(Reading time: 9 - 18 minutes)

உயிர்த்துடிப்பு - ஜெய்

This is entry #40 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ன்னடா கணேசா இது இத்தனை நாளா இப்படி இழுத்துட்டு கிடக்கு”

“ஆமாக்கா, படுத்த படுக்கையாகி ஆறு மாசம் ஆகிப்போச்சு.  அதுவும் கிட்டத்தட்ட ஒரு மாசமா இழுத்துக்கோ, பிடிச்சுக்கோன்னுதான் இருக்கு”

“ஆமாம் நானும்தான் வாராவாரம் வந்து பார்த்துட்டுப் போறேனே”

Uyir thudipu

“ஹ்ம்ம் அதுவும் போன வாரத்துல இருந்து, ஒரு ஸ்பூன் இல்லை, ரெண்டு ஸ்பூன்  நீராகாரமாதான் இறங்குது.  அதுக்கு மேல உள்ள போக மாட்டேங்குது” 

தொண்ணூற்றியாறு வயது அலமேலுவின் அருகில் நின்று அவரின் பெண்ணும், பையனும் பேசிக் கொண்டிருக்க, அவரின் பேரப்பிள்ளைகளும், கொள்ளுப் பேரன் பேத்திகளும் சற்று தள்ளி அமர்ந்திருந்தனர்.  ஆறு மாதத்திற்கு முன் அலமேலு கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து படுத்த படுக்கை ஆனவர்தான்.  இத்தனை வயதிற்கு மேல் அறுவை சிகிச்சை சாத்தியமில்லை என்பதால், தானாகவே சேர்ந்தால்தான் உண்டு என்று கட்டுப் போட்டு படுக்க வைக்க, ஒரு ஒரு செயல்பாடாகக் குறைந்து கடைசி கட்ட ஜீவ மரணப் போராட்டத்தில் இருக்கிறார்.  இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி ஒலிக்க, கணேசனின் மகன் சென்று வாயிலைத் திறந்தான்.

“வாப்பா சபா, எப்படி இருக்க, பசங்கள்லாம் சுகமா இருக்காங்களா?”

“நல்லா இருக்கேன் கணேசா, சித்தி எப்படி இருக்கு.  எதாச்சும் நினைவு வந்துதா.  கண்ணு முழிச்சு பார்த்துச்சா?”

“இல்ல சபா அதே நிலைமைதான்.  சில நேரம் மூச்சு விடறாங்களா, இல்லையான்னே தெரியலை, பேரப்பசங்க மூக்குக்கிட்ட பேப்பர் வச்சு அது அசைஞ்சுச்சுன்னா மூச்சு இருக்குன்னு சொல்றாங்க, மொத்த உடம்பும் ஒடுங்கிப் போனதுல, மூச்சு ஏறி இறங்கறது கூடத் தெரிய மாட்டேங்குது”

“இப்படியே எத்தனை நாள் தள்றதுடா கணேசா.  அம்மாக்கும் அவஸ்த்தைதானே”

“என்னக்கா பண்றது, சாப்பாடு இறங்க மாட்டேங்குதேன்னு, ரெண்டு நாள் முன்னாடி டாக்டர் கூட்டிட்டு வந்து ட்ரிப்ஸ் போட சொன்னோம்.  நரம்பு எல்லாம் சுருங்கிப் போய்ட்டதால, அவங்களால நீடில் நுழைக்கக் கூட முடியலை.  அங்க அங்க ஓட்டைப் போட்டு புண்ணானதுதான் மிச்சம்.  கடைசியா ஒரு வழியா தேடி எடுத்து சொருகி ட்ரிப்ஸ் போட ஆரம்பிச்சா, மருந்து இறங்கவே இல்லை, ஒண்ணும் பண்ண முடியாது. ஓரலாவே கொடுக்கப்பாருங்க அப்படின்னுட்டு போய்ட்டாங்க டாக்டர்”

“ப்ச் பாவம் சித்தி.  எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க.  யாரானும் வீட்டுக்கு வந்தா இப்படியா படுத்துட்டு இருப்பாங்க.  அவங்க வயத்தை ரொப்பாம பேசக் கூட உக்கார மாட்டாங்க”, என்று சபா எதார்த்தமாக சொல்ல, கணேசனின் மனைவி தன் மகனிடம், “உங்கப்பா சைடு ஆளுங்களுக்கே குசும்பு ஜாஸ்திடா, பாரு நான் வந்தவருக்கு எதுவும் கொடுக்கலைன்னு எப்படி நக்கலா சொல்லி காட்றாரு”

“அம்மா சும்மா இரும்மா, உனக்கு எப்போ எதைப் பேசணும் தெரியாதா, அவர் ஏதோ பாட்டி மேல இருக்கற அன்புல பேசறாரு, நீயேன் குதர்க்கமா எடுத்துக்கற”

“ஆமாம், நீயும் உங்கப்பா சைடுதானே பேசுவ”, என்று அங்கலாய்க்க, இனியும் தன் அன்னையின் பக்கத்தில் இருந்தால், பேச்சு வளரும் என்று தெரிந்து அங்கிருந்து நகர்ந்தான் கணேசனின் மகன்.

“நீ இங்கதான் இருக்கியாக்கா?”

“இல்லடா சபா, நான் எப்படி மாமாவ விட்டுட்டு இங்க இருக்கறது.  வாராவாரம் ஞாயித்துக்கிழமை காலைல வந்துட்டு சாயங்காலம் வரை இருந்துட்டு என்னால முடிஞ்ச உதவி செஞ்சுட்டுப்போறேன்”

ம்க்கும், இவங்க உதவி செஞ்சு கிழிச்சாங்க.  வந்து அந்த வீட்டு அக்கப்போரை, அக்கம் பக்கத்து வீட்டு அக்கப்போரை பத்தியெல்லாம் பேசிட்டு நான் பண்றதை மூணு வேளையும் நொட்டை விட்டு சாபிட்டுட்டு போறது உதவி பண்றதா, தன் மகன் அருகில் இருக்கிறான் என்ற நினைவில் கணேசனின் மாணவி பேச, அவன் அங்கே இருந்தால்தானே, ச்சே எத்தனை பெரிய டயலாக் யாருமே இல்லாம தனியாவா பேசி இருக்கேன் என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“சில சமயம் இத்தனை கஷ்டப்பட்டு அம்மா இருக்கணுமா, போய் செர்ந்துடலாமேன்னுதான் தோணுது சபா”

“அது அப்படித்தான் கணேசா, உனக்கும் வயசாகுதே நீயும் எத்தனைதான் பார்ப்பே.  எங்க வீட்டு பக்கத்து வீட்டுல இருக்கற பெரியவர், சித்தி மனசுல ஏதோ விஷயம் உறுத்திட்டே இருக்கு, அதுதான் இப்படி இழுத்துட்டு இருக்காங்க அப்படின்னு சொன்னாரு.  உனக்குத் தெரிஞ்சு சித்தி ஏதானும் ஆசைப்பட்டு அது நிறைவேறாம இருந்துதா”, என்று சபா கேட்க, கணேசன் யோசிக்க ஆரம்பித்தார்.

“அம்மாக்கு அவங்களோட வைரத்தோட்டை, எனக்குத் தரணும்ன்னு ஆசை, ஆனால் கடைசி நேரம் வரை முடியாமப் போச்சு.  ஒரு வேளை நீங்க அதை என்கிட்ட குடுத்துட்டா, அம்மா மனசு சாந்தி ஆகிடுமா”, சந்தடி சாக்கில் ஒரு பிட்டைப் போட்டாள் கணேசனின் அக்கா.

“அது என்ன அண்ணி இப்படி சொல்றீங்க, என் மாமியாருக்கு அவங்க கல் அட்டிகையை என் பொண்ணுக்கு கொடுக்கனும்ன்ன்னு ரொம்ப ஆசை.  அவ அமெரிக்கா கிளம்பறதுக்கு முன்னாடி கொடுக்க முடியாமப் போச்சு, அதுவாதான் கண்டிப்பா இருக்கும்”, இந்த முறை, நான் உனக்கு சளைத்தவள் அல்ல என்று கணேசனின் மனைவி நேரடியாகவே அவர்களிடம் சொன்னாள்.

பா திணறி விட்டார்.  ஐயோ நாம் பேசியதில் இப்படி ஒரு உள்குத்தை இவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியாமல் வாயை விட்டு விட்டோமே, நாம் சித்தியின் ஆசையை நிறைவேற்ற சொன்னால், இவர்கள் அவர்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறார்களே என்று பரிதாபமாக கணேசனைப் பார்த்தார்.

“அம்மா, அத்தை ரெண்டு ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா.  சித்தப்பா சொன்னது, பாட்டியோட ஆசையைப் பத்தி, உங்க ஆசையைப் பத்தி இல்லை.  நீங்க ரெண்டு பேரும் என்ன மாதிரி ஆளுன்னு பாட்டிக்கு நல்லாத் தெரியும், அதனால சத்தியமா உங்களுக்கு கொடுக்க முடியலையேன்னு வருத்தப்படமாட்டாங்க”, என்று கணேசனின் மகன் கூற, தன்னால் பேச முடியாத விஷயங்களை எல்லாம் எப்படி இவனால் மட்டும் பேச முடிகிறது என்று அதிசயப்பட்டுப் போனார் கணேசன்.

“ஏன் கணேசா அம்மா ஒரு வேளை லக்ஷ்மியை நினைத்துக் கவலைப்படறாங்களோ?”

“என்ன சொல்ற சபா, அம்மாக்கு அவ நினைப்புல்லாம் இருக்கும்ன்னு சொல்றியா”

“பின்ன இல்லாமப் போகுமா கணேசா.  உங்களை மாதிரி அவளும் சித்தி பெத்தப் பொண்ணுதானே, அப்பறம் எப்படி மறந்து போகும்”

“அது சரிதான் சபா, ஆனா அம்மா அவளைப் பார்த்தே கிட்டத்தட்ட அஞ்சாறு வருஷம் ஆச்சு”

“என்னடா சொல்ற. ஏன் சித்தி வருஷத்துக்கு ஒரு வாட்டி எப்படியும் போய்ப் பார்த்துட்டு வருவாங்களே”

“இல்லடா, கொஞ்ச வருஷமாவே அம்மாவைத் தனியா எங்கயும் அனுப்ப முடியலை.  எங்களுக்கும் கூட்டிட்டு போக நேரம் இல்லை.  அதுவும் எத்தனை தூரம்.  எப்பவானும் ஒரு நாலைஞ்சு மாசத்துக்கு ஒரு தடவை போன் பண்ணிப் பேசி எப்படி இருக்கான்னு கேட்டு அம்மாக்கிட்ட சொல்லுவோம். அவ்வளவுதான்”

“அப்பா எனக்கு என்னவோ, சபா சித்தப்பா சொல்றது சரின்னு படுதுப்பா.  அத்தை வந்து ஒரு வாட்டி பார்த்துட்டாங்கன்னா, பாட்டி அமைதி ஆகிடுவாங்கன்னு நினைக்கறேன்”

“ஆமாடா கணேசா, சின்ன வயசுல நம்ம எல்லாரையும் விட கடைசிப் பிள்ளைன்னு அம்மாக்கு அவக்கிட்டதான் பாசம் ஜாஸ்தி.  எப்பவும் அவளை பக்கத்துல வச்சுட்டேதான் வேலைப் பார்ப்பாங்க.  சபா சொல்றாப்பல ஒரு வாட்டி அவளைக் கூட்டி வந்து காமிச்சுடலாம்”

“அது சரிக்கா, அம்மாக்கு இப்போ ஒண்ணுமே புரியாத நிலை.  இதுல லக்ஷ்மி வந்தா மட்டும் உடனேப் புரிஞ்சுக்கப் போறாங்களா”

“இல்ல கணேசா, சித்திக்கு உறுப்புகள்தான் தன் வேலையை நிறுத்தி இருக்கு.  ஆனா நாமப் பேசறது எல்லாம் நல்லாக் கேக்கும்.  எங்க பக்கத்து வீட்டுப் பெரியவர் கூட அவங்க பக்கத்துல நிக்கும்போது எப்போப் போய் சேருவாங்களோ அப்படின்னெல்லாம் பேசாதீங்கன்னு சொன்னாரு.  சரி, அப்படியே அவ பேசறது கேக்காட்டாலும், தொடு உணர்ச்சி புரியும் இல்லை.  எத்தனை வருஷம் ஆனாலும் ஒரு தாய்க்கு தன்னோட குழந்தை தொடுவதை உணராம இருக்க முடியாது”, என்று கூற கணேசனும் தான் அடுத்த வாரம் சென்று லக்ஷ்மியை அழைத்து வருவதாகக் கூறினார். 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அலமேலுவின் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.  அதைப் பார்த்துப் பதைத்த கணேசனின் அக்கா, “டேய் கணேசா, இங்க பாருடா நாமப் பேசறது அம்மாக்குக் கேக்குது போல, அவங்க கண்ணுல இருந்து தண்ணி வருது பாரு, நீ அடுத்த வாரம் வரைத் தள்ளிப்போடாதே.  நாளைக்கே போய் லக்ஷ்மியை கூட்டிட்டு வந்துடு”,என்று கூற, தன் வாழ்க்கையிலேயே முதல் முறையாக கணேசனின் மனைவி அவள் நாத்தனார் சொல்வது சரி என்று கூறினாள்.

ணேசனும் மறுநாளே சென்று தன் தாயின் நிலைமையைப் பற்றி விளக்கி, தங்கையை அழைத்து வர, அவள் வீட்டிற்குள் வந்து எல்லோரையும் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.

“லக்ஷ்மி நீ இங்க வா, உங்கம்மா அங்க படுத்திருக்காங்க பாரு”, என்று லக்ஷ்மியுடன் வந்தவள் கூற, லக்ஷ்மி தன் தாயின் அருகில் சென்று அவளின் கையை மெதுவாகத் தொட்டாள்.  அவள் தொட்டவுடன் அவரின் கைகள் லேசாக அசைய, அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் லக்ஷ்மி தன்னுடன் வந்தவரைப் பார்த்தாள்.

“சார் நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே”, என்று லக்ஷ்மியுடன் வந்தவர் கணேசனைப் பார்த்துக் கேட்க,

“இல்லை மேடம் சொல்லுங்க”

“எனக்கு என்னமோ உங்கம்மா இப்படி இருக்கறதுக்கு காரணம் லக்ஷ்மி பத்தின கவலையாதான் இருக்கும்ன்னு நினைக்கறேன்.  தனக்குப் பிறகு அவளைப் பார்த்துக்க யாரும் இல்லை அப்படிங்கற நினைப்புதான் அவங்க மனசுல ஓடிட்டு இருக்கு.  நீங்க வேணா அவங்ககிட்டப் போய், நீங்க லக்ஷ்மியைப் பார்த்துக்க இருக்கீங்க.  உங்கம்மாக்கு அப்பறம், அவங்களுக்கு எதுனாலும் நீங்க பார்த்துப்பீங்க அப்படிங்கற உறுதியைக் கொடுங்க.  அப்போவே அவங்க மனசு அமைதியாகிடும்.  இது ஒரு ட்ரைதான்.  முயற்சி செய்து பார்ப்போமே.  எனக்கு உங்கம்மாவை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு”, என்று கூறினார். 

கணேசனும் தன் அன்னையின் காதருகில் சென்று, தான் இனி லக்ஷ்மியை நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும், அவளின் தேவைகள் இனி எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுவதாகவும், மாதம் ஒரு முறை சென்று அவளைப் பார்த்து வருவதாகவும், வாக்களித்தார். “அம்மா இது நான் நிச்சயமா பேச்சுக்காக சொல்லலமா.  இத்தனை நாளா அவளை கவனிக்காம எத்தனை தப்பு பண்ணி இருக்கேன்னு உணர்ந்துதான் சொல்றேன்.  இதோ இப்போ என் மகன் இருக்கான், இவன், அவன் தங்கையை விட்டுட்டா எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்து இருக்கும், அதே தவிப்புதானே உனக்கும் இருக்கும்.   இயந்திர உலகத்தில இருக்கறதால, நாங்களும் பாசம், அன்பு அப்படினெல்லாம் இல்லாம இயந்திரமா ஆகிட்டோம்.  எங்க குடும்பம், எங்க பசங்க அப்படின்னு சுயநலமா யோசிச்சு லக்ஷ்மியை விட்டுட்டோம்.  இனி சத்தியமா அப்படி இருக்க மாட்டேம்மா”,என்று கண்கலங்கி வருத்தத்துடன் பேசினார்.

அவர் பேசி முடிக்கும் வரை சாதாரணமாக இருந்த அலமேலுவின் சுவாசம்,  இழுக்க ஆரம்பித்து இரண்டு நிமிடங்களில் மொத்தமாக அடங்கியது.

தான் உயிருடன் இருந்த போது தன் மனநிலை சரியில்லாத மகளுக்கு தன்னால் முடிந்த வரை எல்லாம் செய்த அலமேலு, தனக்குப் பிறகு அவளை விட்டு விடுவார்களோ, என்ற அவரின் தவிப்பே அவர் உயிரை கையில் பிடித்திழுக்க வைத்தது.  இப்பொழுது கணேசனின் பேச்சால், தன் மகளை தன்னைப் போலவே தன் மகனும் பாசத்துடன் பார்த்துகொள்வான் என்று தெரிந்தவுடன் அவள் உடலை விட்டுச் சென்று விட்டது. 

This is entry #40 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.