(Reading time: 7 - 14 minutes)

 " பீட்டர்! உன்னை மற்ற பிள்ளைகள் கிண்டல் செய்வதை சகித்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறாய். என் நிலமை, அதைவிட கேவலம்!"

 " ஏம்மா! என்ன ஆச்சு?"

 " உனக்கு புரியாதுடா, பீட்டர்! ஆனா, என் மனசு வெடிச்சிடும்போல இருக்கு, அதனால உனக்கு புரிகிறதோ இல்லையோ, சொல்றேன்!

 நான் தனியாக இருக்கும் சூழ்நிலைகளில் எல்லாம், என்கூட பணியாற்றுகிற படித்த ஆசிரியர்களே, என்னை நெருங்கி, " தாமரை! உனக்கு பொருத்தமான பேரு, தாமரை! அவ்வளவு அழகாயிருக்கே, அப்படியே கட்டியணைச்சு முத்தமிடணும்போல இருக்கு" என்கிறார்கள்!

 " செருப்பால் அடிக்கவேண்டியதுதானே!"

 " பீட்டர்! அப்படி எடுத்தேன், கவிழ்த்தேன்னு நம்மைப் போல உள்ளவங்க எதுவும் செய்யமுடியாதுடா! ஏன்னா, நாம சில பேர் தயவிலே வாழறோம். நமக்கு அவங்கதான் பாதுகாப்பு. அவங்க இல்லேன்னா, நம்மை கண்ட தெருநாய்கள் எல்லாம் நக்கிப் பார்க்கும். மிரட்டும். எப்பவோ நடந்தமாதிரி, இப்பவும் கூட்டு சேர்ந்து சீரழிப்பாங்க! இதுதான் யதார்த்தம்! 

 இப்ப நமக்கு பாதுகாப்பு ஒரே மனிதர், மடத் தலைவர்தான்! என்னுடன் பணியாற்றுபவர்களும் அவர் தயவில் முன்னேறியவர்கள் ஆதலால், அவருக்குப் பயந்து, என்னை முகர்ந்து பார்ப்பதோடு விட்டு வைத்திருக்கிறார்கள். இல்லேன்னா, இந்நேரம் என்னை ஜூஸா பிழிந்து குடித்திருப்பார்கள்..........."

 " அப்படீன்னா, நாம நிம்மதியா வாழவே முடியாதாம்மா?"

 " பீட்டர்! நமக்கும் ஏதாவது ஒரு வழி பிறக்கும், பொறுமையாயிரு!"

 ஆனால், அவளுடைய பொறுமையை எல்லைமீறி சோதித்தனர், உடன் பணிசெய்தோர்!

வெறும் காம உரையாடலில் இருந்து, அடுத்த கட்டமாக, உடலின் மர்மப் பகுதிகளை தொடுகிற அளவுக்கு, போயினர்.

 அவர்களுக்கு அந்த தைரியம்ஏற்படக் காரணம் என்ன? தாயும் மகனும் யோசித்தனர்.

 "அம்மா! நமக்கு துணையாக ஒரு ஆண் இல்லை என்கிற துணிவுதான். நாம், அவர்கள்மீது போலீஸில் புகார் கொடுக்கமாட்டோம் என்கிற நம்பிக்கையும்கூட! 

 இப்போதெல்லாம் எந்தப் பெண்ணுமே இந்தமாதிரி ஆபத்துகளுக்கு காவல்துறையின் உதவியை நாடுவதில்லை. ஏனெனில், புகார் தரவந்த பெண்ணை, ருசிபார்த்த பின்னர்தான், புகாரை பார்க்கிறார்களாம்!

 அம்மா! நாம் ஏன் மடத்தின் தலைவரிடம் யோசனை கேட்கக்கூடாது?"

 நல்ல யோசனை என தாயும் ஆமோதித்ததால், இருவரும் அவர்முன் நின்றனர்.

 எடுத்த எடுப்பிலேயே, அவர்,

" நீங்கள் என்னிடம் வருவீர்கள் என எனக்கு தெரியும். எதற்கு வந்திருக்கிறீர்கள் என்பதும் தெரியும். எனக்கும் இங்கு நடக்கிற விஷயங்கள் காதில் விழுகின்றன. உங்களைவிட, அதிகம் பயந்திருப்பவன் நான். ஏனெனில், இப்போதெல்லாம், பெண்களை தீண்டும் விஷயத்தில், எந்த இடத்திலும் பாதுகாப்பில்லை! ஆம், எந்தச் சமயத்தை சேர்ந்த மடங்களாயிருந்தாலும் சரி, இதற்கு விதிவிலக்கல்ல! அதனால், தனிப்பட்ட முறையில், நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். 

 தாமரை! எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. எந்த நேரமும் என்னை ஏசுநாதர் அழைத்துக்கொள்ளலாம். 

 அதற்குள், உனக்கொரு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். 

 உனக்கு இப்போது வயது முப்பதுதானே? நீ ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?"

 " ஐயா! ஐவரால் சீரழிக்கப்பட்ட என்னை யார் ஏற்றுக்கொள்வார்கள்?"

 " அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டேன். என்னிடம் அடிக்கடி ஒரு பகுத்தறிவுவாதி வந்து வாதம் செய்வான். நல்ல நண்பன். ஒழுக்கமானவன். அவனுக்கு உன் வயதுதான் இருக்கும். அவனுக்கு சாதி, மதம், கடவுள் எதிலும் நம்பிக்கை கிடையாது. அவனிடம் உன்னைப்பற்றி முழு விவரங்களை சொல்லி, உன்னை ஏற்கச் சம்மதமா என கேட்டேன். 

 அவன் சொன்ன பதில், என்ன தெரியுமா? " இது என் கடமை! அவளை நான் திருமணம் செய்துகொள்ளாமலேயே, பாதுகாக்க தயார்! ஆனால், அதை இந்த சமூகத்திலுள்ள நச்சுப் பாம்புகள் கயிறு திரித்து கதை கட்டி அவள் ஒழுக்கத்துக்கு களங்கம் கற்பித்துவிடும். 

 அதனால், சட்டப்படி அவளை பதிவுத் திருமணம் செய்துகொண்டு அவளையும் அவள்மகனையும் இனி காப்பாற்றுகிற பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

 நீங்கள் அவர்கள் இருவருடைய சம்மதம் கேட்டு சொல்லுங்கள்!"

 தாமரை! சத்தியமாகச் சொல்கிறேன். ஒழுக்கம் இல்லாதவர்கள் ஆத்திகர்களாக வேஷம் போடுகிறார்கள். இவனைப்போல, பகுத்தறிவுவாதிகள் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், மனிதாபிமானமும் ஒழுக்கமும் உடையவர்களாக உள்ளனர். உங்கள் இருவருக்கும் சம்மதம்தானே?"

 தாமரையும் பீட்டரும்இறைவன் தங்களை காப்பதற்காக ஒரு பகுத்தறிவுவாதி உருவத்தில் வந்திருப்பதாக மனமார நம்பினர்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.