(Reading time: 5 - 10 minutes)

ஊமைக் கனவு – சுரேஷ்

This is entry #25 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ன்றும் விடிவது போல தான் அன்றும் விடியல் முளைத்தது. படுக்கையை விட்டு எழாமல் தன் வயிற்றில் வளர்ந்திருக்கும் சிசுவை தடவியபடி படுக்கையில் சாய்ந்திருந்தாள் ஊமச்சி. ஆம். பிறவியிலேயே ஊமையாய் பிறந்த சாபத்தின் விளைவாக மற்றவர்கள் அவளுக்கு சூட்டிய பெயர் ஊமச்சி. அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. வயிற்றில் இருக்கும் குழந்தை எப்பொழுது பூமியைப் பார்க்கும் என்ற ஆசை மட்டும் அவள் உள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தது.

வெளியே குளிர் பனி பூமியை நனைத்துக்கொண்டிருந்தது. மெல்ல எழுந்து ஜன்னல் ஓரமாய் நின்று தோட்டத்திலிருக்கும் மலர்களைப் பார்த்தாள். அவற்றைப் போல் நாமும் ஒரு மலராய்ப் பிறந்து ஒரு மாலையில் உதிர்ந்திருக்கக் கூடாதா என்கிற ஆதங்கம் அவள் முகத்தை வாட்டமுறச் செய்தது.

ஊமையாய் ஏழ்மை வீட்டில் பிறந்த அவளை யாரும் மணந்துகொள்ள விரும்பவில்லை. ஆதலால் முறைமாமனுக்கே திருமணம் செய்து வைத்தார்கள். கண்ணப்பன் என்கின்ற அவன் பெரிய செல்வந்தரின் வீட்டில் தோட்டக்காரனாய் பணி புரிந்தான். ஊமச்சியின் வாழ்க்கை இன்பமயமானதாகத் தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால், விதி அவ்வாறு விடுமோ? எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் கண்ணப்பன் இறந்துவிட்டான்.

Oomai kanavu

அன்று பிடித்தது அஷ்டமச் சனி. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. உணவுக்கும் வழியில்லை. வயிற்றில் வளரும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும்.நாதி என்று கூற ஒருவரும் இல்லை. அனாதையாக அவள் தவித்தாள்.

வேறு வழியில்லாமல் தன் கணவன் வேலை செய்த வீட்டிற்கு சென்று நின்றாள். அவர்களும் அவளது பரிதாப நிலையைக் கண்டு வீட்டு வேலைக்காரியாய் இருக்க வைத்தார்கள். அதில் சுயநலமும் கலந்திருந்தது. சம்பளமும் சிறிதளவு கொடுத்தாலே போதுமே. முதலாளி மனைவியும் கர்ப்பம் தரித்திருந்ததால் ஊமச்சிக்கு அடிமை வேலையாகப் போனது. தினமும் இரவில் உடல்வலி அவளை பிடுங்கித் தின்றது.

அவள் எதிர்காலம், சந்தோசம் யாவும் பிறக்கப் போகும் குழந்தையின் கையில் தான் இருக்கிறதென்று அவள் நம்பினாள். ஆனால், தன் குழந்தையும் ஊமையாய்ப் பிறந்து விடுமோ என்கின்ற கவலை அவளை அச்சமடையச் செய்தது. இருந்தும் ஒரு நம்பிக்கை, குழந்தை  நல்லபடியாகவே பிறந்து பேசும் என்று.

முதலாளியின் மனைவி குழந்தை பெற்றெடுத்து சரியாக இரண்டு நாட்கள் கழித்து ஊமச்சிக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அவள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனக்கொரு விடிவுகாலம் பிறந்துவிட்டதாய் அவள் எண்ணினாள். குழந்தையை தாலாட்டி தூங்க வைக்க முடியாமல் பல முறை அவள் அழுதாள். இருந்தும் தன் குழந்தையின் தொட்டிலை ஆட்டுவதிலேயே பல இரவுகள் தன் தூக்கத்தை தியாகம் செய்தாள்.

நாட்கள் ஓடின. குழந்தை வளரத் தொடங்கியது. முதலாளியின் குழந்தை திக்கித் திக்கி பேசக் கற்றுக்கொண்டது. ஆனால், ஊமச்சியின் குழந்தையோ இன்னும் பேசாமலேயே இருந்தது. அவள் கலங்கினாள். தன் குழந்தையும் ஊமையாகிவிட்டதோ என்று பயந்தாள். தினமும் வேலைக்குச் செல்லும்போது குழந்தையையும் அழைத்துக்கொண்டு செல்வாள். அங்கே பேசுகிறவர்களைப் பார்த்து தன் குழந்தையும் பேசாதோ என்று ஏங்கினாள். ஆனாலும் குழந்தை பேசவே இல்லை.

அவளுடைய  நம்பிக்கை முற்றிலும் வற்றிப்போனது. குழந்தை ஊமை தான் போலிருக்கிறது என்று ஊர்ஜிதம் செய்து கண் கலங்கினாள். அவள் கலங்குவதைக் கண்டு அங்கு வேலை செய்யும் வயதான பெண்மணி காரணம் என்னவென்று விசாரிக்க தன் நிலைமையை சைகையால் விளக்கிக் கண்ணீர் சிந்தினாள். அப் பெண்மணி குழந்தையின் முகத்தருகே சென்று கை தட்டினாள். குழந்தை ஒரு கணம் துணுக்குற்று மூதாட்டியை நோக்கியது. மீண்டும் ஒருமுறை அதே போல் கை தட்டினாள். குழந்தை சிரிக்கத் தொடங்கியது.

குழந்தை ஊமையாயிருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் ஊமையாய் இருப்பவர்களுக்கு காதும் கேட்காது. உன் குழந்தைக்கு நன்றாக காது கேட்கிறது. சில குழந்தைகள் பேசுவதற்கு நாளாகலாம். நிச்சயம் உன் குழந்தை ஊமை கிடையாது என்று அந்த மூதாட்டி சொன்னாள்.

ஊமச்சியின் மனது சாந்தி அடைந்தது. எதற்காக நம் குழந்தை இன்னமும் பேசாமல் இருக்கிறான் என்று எண்ணத் துவங்கினாள். அதற்கு தானே காரணம் என்றும் தெரிந்துகொண்டாள் . குழந்தையிடம் யாரும் பேசிப் பழகாததே அதற்கு காரணம் என்பதை உணர்ந்துகொண்ட பின், தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் குழந்தையை அழைத்துச் சென்றாள். ஒரு வானொலி வாங்கி வீடெங்கும் பாட்டொலி பரப்பினாள். நிச்சயம் ஒரு நாள் குழந்தை பேசும் என்றே வாழ்ந்து வந்தாள்.

மாதங்கள் கழிந்தன. மர்ம காய்ச்சலால் படுக்கையில் வீழ்ந்தாள் ஊமச்சி. கையிலிருந்த காசும் குழந்தைக்கு உணவு வாங்கித் தருவதற்கே சரியாக இருந்ததால் அவளால் தன் உடலுக்கு மருத்துவம் பார்க்க முடியவில்லை. காய்ச்சல் தீவிரமானது.

குழந்தை தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்பொழுது முதலாளியின் குழந்தை தன் அன்னையைப் பார்த்து "அம்மா! அம்மா!" என்று கூக்குரலிட்டபடியே இருந்தது. அக்குரலைக் கேட்ட முதலாளியம்மா குழந்தையைத் தூக்கி ஆசையோடு உச்சி முகர்ந்தாள். அம்மா என்ற சொல் ஊமச்சியின் குழந்தையை ஏதோ செய்தது. சிறிது நேரத்தில் அக் குழந்தையும் திக்கித் திணறி " அம்மா" என்று முழுதாக சொல்ல முடியாவிட்டாலும் மழலை மொழியில் கத்தத் தொடங்கியது.

தோட்டத்தில் இருந்து தன் வீட்டிற்கு சென்று படுத்துக்கொண்டிருந்த தன் அம்மாவின் அருகில் உட்கார்ந்து "அம்மா! அம்மா!" என்று அழைத்தது. ஊமச்சி எழுந்திருக்கவில்லை. கண் மூடியே இருந்தாள். அவள் இறந்து விட்டது கூடத் தெரியாமல் அப் பச்சிளம் குழந்தை "அம்மா..அம்மா" என்றே அழைத்துக்கொண்டிருந்தது.

ஊமச்சியின் உடலை கார்ப்பரேஷன் வண்டி எடுத்துக்கொண்டு செல்வதை அழுதபடியே பார்த்துக்கொண்டிருந்த குழந்தையை  முதலாளி வீட்டினர் சாலையில் விட்டனர். அம்மா எங்கே சென்றாள். நாம் எங்கே இருக்கிறோம் என்று கூட புரியாத மழலை "அம்மா அம்மா" என்றே அழுது கொண்டிருந்தது.

சில வருடங்கள் கழித்து..

பேருந்து நிலையத்தில் சிறுவன் ஒருவன் பார்ப்பவர்களை எல்லாம் "அம்மா அம்மா" என்று அழைத்தபடி பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். கிழிந்த அரை டிரௌசரை மட்டும் அணிந்துகொண்டிருந்த அச்சிறுவனை மற்ற பிச்சைக்காரர்களைப் போல் ஒதுக்கிவிட்டு மக்களால் செல்ல முடியவில்லை.

காரணம், அவன் "அம்மா" என்று அழைக்கும் அச் சொல்லின் அடி ஆழத்தில் ஒளிந்திருக்கும் பாசத்தின் வலி முள் போல் தைத்ததுதான் . 

This is entry #25 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.