(Reading time: 9 - 17 minutes)

அவனது மனதை புரிந்து கொண்டவளாக இவளும் மௌனமாக அவன் எடுத்த முடிவிற்கு சம்மதம் தெரிவித்தாள்.இருவரும் சட்டப்படி செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்துவிட்டு மீனாவை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.வரும் வழியில் பட்டம்மா இதற்கு சம்மதம் சொல்வாளா? மாட்டாளா? என இருவரும் குழம்பிக் கொண்டே வந்தனர்.

வீட்டிற்க்கு முன் வண்டி நின்றதும் எல்லாரும் கீழே இறங்கினர்.இறங்கியவுடன் கையில் ஆரத்தி தட்டும் முகத்தில் புன்னகையும் ஒருசேர வேகமாக இவர்களை நோக்கி வந்தாள் பட்டம்மா.சங்கவியும்,சங்கரும் ஒன்றும் புரியாமல் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.அந்தப் பிஞ்சுக் குழந்தை இவளைப் பார்த்தவுடன் பாட்டி என ஓடிப் போய் கட்டி அணைத்துக் கொண்டது.பட்டம்மா அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொஞ்ச ஆரம்பித்தாள்.

கண்ணில் பாசத்துடன் மீனா தன் மழலை மொழியில் “ஏன் பாட்டி இன்னைக்கு என்னைப் பார்க்க நீங்கள் வரவே இல்லை” என பட்டம்மாவிடம் கேட்டாள்.பட்டம்மா தன் முத்தத்தால் மீனாவிற்கு பதில் கூறி விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.இவளின் செயலின் அர்த்தம் புரியாமல் சங்கரும் பொன்னம்பலமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.சங்கவிக்கும் ஒன்றும் புரியவில்லை.பொன்னம்பலத்தையும் சங்கரையும் வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு சங்கவி,பட்டம்மாவின் திடீர் மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டறிய வந்தாள்.பட்டம்மா மீனாவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

”மீனா கண்ணு நீ உள்ளே போய் விளையாடு.பாட்டி, அம்மாவிடம் பேசி விட்டு உன்னோடு விளையாட வருகிறேன் எனக் கூறிவிட்டு சங்கவியின் பக்கம் திரும்பினாள்.சொல்லுமா சங்கவி.அத்தை ஏன் இப்படி மாறிட்டாங்கன்னு தானே யோசிக்கிறாய்.நான் அப்பவும் மாறல இப்பவும் மாறல.எப்பவும் ஒரேபோல தான் இருக்கிறேன்.”

“அத்தை நீங்க என்ன சொல்றீங்கனே எனக்கு புரியல”என குழப்பத்துடன் பட்டம்மாவின் பதிலுக்காக காத்திருந்தாள்.

பட்டம்மா சிரித்துக் கொண்டே சங்கவியை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு அவளைப் பார்த்து “சங்கவிமா நீ எனக்கு மகளைப் போன்றவள்.யாராவது பேரன் பேத்திக்காக மகளிடம் சண்டை போடுவாங்களா.இரண்டு பேரும் எனக்கு ஒன்றுதான்.நீ என்னை அவ்வளவுதான் புரிந்து வைத்திருக்கிறாய்.ஒரு ஆறு மாதத்திற்கு முன் நீ சங்கரிடம் குழந்தைகள் காப்பகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாய் அல்லவா? அன்று எதார்த்தமாக அது என் காதில் விழுந்தது.அன்று சங்கர் எவ்வளவு கோபத்துடன் கத்தினான் என்று நான் பார்த்தேன்.அன்று நீ அவனை சமாதானப் படுத்த முடியாமல் நின்றதையும் நான் பார்த்தேன்.அன்றுதான் எனக்கு இந்த யோசனை தோன்றியது.அவனை அவ்வளவு கோபமாக அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை.அவனை சம்மதிக்க வைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை சங்கவி.நான் இவ்வளவு கோபத்துடன் உன்னிடம் நடந்து கொண்டால்தான் அவன் இதற்கு ஒத்துக் கொள்வான் என எனக்குத் தெரியும்.ஆனால் இதற்கு ஆறு மாதம் ஆகும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை.இவ்வளவு நாட்கள் நான் உன்னிடம் கடினமாக நடந்து கொண்டதற்கு என்னை மன்னிப்பாயா சங்கவி” என தன் மருமகளிடம் அவள் கேட்ட பொழுது தன் கண்களில் வரும் கண்ணீரை சங்கவியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பட்டம்மாவின் காலில் விழுந்து “அத்தை நீங்கள் எனக்கு செய்தது எவ்வளாவு பெரிய உதவி தெரியுமா? அந்த நேரத்தில் உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டதற்கு நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும்” எனக் கூறிய மருமகளைத் தோளைப் பிடித்துத் தூக்கி

“அம்மாவின் காலில் மகள் விழக்கூடாது” எனக் கூறி அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள் பட்டம்மா.

பாட்டி எனக் கத்திக் கொண்டே பட்டம்மாவை விளையாட அழைத்த மீனாவின் குரல் கேட்டதும், சங்கவி

“ஆமாம் அத்தை.வந்ததில் இருந்து மீனா உங்களை பாட்டி என அழைக்கிறாளே.நீங்கள் பழகும் விதத்தைப் பார்த்தால் உங்களுக்கு அவளை முன்னமே தெரியும் போல் உள்ளதே” எனக் கேட்டாள்.

அதற்கு பலமாக சிரித்த பட்டம்மா “அம்மாவை விட பாட்டியுடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள் என பொறாமையா சங்கவி உனக்கு” என செல்லமாகக் கேட்டுவிட்டு அவளின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தாள்.

”உன் தோழி சத்யாவை அன்று ஒரு நாள் நான் சந்தித்தேன்.அவளது கார் பழுதானதால் நமது காரில் வந்தாள்.எங்கு சென்று வருகிறாய் எனக் கேட்ட பொழுது அவள் அந்த காப்பகத்தைப் பற்றிக் கூறினாள்.அதிலிருந்து வாரம் ஒருமுறை நான் அங்கு சென்று வருவேன்.அங்கு இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நான் பாட்டி தான்.அங்கு சென்றால் எனக்கு நேரம் போவதே தெரியாது.மிகவும் சந்தோஷமாக இருக்கும்.அங்கிருந்து வெளியே வரும்பொழுது நான் கனத்த இதயத்துடன் தான் வருவேன்.அங்குதான் நான் மீனா குட்டியை சந்தித்தேன்.நீங்கள் தத்தெடுக்கும் பொழுது இந்த குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என கூறி விடலாமா என எண்ணினேன்.ஆனால் நான் அதைப் பற்றி பேசினால் என் திட்டம் தவிடுபொடியாகி விடும் என எண்ணி அமைதியாக இருந்து விட்டேன்.ஆனால் என் மனதை புரிந்து கொண்டாற் போல் நீங்கள் மீனு குட்டியையே வீட்டிற்கு அழைத்து வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி”. என கூறிய அத்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கவி. இப்படிப்பட்டவரையா தவறாக எண்ணி விட்டோம் என நினைத்து வருந்தினாள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.