அதைவிட முக்கியமான விஷயம் மறுநாளிலிருந்து ஷில்பாவைப் பார்ப்பவர்கள் “ஓ நீ அந்த இலக்கியாவோட ரூம் மேட் தானே” என்று கேட்க ஆரம்பித்து விட்டனர்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.