(Reading time: 8 - 15 minutes)

பெண் நிலா – கீர்த்தனா. ஆர்

This is entry #30 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ழகான இளம் காலை பொழுது!! சூரியன் தனது கதிர்களை பூமியில் பரவ செய்கின்ற நேரம்!! காலைஆறு மணி!!

தனது வீட்டில் ஒலித்த கடிகாரத்தின் இசையை நிறுத்தி விட்டு மெல்ல படுக்கையில் இருந்து கண் விழித்தாள் அவள்!! தனது காலை கடன்களை முடித்து கொண்டு தனக்காக காபி கலந்து கொண்டு தோட்டத்தில் சென்று அமர்ந்தாள்.

இளம் காலை பொழுதில் சூரியனின் கதிர்கள் முகத்தின் மீது விழ ,காலை நேரக் காற்றை அனுபவித்து கொண்டு இருந்தாள்..அவள் வெண்ணிலா!! 

Penn Nila

பெயருக்கு ஏற்றார் போலவே அழகிய மதி முகம். அனைவரிடமும் அன்பாக பழகுவாள். எளிமையான தோற்றம் கொண்டவள். ஒரு நாளில் சில மணி நேரமாவது தோட்டத்தில் இருப்பாள். இயற்கையின் ரசிகை. அதன் பின் குளித்து முடித்து தயாராகி வந்தாள்.

அழகிய கைத்தறி புடவையில் எந்த வித ஒப்பணையும் இன்றி அழகாக இருந்தாள். காதில் சின்ன ஜிமிக்கியும், வலது கையில் இரண்டு கண்ணாடி வளையல்களும், இடது கையில் கடிகாரமும் கட்டி இருந்தாள். கழுத்தில் மிக மெல்லிய சங்கிலியும் அவளை இயற்கையிலே அழகாக காட்டியது.

மையல் அறையில் இருந்து கண்ணம்மா வெளியில் வந்தார். " வா நிலா!! இந்த புடவைல ரொம்ப அழகா இருக்கடா" என்று கூறினார்.

அவருக்கு புன்னகையை பதிலாக பரிசளித்து விட்டு "இன்னிக்கு என்ன பலகாரம் அம்மா? வேகமா எடுத்து வைங்க. இன்னிக்கு நேரத்துல இல்லத்துக்கு போகணும். நீங்களும் சாப்பிட்டு நேரத்துல வந்துருங்க என்று கூறினாள்.

" சரிடா. நீ உட்காரு. நான் எடுத்து வைக்கறேன். மெதுவா சாப்பிடு இன்னும் நேரம் இருக்கு என்று கூறினார். காலை உணவை வேகமாக முடித்து கொண்டு தனது கைப்பையினை எடுத்து கொண்டு "அம்மா நான் போய்ட்டு வரேன்" என்று கூறி சென்றாள்.

"அன்பொளி" என்ற பெயர் பலகை உள்ள கட்டிடத்தின் உள்ளே சென்று தனது அறையை நோக்கிச் சென்றாள். கைப்பையினை அதன் இடத்தில் வைத்து விட்டு சுவாமி படத்தின் அருகே சென்று பூமாலை போட்டு விளக்கேற்றினாள். " எல்லாரும் நல்லா இருக்கணும். எப்பவும் எனக்கு துணையா நீதான் இருக்கணும் கடவுளே " என்று மனமார வேண்டினாள்.

பின்னர் இல்லத்தின் அன்றைய நிகழ்வுகளை மேற்பார்வையிட்டாள். அவர்களின் இருப்பிடம் சென்று அனைவரிடமும் பேசினாள். அந்த இல்லத்தில் மொத்தம் 20 பேர். அதில் 15 பெண் குழந்தைகளும், 5 முதியவர்களும் இருந்தனர். இவர்களை கவனித்து கொள்வதற்கு இரண்டு பேர் இருந்தனர். வெண்ணிலா அவர்களிடம் பேசி விட்டு குழந்தைகளிடம் சென்றாள். அங்கிருந்த நிவியை தூக்கி கொண்டு " நிவி குட்டி கு காய்ச்சல் எப்படி இருக்கு"என்று கேட்டாள்.

அதற்கு பதிலாக "அம்மா காய்ச்சல் ச்சு போச்சு . நிவி குட்டி நல்லா இருக்கேன்" என்று தனது மழலை குரலில் கூறியது.

" ஹையா அப்போ நிவி செல்லம் இன்னிக்கு ஸ்கூல் போறாங்களா குட் கர்ல்" என்று கூறி அந்த குழந்தையின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். அப்போது ஒரு பெண்மணி வந்து "அம்மா உங்கள பார்க்க ரெண்டு மூணு பேரு வந்து இருக்காங்க. உங்க ரூம்ல உட்கார வெச்சிருக்கேன்" என்று கூறினார்.

"சரிம்மா நீங்க போய் அவங்களுக்கு குடிக்க எதாவது குடுங்க. நான் வறேன். " என்று கூறினாள் நிலா. பின்னர் "நிவி செல்லம் பார்த்து போய்ட்டு வாங்க " என்று கூறி அங்கிருந்தவர்களிடம் கொடுத்து விட்டு தனது அறையை நோக்கி சென்றாள்.

"ணக்கம் ஸார். வாங்க." என்று அவர்களை வரவேற்றாள்.

"வணக்கம் மேடம். நாங்க "ஸக்ஸெஸ்" என்ற அமைப்பில் இருந்து வருகின்றோம்.

நாங்க வருசா வருசம் ஒவ்வொரு துறையில் சாதிததவர்களுக்கு விருதுகள்

வழங்கி கொண்டு இருக்கிறோம். இந்த வருடம் சமூக சேவை துறை சார்பாக அந்த விருதை உங்களுக்கு வழங்கலாம்னு இருக்கோம். "இளம் சாதனையாளர் விருது" நீங்க கண்டிப்பா வரணும் மேடம் என்று பத்திரிகையை நீட்டினார்.

நிலா அதனை வாங்கி படித்து பார்த்து விட்டு அவர்களிடம் " எதுக்கு சார் இப்போ எனக்கு இதெல்லாம். நான் என்னோட மன அமைதிக்காக தான் விரும்பி செஞ்சிட்டு இருக்கேன்.

இத விட நல்ல மனம் கொண்ட பல பேரு இந்த உலகத்துல இருங்காங்க. அவங்களுக்கு குடுங்க சார்" என்று கூறினாள்.

"மேடம் இது உங்களுக்கு வேணா சின்ன விஷயமா இருக்கலாம். ஆனா நீங்க செய்யற இந்த பணி எவ்ளோ பெருசுண்னு எங்களுக்கு தான் தெரியும். நீங்க அடுத்தவங்களுக்கு உதாரணம் ஆ இருக்கணும். அதுக்கு தான் இந்த விருது மேடம். நீங்க கண்டிப்பா வரணும்" என்று கூறினார்கள். நிலாவும் தான் வருவதாய் அவர்களிடம் தெரிவித்தாள். அவர்களும்மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.

அதன் பிறகு விஷயம் தெரிந்த அனைவரும் அவளை வெகுவாக பாராட்டினார்கள். வெண்ணிலா அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தாள். தனது கண்ணீரை முயன்று கட்டுபடுத்திக்கொண்டாள்.

மாலை வரை இல்லத்தில் மற்ற பணிகளை பார்த்து விட்டு இரவில் வீடு திரும்பினாள். உடல் அலுப்பு தீர வெந்நீரில் குளித்து விட்டு உணவை உண்டு படுக்கையில் விழுந்தாள்.

தனது கடந்த கால வாழ்க்கையை நினைத்து கண்ணீர் சிந்தினாள்.

"தனது சிறிய வயதில் தனது தாய்,தந்தையுடன் உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு சென்று விட்டு வரும் வழியில் எதிர்பாராத விபத்தால் அவர்களை இழந்தாள். அதன் பின்னர் சில நல்ல உள்ளங்கள் ஒரு கருணை இல்லத்தில் அவளை சேர்த்தனர். முதல் வாரம் முழுவதும் பெற்றோரின் நினைவுகள் அவளை வாட்டி எடுத்தது. அதன் பின்னர் அங்கிருந்த மற்றவர்களிடம் பழக ஆரம்பித்தாள் நிலா. பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்த்தாள்.

இளநிலை படிப்பை முடித்து விட்டு ஒரு வேலையில் சேர்ந்தாள். அதன் பின்னர் பெண்கள் விடுதியில் தங்கி கொண்டாள். வேலையில் சேர்ந்தவுடன் கருணை இல்லத்தில் தங்க அனுமதி இல்லை. தனது மேற்படிப்பினை தபால் வழியில் தொடர்ந்தாள்.

வாழ்க்கை அதன் போக்கில் அமைதியாக சென்று கொண்டு இருந்தது. நிலாவும் வேலை, படிப்பு,கருணை இல்லம் என்று இருந்தாள். இரண்டு வருடம் அதன் போக்கில் கழிந்தது. தனது மேற்படிப்பினை வெற்றிகரமாக படித்து முடித்தாள்.

நிலா இல்லத்தில் வளர்ந்த காலத்தில் தனது எதிர்கால லட்சியமாக "அன்பொளி" என்ற இல்லத்தை அமைக்க முடிவு செய்தாள். தன்னை போன்ற லட்சக்கணக்கான மனிதர்கள் இருப்பதை எண்ணினாள். எனவே எதிர்காலத்தில் அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து தர உறுதி கொண்டாள்.

பின்னர் வங்கியில் சென்று கடன் கேட்டாள். பல முறை முயன்றும் தோல்வி அடைந்தாள். நிலா தனது தன்னம்பிக்கையை கை விடாமல் மீண்டும் முயன்றாள். அவளின் முயற்சியை பார்த்து வங்கியில் வேலை செய்த ஒருவர் நிலாவிற்கு உதவினார். அதன் பின்னர் இல்லத்திற்கு தேவையான இடத்தை முடிவு செய்து நம்பிக்கையான வக்கீலின் உதவியுடன் வாங்கினாள். அவர்களின் உதவியுடன் அரசாங்க அனுமதியும் வாங்கினாள்.

இல்லம் ஆரம்பித்த புதிதில் பலவிதமான துயரங்களை சந்தித்தாள். ஒரு சிறிய பெண்ணை நம்பி யார் இங்கு வருவார்கள் என்று அனைவரும் பேச ஆரம்பித்தனர்.

நிலா அவர்களின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பின்னர் ஆதரவற்ற குழந்தைகள், தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் சேர்ந்தனர். ஆறு வருட கடின உழைப்பின் காரணமாக இன்று இந்நிலையை அடைந்து இருக்கின்றாள். அவளின் இந்த நிலைக்கு தன்னம்பிக்கையும், விட முயற்சியுமே காரணம். இல்லத்தில் வளர்ந்த அவள் இன்று அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு தாயாகவும், முதியவர்களுக்கு சேயாகவும் திகழ்கிறாள். விழா நாள் அன்று!!!

காலை பத்து மணி அளவில் இல்லத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சென்றார்கள்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சி தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதிகளும் வந்து இருந்தனர்.

அவர்களின் நடுவில் வான் நிலவாக வீற்றிருந்தாள் வெண்ணிலா!!

நிகழ்ச்சியின் இறுதியில் "இளம் சாதனையார்" விருதை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் வெண்ணிலாவிற்கு வழங்குவார் என்று அறிவித்தனர். நிலா தனது பெற்றோரை மனத்தில் நினைத்து கொண்டு விருதை வாங்கினாள். பின்னர் அவளை ஓரிரு வார்த்தைகள் பேசுமாரு அழைத்தனர்.

" இங்கு இந்த மேடையில் உள்ள மாவட்ட ஆட்சி தலைவருக்கும் , நீதிபதி அவர்களுக்கும்,எனது அருமை நண்பர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

என்னுடைய லட்சியம் இன்னும் இந்த இல்லத்தை விரிவு படுத்தி என் குழந்தைகளுக்கும், தாய்க்கும் உதவி செய்ய விரும்பறேன். என்னை பொருத்த வரைக்கும் இந்த உலகத்தில் எதும் நிரந்தரம் இல்லை. அன்பு மட்டும் தான் நிஜம். மற்ற அனைத்தும் இன்னிக்கு இருக்கும் நாளைக்கு போய்விடும். ஒரு பெண் நினைத்தால் ஒரு சமுதாயததையே உருவாக்கலாம்.

" ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" என்று ஒரு பழமொழி இருக்கு. ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் சில பெண்களே குப்பை தொட்டியில் வீசுகின்ற காலம் இது. தானும் ஒரு பெண் என்பதை அந்த தாய் மறந்து விடுகிறாள். சில பேருக்கு அவர்களை வளர்த்த தாய், தந்தை பாரமாகி விடுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை தெளிவு படுத்தி கொள்கிறேன். அந்த "சிவனின் சக்தியாக ஒரு பெண் தான் திகழ்கிறாள்". எனவே நாம் பெண்களை போற்றுவோம் !! பெண்மையை மதிப்போம் !! " என்று கூறி தனது இருக்கையில் அமர்ந்தாள். அனைவரின் கரகோசையும் வானை எட்டியது.

தன் வாழ்க்கையில் ஒளியை கொண்டு வந்து, இன்று பல உயிர்களுக்கும் அந்த வான் நிலவை போல ஒளியையும், குளுமையும் இன்று போல என்றும் தர நாமும் வெண்ணிலாவை வாழ்த்தி விடை பெறுவோம். 

This is entry #30 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.