(Reading time: 8 - 15 minutes)

 " ஏன், நீங்க மூன்றுபேர் மட்டும் வந்திருக்கீங்க, நான்காவது நபர் வரவில்லையா?"

 மூவரும் அதிர்ச்சியில் சிலையாயினர்.

 " பரவாயில்லை; ஆனா, நீங்க அவனைப்பற்றி கவலைப்பட்டு என்னிடம் பரிகாரம் கேட்க வந்திருக்கீங்க! இப்படி சில குடும்பங்களிலே அமைவதுண்டு; கர்மபலன்!"

 மூவரும் துறவியின் காலில் விழுந்து, " நீங்கதான் நல்லது நடக்க ஆசிர்வதிக்கணும்........" என கெஞ்சினர்.

 " நிச்சயமா! ஆனா, நான் சொல்றதை முழுக்க நம்பி ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பீங்களா? ஏன் கேட்கறேன்னா, அது கொஞ்சம் கஷ்டமான காரியம்.."

 " நீங்க கடவுள் மாதிரி, எங்களுக்கு நல்லது நடக்க வழி சொல்றதை ஏற்காமலிருப்போமா? சொல்லுங்க!"

 " அந்த நாலாவது நபர், குடும்பத்துடன் கடைசி வரையிலும் ஒட்டாம, உங்களுக்கு நிறைய தொல்லை கொடுப்பான், உங்களை நிம்மதியா வாழமாட்டான். அவனுக்காக, மூத்த பிள்ளையும் தனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையாம கஷ்டப்படணுமா? நியாயமா?

 அதனாலே, சின்னவன் கேட்கறதை, பணமோ, சொத்தோ, எதுவானாலும் கொடுத்து அவனை விரட்டிடுங்க, முதல்லே! 

 அவன் அத்தனையும் ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, மீண்டும் பணத்துக்காக வந்து நிற்பான். அப்போது நீங்க மன உறுதியோட அவனை வீட்டுக்குள்ளேயே சேர்க்காமல், அவனை போலீஸிலே ஒப்படைச்சிடுங்க! கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அவன் ஒருத்தனுக்கு இரக்கப்பட்டீங்கன்னா, குடும்பமே வீதிக்கு வந்துவிடும். புரிந்ததா?

 தவிர, இந்த மகனுக்கு உடனே கல்யாணத்தை செய்துவையுங்க! அவனுக்கு பிறக்கிற பேரன், பேத்தியுடன் சந்தோஷமா இருங்க! கடவுள் உங்களை காப்பாற்றுவார்!"

 வேறுவழி தெரியாமல், துறவி யோசனைப்படி நடப்பதென முடிவு செய்து, சின்னவனுக்கு நிலத்தில் பாதி, பணத்தில் பாதி, வைர வியாபாரம், கொடுத்து விரட்டிவிட்டனர்.

 செல்வம், மரகதத்தை மணந்து மகிழ்வுடன் வாழ்ந்து ரமேஷ், ரமாவைப் பெற்றுக்கொண்டு பெற்றோருடன் வாழ்ந்தான்.

 கொடுத்த பணம், வைர வியாபாரம், நிலம் எல்லாவற்றையும் மது, மாது, சூதாட்டத்தில் முழுவதும் இழந்துவிட்டு, மீண்டும் வந்து நின்றான், சின்னவன்!

 அவன் ஏதோ தீர்மானத்தோடு வந்திருப்பான் போலிருந்தது!

 அப்பாவும் அண்ணனும் கைவிரித்ததும், வழக்கமாக சண்டை போடுபவன், இம்முறை அப்படி செய்யாமல், " சரி, இன்று இரவு இங்கு தங்கிவிட்டு, நாளை போகிறேன்." என்றதும், மகிழ்வுடன் குடும்பம் ஒப்புக்கொண்டு அவனுக்கு விருந்து வைத்து உபசரித்தது!

 நள்ளிரவு! எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சின்னவன் தான் கொண்டுவந்திருந்த கத்தியால், அப்பாவையும் அண்ணனையும் குத்தி கொன்றுவிட்டு, வீட்டிலிருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.

 ஓடுவதற்கு முன்பு, மிரண்டு ஊமையாக நின்றுகொண்டிருந்த தாயிடம் சொன்னான்:

 " இப்ப, குடும்ப சொத்துக்கு ஒரே வாரிசு நான்தான்! அதுக்காகத்தான் அவங்க ரெண்டு பேரையும் தீர்த்துக் கட்டினேன், புரிந்ததா? சரி, நீங்க என்ன பண்ணுங்க, ஒரு மாதம் டைம் தரேன். வேற வீடு பார்த்துக்கொண்டு வெளியேறிடுங்க! ஆம், வெளியேறும்போது, இங்கிருந்து ஒரு தூசியைக்கூட எடுத்துக்கொண்டு போக்க்கூடாது, ஞாபகம் இருக்கட்டும்! எல்லாம் என் சொத்து!"

 மரகதம் போலீஸில் புகார் கொடுத்தாள்.

 போலீஸ் அவனை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!

 வயிறு இருக்கிறதே, நேரத்துக்கு பசிக்கிறதே, அதிலும் சிறுவன், சிறுமியை பட்டினி போடமுடியுமா?

 வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, சின்னவன் மீண்டும் மீண்டும் வந்து தங்களை பயமுறுத்தி பணம் பறிப்பானோ என்ற பயத்தில், ஊரைவிட்டே இடம் பெயர்ந்தனர்.

 மரகதம் தையல் வேலை செய்து கிடைத்த பணத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்திவருகிறாள்!

 " அத்தை! நீங்க சொன்னபிறகுதான் புரிந்தது, நாம் எதை மறக்கக்கூடாது, எவற்றையெல்லாம் நினைக்கவே கூடாது என்று பாகுபடுத்தி பார்க்கவேண்டும். நன்றி மறக்கக்கூடாது..........."

 அத்தை குறுக்கிட்டு,

"அத்துடன் பெரியவங்க சொல்கிற வார்த்தைகளையும் அப்படியே மறக்காம ஏற்று நடக்கணும். அந்த துறவி சொன்னதை பிள்ளைப் பாசத்திலே மறந்து அவனை வீட்டுக்குள் அனுமதித்ததனால்தானே, நடக்கக்கூடாதவை நடந்து இன்று நாம் இப்படி கஷ்டப்படுகிறோம்.........

 ஆனால் கடந்துபோன கசப்பான நிகழ்வுகளை முற்றிலும் மறந்து, நிகழ்காலத்தில் வாழவேண்டும். இதை வருங்கால சந்ததிக்கு சொல்லித்தரவேண்டியது, பெரியவங்க கடமை." 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.