அந்தப்புரத்திலிருந்து மெல்ல நடந்து வந்த மாமன்னர் அசோகர் கம்பீரமான தோற்றத்துடன் அந்தப் பொன் அரியணையில் வந்து அமர்ந்தார். சபையில் இருந்த அதிகாரிகளும் பிறரும் எழுந்து நின்று வணக்கம் செய்து வாழ்த்துக் கூறினார். இளைஞனும் அவர்களோடு சேர்ந்து எழுந்து நின்றான். அவர்களோடு சேர்ந்து அவனும் வாயசைத்து வாழ்த்திசைத்தான்.
எடுப்பும் ஏற்றமும் பொருந்திய மாமன்னரின் உருவத்தையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கண்கள்! அரசர்க்கரசரின் கண்கள்! அவற்றிலேயே அவன் பார்வை பதிந்தது. அந்தக் கண்களுக்கும் அவனுக்கும் முன்பே எங்கோ எப்போதோ பழக்கம் ஏற்பட்டிருந்தது போல் தோன்றியது.
மாமன்னர் அசோகர் வந்து உட்கார்ந்ததும் பார்வையாளர்களின் பெயரை ஓர் அதிகாரி ஒவ்வொன்றாகக் கூற அந்தந்த மனிதர்கள் எழுந்து தாங்கள் வந்த நோக்கங்களை எடுத்துக் கூறினர். மாமன்னர் அவற்றிற்குப் பதில் அளித்தார். எல்லா நடவடிக்கைகளையும் இளைஞன் கவனித்துக் கொண்டிருந்தான். திடீரென்று அதிகாரி இளைஞன் பெயரைக் கூறிஞர். அவன் எழுந்து நின்றான். ஆனால் பேச வாய் வரவில்லை. அவன் சோற்றுக் கவலையால் வாடியபோது, அசோகரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவரைச் சந்தித்துத் தன் குறையைக் கூறினால் அதைத் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்த்தான். ஆனால், இப்போது அவனுக்குச் சோற்றுக் கவலை கிடையாது. வேறு கவலை எதுவும் கிடையாது. எதைக் கூறுவான் அசோகரிடம்? விழித்துக் கொண்டு நின்றான்.
மன்னர் பேசினர்:
"தம்பீ! என்ன கவலை உனக்கு? ஏன் கூறத் தயங்குகிறாய்? கூசாமல் பேசு!" என்றார்.
அந்தக் குரல்கூட அவனுக்குப் பழக்கமான குரல் போலிருந்தது. ஆனால் மன்னர் பெருமானுக்கும் தனக்கும் என்ன பழக்கம்! ஏதோ மனத் தோற்றம் என்றெண்ணிக் கொண்டான்.
“மன்னர் பிரானே! வணக்கம்! எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. தங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் இருந்தது. பார்த்து விட்டேன். இனி எனக்கு எந்தக் குறையும் இல்லை!" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் போகப் புறப்பட்டான்.