(Reading time: 8 - 15 minutes)

ஒருவர் ஓடிப்போய் அந்த வலை பின்னுகிறவனை கையோடு அழைத்துவந்து, முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வேலையை உடனே ஆரம்பிக்கச்செய்தார்!

 அன்று மாலைக்குள் வேலை முடிந்து எல்லோர் வீட்டிலும் இண்டு இடுக்கு விடாமல் சுற்றிலும் வலை பின்னப்பட்டு, வீடு எதிரி புகமுடியாத கோட்டையாக மாறியது!

 மறுநாள் காலை, ஆவின் பால் பேக்கட்டுகளை, பால்காரன், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இருந்த டப்பாக்களில் நிரப்பிவிட்டு அடுத்த தெருவுக்கு போய்விட்டான்.

 தூங்கி எழுந்து, கதவைத் திறந்து பார்த்தால், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பாலாறு ஓடியது! பால் பேக்கட்டுகளை கடித்துக் குதறி அரைகுறையாக பாலை குடித்துவிட்டு, குரங்குகள் மறைந்துவிட்டன!

 மீண்டும் குடியிருப்போர் கூட்டம் துவங்கி, அவசரத் தீர்மானமாக, உடனடியாக வேட்டு வெடிக்க ஏற்பாடு செய்வதென முடிவு எடுத்தனர்.

 நால்வர் குழு ஒன்று, ஊரெல்லாம் தேடி வேட்டு வைப்பவனை கண்டுபிடித்தனர்.

 " ஐயா! இப்ப நான் உடனே வந்து வெடி வெடிச்சிட்டு காசு வாங்கிண்டு போயிடுவேன், ஆனா இப்ப அங்கே இந்த நேரத்திலே குரங்குகள் இருக்காது, அதுகளுக்கு தெரியும், காலையிலேதான் வீட்டு வாசல்லே பால் பேக்கட் கிடக்கும்னு! அதனாலே, நாளைக்கு சூரியோதயத்தின்போது, வந்துடறேன், முன்பகுதியிலே இரண்டு வெடி, பின்பகுதியிலே இரண்டு வெடி வைத்து பார்ப்போம், குரங்குகள் உங்க கண்முன்பு தலைதெறிக்க ஓடும். சரியா?" என்று முன்பணம் வாங்கிக்கொண்டு குழுவினரை அனுப்பிவிட்டான்.

 நால்வர் குழு, வெற்றிப் பெருமித்த்துடன் 'பூங்காடு' கட்டிடத்துக்குள் நுழைந்தபோது, சரசரவென சத்தம் கேட்டது. தரையில் குனிந்து பார்த்தனர்.

 பாம்பு வளைந்து வளைந்து ஓடிக்கொண்டிருந்தது!

 அடுத்த பத்தாவது நிமிடம், சங்கத்தின் பொதுக்குழு கூடியது.

 " வீட்டுக்குள்ளே, எல்லாக் கதவுகள், ஜன்னல்கள், வராந்தாக்கள், பால்கனிகள், அடைத்துவிட்டு, கைதிகளாக இருக்கிற சிறைக்காஒண்ணரை கோடி ரூபாய் செலவு செய்தோம்? இறைவா! எங்களை ஏன் இப்படியெல்லாம் சோதிக்கிறாய்?"

 ஒட்டுமொத்தமாக, எல்லோருடைய நெஞ்சிலும் இந்த அபயக்குரல் எழுந்தவுடனே, அவர்கள் எதிரே ஒரு வயதான குரங்கு பிரசன்னமாகியது.

 " நான் பேசலாமா?"

 எல்லோரும் வாய் பிளந்து நின்றனர். குரங்கு பேசுமா?

 " என் ஐயன் ராமசந்திரமூர்த்தி என்னை பேசவைத்திருக்கான். நீங்க டி.வி.யிலே, காலி குடத்தோட கும்பல் கும்பலா மக்கள் தெருவிலே மறியல் செய்யறதை பார்த்திருப்பீங்க, அவங்களோட குடிநீர் இல்லாமைதான் எங்க கூட்டத்தையும் வாட்டுது, எங்களுக்கு பால் தேவையில்லே, குடிநீரும், தேங்காயும் இருந்தால் போதும். அதுவும் இந்தக் கட்டிடத்துக்குப் பக்கத்திலே இருக்கிற வெட்ட வெளியிலே ஒரு தொட்டி கட்டி அதிலே தண்ணீர் நிரப்பிடுங்க, தினமும், காலையிலே! நாங்க உங்களுக்கு எந்த தொந்தரவும் தரமாட்டோம். 

 கோவிச்சிக்காம கேளுங்க! இந்த இடம் காலம் காலமா நாங்க, வாயில்லா ஜீவனுங்க நிம்மதியா கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்துவந்த இடம்! எங்களை விரட்டிட்டு எங்க இடத்தையும் சுத்தமா அழிச்சிட்டு நீங்க வீடு கட்டிக்கிட்டீங்க. இதுதான் உண்மை! ஆனா, நீங்க எங்க கூட்டத்தை, விரோதியா, உங்க இடத்தை பங்கு போட்டுக்கிற விரோதியா பார்க்கிறீங்க, நியாயமா?"

 பேசி முடித்துவிட்டு, அது நகர்ந்தபோது, பாம்பு காட்சி அளித்தது.

 " என் அப்பன் ஆதிசேஷன் என்னை பேசவைச்சிருக்கான். நாங்க சுதந்திரமா, பல யுகங்களா, அலைந்து, திரிந்து, சந்தோஷமா, கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்த இடம். எங்களை விரட்டிட்டு, எங்க இடத்தையும் சுத்தமா அழிச்சிட்டு, நீங்க வீடு கட்டிக்கிட்டீங்க! வெளியிலே எங்களுக்கு குடிநீரும் கிடைக்கலே, சாப்பிடவும் எதுவும் இல்லை, நாங்க உங்க யாருக்கும் ஒரு தீங்கும் செய்யமாட்டோம். மனித நடமாட்டம் இங்கே இருக்கிறதனாலே, ஏதோ கொஞ்சம் இங்கே தாகத்துக்கு நீரோ, பாலோ கிடைக்குமோங்கிற நப்பாசையிலே வந்து வந்து தேடறோம், சின்ன சின்ன பூச்சி, புழுவை சாப்பிட்டு பசியாறுகிறோம். உங்களை கடித்தால், எங்களுக்கு என்ன கிடைக்கும்? உங்கள் ரத்தத்தை நாங்கள் குடித்து தாகத்தை தீர்த்துக்கொள்ள முடியுமா? நம்புங்கள்! உங்க பெரியவங்க தப்பா, 'பாம்புக்கு பால் வார்க்காதே'ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்க! அதை நீங்களும் நம்பி எங்களை அடித்து விரட்டி அடிக்கிறீங்க! ஆனா எங்களை தோளிலே தூக்கிவைத்து கொண்டாடுகிற சிவபெருமானை கையெடுத்து கும்பிடறீங்க, போகட்டும், நாங்க சத்தியம் செய்கிறோம், உங்களுக்கு தீங்கு எதுவும் செய்யமாட்டோம், நம்பாம எங்களை பிடிக்க பிடாரனை கூப்பிட்டாலும் தடியால் அடித்து கொன்றாலும், நாங்க வாயில்லா ஜீவனுங்க, என்ன செய்யமுடியும்?"

 சரசரவென நகர்ந்து கண்சிமிட்டுகிற நேரத்தில் மறைந்தது!

 உடனடியாக, பக்கத்து வெற்றிடத்தில் பெரிய தொட்டி கட்டவும் அதில் தினமும் குடிநீர் நிரப்பவும் முடிவாகியது! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.