(Reading time: 8 - 15 minutes)

 " ஜூலி வருவதற்குமுன், அதாவது ஏழு ஆண்டுகளுக்குமுன், இந்தக் குடும்பம் எப்படி இருந்ததோ, அதே நிலையில்தான் இன்று உள்ளது. இடையில் ஏழு ஆண்டுகள் நீ அனுபவித்த இன்பம், இறைவன் உனக்களித்த பரிசு! அந்தப் பரிசுக்கு ஆயுள், அவ்வளவுதான்! ஆனால், உன்னைப் பெற்றவர்களும், நீ பெற்றவர்களும் இறைவன் தந்த நெடுங்காலப் பரிசு! அது இன்னமும் உன்வசம்தான் உள்ளது! ஏழு ஆண்டுகளுக்கு முன்புவரை, அந்தப் பரிசுதானே உனக்கு வாழ்வில் எல்லாமாக இருந்தது.எவருமே உலகில் நிரந்தரமில்லை. ஜூலியுடன் ஏழு வருஷம் என்றால், எங்களுடன் எழுபது, எண்பது வருஷம்! அதனால், சென்றதை நினைத்து துக்கப்படுவதை விடுத்து, ஜூலி உன்னுடன் விளையாடியதையும், உன்மீது பாசத்தை கொட்டியதையும், உனக்காக சாப்பிடாமல் இருந்த தோழமையையும் நினைத்து நினைத்து சந்தோஷப்படு! ஜூலி இன்னமும் வாழ்வதாகவே கற்பனையில் நனைத்து மனதுக்குள் அதனுடன் மகிழ்ந்திரு! கம் ஆன்! ஒரு 'வாக்' போய் வரலாம், வா!"

 "மோகன்! அப்பா காலையிலிருந்து ஒண்ணுமே சாப்பிடலே, நான் சாப்பாடு ரெடி பண்றேன், அதுவரையிலும், ரெண்டுபேரும் கிரிக்கெட் ப்ளேயராச்சே, டி.வி.யிலே ஏதோ டி-20 மேட்ச் நடக்குதாமே, அதை பாருங்க!"

 தந்தையும் மகனும் டி.வி.க்கு எதிரே அமர்ந்தனர்.

 சென்னை சூப்பர் கிங்ஸ், கல்கத்தா டீமுக்கு எதிராக பேட்டிங்! கடைசி ஓவர்! ஆறே பந்துகள்! வெற்றி பெற தேவையான ரன்களோ, பதினைந்து!

 அப்போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களை கேமிரா படம் பிடித்துக் காட்டியது.

 இளைஞர்கள், மாணவர்கள், எல்லோரும், கண்களை மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். அதைப்பார்த்து, அவர் சிரித்தார்!

 " ஏம்ப்பா சிரிக்கிறே?"

 " அதில்லேடா! இவர்கள் பரீட்சையில் தேறுவதற்கோ, நல்ல வேலை கிடைப்பதற்கோ கூட இப்படி பிரார்த்திக்க மாட்டார்கள். அதிலும், இந்த மேட்சில், சென்னை தோற்றாலும்கூட பாதிப்பில்லை. ஏற்கெனவே, அது மற்ற எல்லா டீம்களையும்விட நான்கு பாயிண்ட் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறது............."

 " அப்பா! கோவிச்சுக்காதே! அவர்களாவது, வயதில் சிறியவர்கள். ஏதோ உணர்ச்சிவசத்திலே செய்கிறார்கள். ஆனால், அதே தவறை தானே நீயும் செய்தாய்......."

 " என்னடா சொல்றே?"

 " உனக்கு நன்றாகத் தெரியும். மனிதர்களைப்போல, எண்பது, தொண்ணூறு ஆண்டுகள் வாழாது, நாய்கள், என்பது! ஜூலி நம்முடன் இணைந்தபோதிலிருந்தே உனக்கு அதனுடைய ஆயுள் அதிக பட்சம் பத்து ஆண்டுகள்தான் என்று! ஆனாலும், உன்னால் அதன் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!

 எல்லோருக்கும் தெரியும், இருவருக்கிடையே போட்டி வந்தால், யாரோ ஒருவர்தான் வெற்றி பெறமுடியும், மற்றவர் தோல்வியை ஏற்கத்தான் வேண்டும். இது தவிர்க்கமுடியாத உண்மை! அதைப்போல, நம் வாழ்க்கையிலும் சில நிகழ்ச்சிகள் தவிர்க்கமுடியாதவை; அவற்றில், பிறப்பும்-இறப்பும் ஒன்று! ஆனால், நாம் ஒரு குழந்தை பிறந்தால் ஓகோ என சிரித்து மகிழ்வதும், அதே போல, இறந்தால், ஓவென ஒப்பாரி வைப்பதும், சிந்திக்கத் தெரிந்தவர்கள் செய்கிற செயலாகவா தெரிகிறது?"

 " மோகன்! மனிதன் ஒரு உணர்ச்சிக் குவியல்! அந்த உணர்ச்சிகளே இல்லாமல் வெறும் அறிவு மட்டுமே இயங்கும்போது, அவன் யோகியாகவோ, ஞானியாகவோ வாழ்கிறான். அவர்கள் விதிவிலக்காக, கோடியிலே ஒருவராக, இருப்பார்கள். நான் ஒரு சராசரி மனிதன்டா!"

 " உண்மைதான். உணர்ச்சியற்ற மரக்கட்டையா வாழறது, கஷ்டம்தான்! அப்பா! ஒரு கிரிக்கெட் மேட்சிலே, உலகப் புகழ் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் பந்து வீசறான், அதை எதிர்கொண்ட சாதாரண பேட்ஸ்மன், அந்த ஓவரில் போட்ட ஆறுபந்தையும் சிக்ஸர் அடிச்சான். மறுநாள் உலக முழுவதும் அந்த சாதாரண பேட்ஸ்மனை வானளாவ புகழ்ந்தது, பயமில்லாதவன்னு பாராட்டியது. ஆனா அந்த பேட்ஸ்மன் சொன்னான், " எனக்கு அந்த ஸ்பின்னர் போடற பந்துகளை ஆட பயம், யோசித்துப் பார்த்தேன், அவன் போடற பந்து தரையிலே விழுந்தபிறகு தானே ஸ்பின் ஆகுது, பந்து தரையை தொடறதுக்கு முன்பே, அதை அடித்துவிட்டால், அது எங்கே வேண்டுமானாலும் போய் விழட்டும் என்று கண்ணை மூடிண்டு, பலமா அடிச்சேன், அதிர்ஷ்டவசமா, எல்லாம் சிக்ஸராயிடுத்து, அதுக்கு காரணம் அந்த ஸ்பின்னுக்கு நான் பயந்ததுதான். 

 இதை ஏன் சொல்றேன்னா, நாமும் துவக்கத்திலிருந்தே, பாசத்துக்கு இடம் கொடுக்காமல், அன்பு மட்டும் செலுத்தணும். பாசவலையிலே சிக்காம இருக்க, எல்லோரிடத்திலும் சம அளவு அன்பு காட்டணும்! அன்பு, பாசம் என்கிற சுழலா மாற அனுமதிக்கக்கூடாது!

 ஜூலி உன்னிடமும் நீ அதனிடமும் எங்களைப் போல, அன்பாக மட்டும் இருந்திருந்தால், இன்னிக்கி உனக்கு இந்த அளவு அதிர்ச்சியும் இழப்பின் தாக்கமும் இருந்திருக்காது!

 தந்தை மகனை அணைத்து மகிழ்ந்தார். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.