(Reading time: 9 - 17 minutes)

இதற்குப் பெயரும் வீரமா!!! – மது

This is entry #26 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

"ங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் தமிழகம் எங்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மணிக்கு 100 கி மீ வேகத்தில்  காற்றுடன், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கின்றது" டி வியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தேன்..

வீட்டில் எல்லோரும் திருப்பதி சென்றிருந்தார்கள். ஒரு நுழைவுத் தேர்வுக்குப் படிக்க வேண்டி இருந்ததால்  நான் மட்டும் போகவில்லை. இடி ,மழை என்றாலே எனக்கு எப்போவும் பயம்.

"அர்ஜுனா அர்ஜுனா  சொல்லு.” சின்ன வயசில் பாட்டி சொல்லிக் கொடுத்ததைக் கல்லூரியில் ஒரு தரம் சொல்ல," யாருடி அது அர்ஜுன்...எங்களுக்குத் தெரியாமலேயா..ம்ம்ம்" என தோழிகள் கேலி செய்ய அப்படி சொல்வதை விட்டு விட்டேன்.

Veeram

இடி மழைக்குப்  பயந்து அம்மாவைக் கட்டி கொள்வேன் எப்போதும்.

"இன்னும் என்ன சின்ன புள்ளையாட்டம் அம்மா முந்தானையில ஒளிஞ்சுகிட்டு...அம்மா முந்தானை தான் கவச குண்டலமா..இடி உன் மேல விழாம காப்பாத்திடுமா" தம்பி சொல்ல ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது..

" நான் ஒன்னும் பயப்படல...அம்மாவைக் கட்டிக்கணும்னு ஆசையா இருந்துச்சு.. போடா!!! இவரு பெரிய வீராதி வீரன்" இப்படியெல்லாம்  என் வாய் தான் வசனம் பேசியது. அடுத்த இடிக்கு அம்மாவை இன்னும் இறுக்கிக் கொண்டன  கைகள்.

காரணமில்லாமல் பயப்படவில்லை.  ஏழு வயதிருக்கும் அப்போது . பாட்டி வீட்டில் இருந்தோம் .அப்போது தான் தம்பி பிறந்திருந்தான். அங்கே பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தேன். மூன்று வீடுகள் தள்ளி கொள்ளையில் ஒரு தட்டியால் செய்த அறை ஒன்றில் போய் ஒளிந்து கொண்டேன்.  (கிராமங்களில் பொதுவாக குளியலுக்குத் தட்டி வைத்து மறைப்பு செய்திருப்பார்கள்)

திடீரென முனகல் சத்தம். திரும்பிப் பார்த்து "அம்மாஆஆஆ"  என அலறியவள் தான். அப்படியே மயங்கி விட்டிருந்தேன்.. முழிப்பு வந்த போது என் அம்மாவின் மடியில் இருந்தேன். அம்மாவின் முந்தானையில் முகத்தை மூடிக் கொண்டு அம்மாவை இறுக்கப் பிடித்துக் கொண்டேன்.

"இடி விழுந்து கருகி போயி அர உசிராள்ள இருக்கான். பாப்பா பார்த்து பயந்து போயிருக்கு.. பாத்துக்கோ தாயி" அந்த வீட்டுப் பாட்டி சொல்லிவிட்டு சென்றார்.

என் அலறல் கேட்டு அவர் தான் மயங்கி விழுந்த என்னை தூக்கி வந்து என் அம்மாவிடம் சேர்த்திருக்கிறார்.

" முந்தாநாள் மழையில குடிச்சிட்டு போய் பாவி மவன் கரண்ட் மரத்துக்கு கீழ விழுந்து கிடந்திருக்கான். இடி விழ கரண்டு கம்பி எரிஞ்சு இவன் மேல விழுந்திருக்கு" எதிர் வீடு அத்தை என் பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தது முழுவதுமாக  என் காதுகளில் விழவில்லை. இனி பிழைக்க வழி இல்லை என்ற நிலையில் ஒரு தட்டி வைத்து மறைப்பாக அறை கட்டி கயிற்று கட்டிலில் கருகிய நிலையில் கிடத்தி இருந்தார்கள்.

ப்போதிருந்து இடி இடித்தால் அது மேலே விழுந்து அந்த மாமாவைப் போல் நாமும் கரிக்கட்டையாய் ஆகி விடுவோம் என்ற பயம் ஆழ் மனதில் பதிந்து போனது.

என் அப்பா மிகுந்த செலவு செய்து எனக்காகவே  இடி தாங்கி வாங்கி என் வீட்டில் வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என் பயம் எப்படிப்பட்ட வி.ஐ.பி அந்தஸ்து பெற்றது என்பதை.

 என் வீட்டைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். ஊருக்கு கொஞ்சம் வெளியில் மிக மிகப் பெரிய தோட்டத்திற்கு நடுவில் இரண்டடுக்கு வீடு. என் வீட்டிற்கு முன் காலி இடம். அதைத் தாண்டி கரும்புக் கொல்லை. சுற்றிலும் வெகு தொலைவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள்.

தனிமை எனக்கு பயம் இல்லை. அதனாலே என்னை தைரியமாய் வீட்டில் விட்டு விட்டு திருப்பதி சென்றனர் பெற்றோர். யாருக்குத் தெரியும் மார்கழி மாதம் புயலும் இடியும் மழையும் வரும் என.

நான் எல்லா ஜன்னல்கள், கதவுகளை மூடி விட்டு எனது கணினியில் வீர தீரப் படக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மாவீரன் ஒருவன்.  தலை சிறந்த வீரன். ஒரே ஆளாய் நூற்றுக் கணக்கான எதிரிகளை கொன்று குவித்தான் என்று படத்தில் காட்டிக் கொண்டிருந்தார்கள். மனிதர்களைக் கொன்று குவிப்பது வீரமா என்று நினைத்துக் கொண்டே வேறு புது படம் பார்க்கத் தேடினேன்.

வீரம் என்றாலே ஒரு மனிதன் பல பேரை சுற்றி சுற்றி அடித்து நொறுக்குவது என்றே திரைப்படங்கள் சித்தரித்துக் கொண்டிருந்தன.

டி இடிக்க காற்றும் பலாமாய் வீசிக் கொண்டிருந்தது... "தட் தட் தட்" கார் ஷெட் மீது மழை விழும் சத்தம். இடி தாங்கி தான் இருக்கிறதே.. வீட்டினுள் பயம் இல்லை. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்

மின்சாரம் கட். இன்வர்டர் துணையால் ஒரு டியுப் லைட் எரிந்து கொண்டிருந்தது. தொலைபேசி இணைப்புகளும் செயலற்றுப் போயிருந்தன. மணி இரவு ஒன்பது. பசி வேறு. அம்மா புளியோதரை மற்றும் இட்லி செய்து வைத்து விட்டுத் தான் போயிருந்தார்.

விடாமல் இடி இடிக்க ஜன்னல் வழி மின்னல் கீற்று வேறு. முன் வாசல் அருகில் உள்ள ஜன்னலின் தாழை நான்  சரியாகப் போடவில்லை போல். மழைக்கும் காற்றுக்கும் “டப் டப்” என அடித்துக் கொண்டிருந்தது.  கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த ஜன்னலை மூடப் போனேன்.

யாரோ அழுகிறார்கள்.. மிகுந்த வலியில் துடித்துக் கொண்டு அழுகிறார்கள். அந்த இடி ஓசை நடுவில் துல்லியமாக இந்த சத்தம் காதில் விழுந்தது.

கொஞ்சம் ஆர்வக் கோளாறு அதிகம் எனக்கு. மற்ற விஷயங்களில் அசட்டு தைரியம் உண்டு. அட நம்புங்கள். இடி மட்டும் தான் பயம்.

தொடர்ந்து கேட்ட அந்த அழுகுரலை என்னவென்று அறியாமல் விட்டு விட முடியவில்லை என்னால். வீட்டிற்குள் சென்று அப்பாவின் பெரிய டார்ச் எடுத்து வந்து ஜன்னல் வழியே சுற்றும் முற்றும் அடித்துப் பார்த்தேன்.

என் வீட்டின் முன் உள்ள காலி இடத்தில் அந்தக் கரும்புக் கொல்லையின் ஓரத்தில் மின்னல் ஒளியும் டார்ச் ஒளியும் ஏதோ ஒரு வெள்ளை உருவம் இருப்பதை எனக்குக் காட்டிக் கொடுத்தன. அசைய வேறு செய்தது அந்த உருவம். வலியில் துடிக்கும் அழுகுரல் இன்னும் அதிகரிக்கவே கதவைத் திறந்து வெளி கேட் திறக்காமல் கிரில் வழியே பார்த்தேன்.

பூனையா!! அல்லது நாயோ!! சிறிய உருவம். என்னவாயிற்று தெரியவில்லை. மழையோ “சோ” என பொழிந்து கொண்டிருந்தது.. காற்றில் மரங்கள்  எல்லாம் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் ஒரு பலத்த இடியில் ஓடிப் போய்விட்டேன் வீட்டினுள்.

இப்போது அந்த அழுகுரல் வீட்டினுள் கூடக் கேட்டது. ஒரு புறம் அக்குரலில் என் மனம் பிசைய இன்னொரு புறம் இடிமுழக்கம் என் பயத்திற்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தது.

ஹாங்கரில் மாட்டியிருந்த குடையை எடுத்துக் கொண்டு டார்ச் உதவியுடன் நடுங்கிக் கொண்டே பாதி தூரம் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன்.

ப்போது நன்றாக தெரிந்தது அந்த உருவம். ஒரு வெள்ளை நிறப் பூனை தான். அதன்  வயிற்றுப் பகுதி பெரிதாக இருந்தது. என்னவாய் இருக்கும் என நான் யோசிக்கும் முன்னே ஒரு பெரிய இடி இடிக்க மீண்டும் ரன்னிங்  ரேஸ்.

இப்போது வீட்டின் வாசலில் நின்று யோசிக்க  பூனை நிறை மாத கர்ப்பம் என்று பளிச்சிட்டது. பூனை பிரசவ வலியில் துடித்ததோ. மிருகங்களுக்கும்  பிரசவத்தின் போது வலிக்குமா என தத்து பித்து ஆராய்ச்சி செய்தது மனம்.

மழை வேறு பலமாகப் பெய்யத் தொடங்கியது. பூனை இன்னும் அதிகமாக குரல் எழுப்ப மனதில் எங்கிருந்து தான் எனக்குத் தைரியம் வந்ததோ!!!

ரஜினி படத்தில் "சிங்கம் ஒன்று புறப்பட்டதே" என்று பாட்டு வருமே. அப்படி குடையுடன்  கையில் டார்ச்சுடன்  இடி இடிக்க, காற்று வீச, மின்னல் வெட்ட, மழை பொழிய , வீர நடை போட்டுப் பூனை அருகில் சென்று மண்டியிட்டு டார்ச்சை மடியில் வைத்து விட்டு அதை ஒரு கையால் தடவிக் கொடுத்தேன்..

என் கை ஸ்பரிசம் பட்ட அந்த நொடியில் ஒரு பலத்த இடி ஓசையும் மீறி பூனை குரல் எழுப்ப ஒன்றின் பின் ஒன்றாக ஐந்து குட்டிகள். நான் இமை மூட மறந்து விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி நடக்கும் எதுவும் என் நினைவில் பதியவில்லை. பிறப்பு இப்படித் தான் இருக்குமா.. பிரமிப்பு.

ஐயோ... மண்ணெல்லாம் ஈரம். என் துப்பட்டாவை மண்ணில் விரித்தேன். தாய்ப் பூனை உடனே துள்ளி எழுந்து தன் குட்டிகளை நாக்கினால் தடவிக் கொடுத்து என் துப்பட்டாவில் வாகாய் அமர்ந்து கொண்டது. வான்மழை குட்டிகளை தீண்டி விடமால் என் குடை தடுத்ததே அதனால் கோபம் கொண்டு இடியுடன் மழை இன்னும் வேகமாக பொழியத் தொடங்கியது.

நான் குடையைப் பூனைகளுக்கு அருகில் ஈர மண்ணில் பலமாய் ஊன்றி விட்டு வீட்டிற்கு விரைந்தேன். என் வீட்டில் அகலமாய் முறம் ஒன்று இருக்கிறது. அதை எடுத்து வந்து பூனை அருகில் வைத்தேன். ஐந்தறிவு ஜீவன் தான். இருப்பினும் தாய் அல்லவா.. குட்டிகளை கவ்வி முறத்தில் வைத்தது பூனை. தானும் அமர்ந்து கொண்டது.

நான் இரு கைகளிலும் முறத்தைப் பிடித்துக் கொண்டு வேகமாய் வீட்டினுள் வந்தேன். வராண்டாவில் ஒரு மூலையில் சாக்கை விரித்து பூனைகளை அங்கு விட்டேன்.

குட்டிகள் தாயிடம் பசி போக்கிக் கொள்ள தாய்ப் பூனைக்கும் பசிக்குமே... கிச்சன்னுக்குள் சென்று கிண்ணத்தில் சிறிது பால் எடுத்து வந்து வைத்தேன்.. பூனை அவ்வளையும் குடித்து மெல்ல கண்மூடி குட்டிகளை அணைத்த வண்ணம் படுத்துக் கொண்டது.  என் அம்மாவின் பழைய புடவை கிழிசலை எடுத்துப் போர்த்தி விட்டேன்

ஐயோ!! என் துப்பட்டா, அப்பாவின் டார்ச், குடை... இடி பலமாய் மிரட்டியது.

 ஹாஹாஹா!!! இடி ஓசைக்குப் போட்டியாய் ஒரு பி எஸ் வீரப்பா சிரிப்பு சிரித்தேன். வானத்து மேகத்தைப் பார்த்து பாடினேன் "என்கிட்டே இடி இடிக்காதே!!!! நான் வீராதி வீரனடா!!!"

ஓடிப் போய் குடையையும் டார்ச்சையும் எடுத்துக் கொண்டேன். துப்பட்டா சேற்றில் ஐக்கியாமாகி விட்டதால் அதை அங்கேயே விட்டு திரும்பினேன்..

றுநாள் காலை ஓரளவு மழை ஓய்ந்திருக்க பூனைக்குப் பிரிட்ஜில் இருந்து பால் சூடு பண்ணி வைத்தேன். என்னை நன்றியுடன் பார்த்ததோ!!! என் பாதத்தை நக்கியது. அந்த நொடி சிலிர்த்துப் போனேன். நன்றி நானல்லவா சொல்ல வேண்டும். இடி பயந்தாங்குளியை வீரத் திருமகள் ஆக்கிய பூனைக்கும் குட்டிகளுக்கும். வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தேன் அவர்களை.

 என் வீரச் செயல்???!!!! எனது சுய அலைவரிசையில் என் அம்மா ,அப்பா, தம்பி, பாட்டி, தோழிகள், பக்கத்துக்கு வீடு  என அனைவர் செவிகளிலும் ஒலி பரப்பப்பட்டுவிட்டது.

இப்போது உங்கள் முன்னும் பதிவு செய்து விட்டேன்.. இதெல்லாம் வீரமா என்று சிலர்  நினைக்கலாம். இருப்பினும் பல உயிர்களை மாய்த்து நிலைநாட்டும் வீரத்தின் முன்  என் பயத்தை மீறி  இன்னொரு உயிருக்காக நான் எடுத்து வைத்த முதல் அடி என்னைப் பொறுத்த வரையில் வீரமே!!! உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்... அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றேன். 

This is entry #26 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.