(Reading time: 9 - 17 minutes)

சிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா

maamiyar Marumagal

ப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் பட்டம்மா. “பக்கத்து வீட்டு புனிதாவோட பொண்ணுக்கு வளைகாப்பாம்,உங்க வீட்டில் எப்போ விசேஷம்னு கேட்கிறாள்” என தன் கணவன் பொன்னம்பலத்திடம் சத்தமாகக் கூறிக்கொண்டிருந்தாள் பட்டு.

”கொஞ்சம் அமைதியா இருக்கியா? எப்ப பார்த்தாலும் இதே புலம்பல் தானா உனக்கு? மருமகள் காதில் விழுகப்போகுது.அவ மனசு சங்கடப்படுமேனு நெனச்சுப் பார்த்தாயா?.நீயும் ஒரு பெண்தானே.தினமும் அவளை இப்படி திட்டிக்கிட்டே இருக்க” என தன் மருமகளுக்கு சப்போர்ட் செய்தார் பொன்னம்பலம்.

“நான் என்ன இல்லாததையும் பொல்லாததையுமா சொல்கிறேன். நிஜத்தைதானே சொல்கிறேன்.எனக்கும் ஆசை இருக்காதா? கடைசி காலத்தில பேரப்பிள்ளைங்க கூட விளையாடணும்,அவங்களைத் தூக்கிக் கொஞ்சணும்னு” என கண் கலங்க ஆரம்பித்தாள் பட்டு.

இதற்கு மேல் தன்னால் எதுவும் பேச முடியாது என வாயை மூடிக் கொண்டார் பொன்னம்பலம்.இதை எல்லாம் காதில் வாங்கியும் வாங்காதது போல் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கவி.

முதலில் இதை எல்லாம் கேட்டபொழுது தன் அம்மாவைக் கடிந்து கொள்வான் சங்கர்.ஆனால் இப்பொழுது அவனால் எதுவும் சொல்ல இயலவில்லை.என்னதான் சமாதானம் சொன்னாலும் தன் அம்மா பேரனையோ பேத்தியையோ பார்க்கும் வரையில் சமாதானம் ஆக மாட்டாள் என அவனுக்குத் தெரியும்.அதனால் தன் மனைவிக்கு தினமும் ஆறுதல் கூறி வந்தான்.அவனால் அது மட்டுமே செய்ய முடிந்தது.

சங்கவிக்கு இது ஒன்றும் புதிது அல்ல.தான் சங்கரை கல்யாணம் பண்ணி இரண்டு வருடம் வரை தன் தாய் வீட்டில் இருந்தது போல்தான் இருந்தது அவளுக்கு.ஆனால் அதற்குப் பிறகு நிலைமை தலை கீழாய் மாறியது.பட்டம்மாவிற்கு ஒரே ஒரு மகன் சங்கர்.அவனுக்குப் பிறக்கும் குழந்தையைக் கொஞ்சி விளையாட வேண்டும் என நீண்ட காலமாக கனவு கண்டு கொண்டிருந்தாள்.ஆனால் ஒரு வருடம் கடந்தும் அதற்கான அறிகுறி இல்லாமல் போகவே,அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கொடுமைக்கார மாமியார் என்றால் கூட பரவாயில்லை.பட்டம்மாவின் சுபாவம் இது இல்லை.அவள் மிகவும் சாந்தமானவள்.தன் மருமகளை, மகள் போல் பார்த்துக் கொள்வாள்.ஆனால் அவள் இப்படி மாறுவாள் என யாரும் நினைத்திருக்கவில்லை.

அதுவும் கடந்த ஆறு மாதமாகத்தான் இப்படி நடந்து கொள்கிறாள் பட்டம்மா.அவளுக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை.சங்கவிக்கு கஷ்டமாக இருந்தது.தன்னை மகள் போல் பார்த்துக் கொண்ட மாமியார் இப்படி மாறியது யாருக்கு வலிக்கிறதோ இல்லையோ.இவளுக்கு மிகவும் வலித்தது.இன்று எப்படியும் சங்கரிடம் பேசி ஒரு முடிவு எடுத்து விட வேண்டும் என தீர்மானமாய் இருந்தாள் சங்கவி.

இரவு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு படுப்பதற்கு தயாரானாள் சங்கவி.இன்னும் தன் லேப்டாப்பை மூடாமல் வேலை செய்து கொண்டிருந்தான் சங்கர்.”சங்கவி நீ தூங்கு எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கிறது.நான் பார்த்து விட்டு இன்னும் பத்து நிமிடத்தில் லைட்டை ஆப் செய்து விட்டு தூங்கிவிடுகிறேன்”

“இல்லைங்க பத்து நிமிடம் தானே.நான் உங்களிடம் சிறிது பேச வேண்டும்.வேலைகளை முடித்து விட்டு வாருங்கள்” என கூறிவிட்டு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தாள் சங்கவி.

சங்கர் தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வந்தான்.”இப்பொழுது சொல் சங்கவி.என்ன பேச வேண்டும் என்னிடம்”,

“ஏற்கனவே பேசியதுதாங்க.நானும் இந்த ஆறு மாசமாகக் கூறிக் கொண்டுதான் இருக்கிறேன்.அத்தையும் பேரப் பிள்ளையைப் பார்த்தே ஆக வேண்டும் என தினமும் கூறிக் கொண்டே இருக்கிறார்.என் தோழி சத்யா தெரியுமில்லையா உங்களுக்கு. அவள் ஒருநாள் என்னை அந்த குழந்தைகள் காப்பகத்திற்குக் கூட்டிச் சென்றாள், அங்கு அனைத்துக் குழந்தைகளும் அற்புதமாய் இருந்தனர்.அவர்களைப் பிரிந்து வர எனக்கு மனமே வரவில்லை.ஒரே ஒரு முறை எனக்காக அங்கு வந்து பாருங்களேன்.அந்த குழந்தைகளைப் பார்த்தால் உங்களுக்கே எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.தயவு செய்து நாளை என்னுடன் வாருங்கள்.நாம் அந்த காப்பகத்திற்குப் போய் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்வோம்.அந்த குழந்தையைப் பார்த்தால் அத்தையும் சமாதானம் ஆகி விடுவார். நாமும் சந்தோசமாக இருக்கலாம்.அந்த குழந்தைக்கும் பெற்றோர் கிடைக்கும்.பிளீஸ்ங்க” என அவள் கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்க இருவரும் பதறிக் கொண்டு சென்றார்கள்.

அங்கே பட்டம்மா நின்று எப்பவும் போல் பேரப் பிள்ளைகள் வேண்டும் எனப் புராணம் பாடிக் கொண்டிருந்தாள்.அதைக் கேட்டதும் சங்கவியைப் பார்த்து அவள் எடுத்த முடிவுக்கு ஒத்துக் கொண்டது போல் புன்னகை புரிந்தான் சங்கர்.அதை புரிந்துக் கொண்டவளாய், அவனைப் பார்த்து இவளும் புன்னகை பூத்தாள்.

டுத்த நாள் காலையில் முதல் வேலையாக இருவரும் காப்பகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.அங்கு அவர்களை வரவேற்பது போல் நின்று கொண்டிருந்தாள் மீனா.அவளது சிரிப்பைப் பார்த்த மாத்திரத்தில் அவளைத்தான் கூட்டிச் செல்வது என தீர்க்கமாக முடிவு எடுத்தான் சங்கர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.