(Reading time: 14 - 28 minutes)

பெண் - சாரா

This is entry #43 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

 

ப்போ இத்தன நாளும்.. என்ன நீ உன் பையனா நினச்சு வளர்க்கல... சொல்லு அண்ணி... அப்படித் தான ?" எனத் தன் எதிரே ட்ரிப்ஸ் ஏறிய கையோடு, ஆங்காங்கே சிராய்ப்பும், தலையில் ஒரு கட்டோடும், படுக்கையில் படுத்து இருந்தவரிடம், ஆதங்கத்தோடு கேள்வி கேட்டான், அந்த மணமான இளைஞன். ஏற்கனவே வலியால் சோர்வோடு படுத்திருந்த அந்த நடுத்தர வயது பெண்மணி, அவனின் கேள்வியில் கண்ணீரை உகுந்தார்

"பதில் சொல் அண்ணி, இத்தன நாளும் என் மேல பாசம் இருக்க மாதிரி வேஷம் தான போட்டிருக்க? இம்..." என அவர் தலைப்பக்கம் அமர்ந்து, அவரைப் பார்த்து மீண்டும் உறுமினான் அவன் 

"என்னங்க... நீங்க வேற... " எனக் கணவன் அருகே வந்தவள், "அவங்க ஏற்கனவே அடிப்பட்டு வேதனையோடு இருக்காங்க... இதுல நீங்களும்..." என முழுதும் முடிக்காமல் கணவனை, "வேண்டாமே" என்பது போல் இறைஞ்சுதலோடு பார்த்தாள்.

அவனோ அதைப் புரிந்தும், "நீ சும்மா இரு, நான் கேட்க வேண்டியதெல்லாம் கேட்டு விடுறேன்... அப்புறம்... அப்புறம்... அவங்க... எந்த முடிவு... வேணாலும் எடுக்கட்டும்" எனக் கண்கலங்க, அவன் சொல்லவும், அவனால் அண்ணி என்று அழைக்கப்பட்ட பெண்மணி, மெல்ல தன் கையால், தன் அருகே இருந்த அவன் கையை அழுத்தி, "சக்தி..." எனக் குரல் கொடுத்தார். அந்த அழைப்பிலேயே "என்னை மன்னித்து விடு" என்ற தொனி இருந்தது.

தன் கணவனின் வருத்தத்தைக் கண்டு, அவன் துயர் துடைக்க அவனருகே நெருங்கினாள், அவன் மனைவி. அவன் தோளைப் பற்றி அழுத்தி, ஆறுதல் படுத்தியவளின் கைகளின் மீதே, தன் முகம் புதைத்து, "ப்ரியா... நான் எப்படியெல்லாம் இவங்கள பார்த்துக்கணும்னு... கனவு கண்டு வச்சிருந்தேன். இப்ப அது நினைவாகும் போது... இப்படிப் பண்ணிட்டாங்களே... அவன் ஏதோ சின்னப் பையன்... புரியாம பேசிட்டான்... அதுக்காக... என்ன மறந்து... எதையும் நினைச்சு கூடப் பார்க்காம... இவங்க இப்படிப் பண்ணலாமா?

"இவங்க என்ன விட்டுட்டு போயிட்டா... நா... நா மட்டும் இருந்திருவேனா? என் தெய்வம் டி... இவங்க... ஏன் அதுக்கும் மேல..." என இப்படியே புலம்பியவனைக் கண்ட, அந்தத் தாயுள்ளம் பதறி, கண்ணீர் மல்க, "எனக்காக எடுத்து பேசி... ஏதாவது செய்யேன்" என ப்ரியாவிடம் கண்களாலே கெஞ்சினார்.

அவளும் கண்களாலே, "நான் பார்த்துக் கொள்கிறேன்" என அவருக்குப் பதில் சொல்லி, தன் கணவனை நிமிர்த்தி, "என்னங்க... இது ஹாஸ்பிட்டல். ப்ளீஸ்... உங்கள கன்ட்ரோல் பண்ணிக்கோங்க. நான் அண்ணியப் பார்த்துக்கிறேன். நீங்க போய்ச் சாப்பிட்டிட்டு, எனக்கும் சாப்பாடு வாங்கிட்டு வாங்க" என அவனைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.

அவனும், தன்னிலை அடைந்து கண்களைத் துடைத்துக் கொண்டு, "நீ எத பற்றியும் கவலைப்படாத அண்ணி, உனக்காக நா இருக்கேன்" என அவர் தலையை வாஞ்சையாய் தடவி, அவர் கண்கள் தளும்பத் தலையாட்டவும், "பத்திரமா பார்த்துக்கோ... ப்ரியா..." என மனைவியிடம் சொல்லிவிட்டு, அவள் சொன்னதைச் செய்வதற்குச் சென்றான்.

பின் செவிலியர் வந்து, அவருக்கு ஊசியைச் செலுத்தி விட்டு செல்ல, மருந்தின் வேலையினால், மெல்ல துயில் கொண்டார், அந்தப் பெண்மணி. ப்ரியா அவரருகே அமர்ந்து, மெல்ல தன் நினைவுகளைப் பின்னோக்கி நகர்த்தி, தான் இவர்களின் அன்பான கூட்டுக்குள் நுழைந்த காலத்தை அசைப்போட்டு கொண்டிருந்தாள்.

ன்று அவள் பெற்றோர்கள், அவளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வருவதாகவும், ஆனால் அவர்கள் வீட்டிற்கு வராமல், அங்கு அருகே இருந்த கோவிலுக்கு வர சொல்லியிருப்பதாகக் கூறினார்கள். அவளும் ஒப்புக்கொண்டு, மறுநாள் தன் பெற்றோருடன், மிதமான ஒப்பனையில், ஒரு அழகான புடவையைக் கட்டி தயாரானாள்.

கோவிலில் இவர்கள் காத்திருந்த வேளையில், சக்திவேலனும், அவனுடன் அவன் அண்ணி மலர்மதியும் என இருவர் மட்டும் வந்திருந்தார்கள். சக்திவேலனின் பெற்றோர்கள் சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும், தற்போது தன் அண்ணனின் மனைவி மற்றும், அவரின் பன்னிரண்டு வயது மகனோடும் இருக்கிறான் என்று ப்ரியா வீட்டினருக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இரு குடும்பமும் மற்றவர்களை வரவேற்கும் விதமாகப் புன்னகைத்து கொண்டனர். பின் சக்திவேலனுக்கு, ப்ரியாவை பார்த்த மாத்திரத்திலே திருப்தியாகப் பட, பிரியாவுக்கும், மாநிறமாய், லட்சணமாய் இருந்த சக்திவேலனை பிடித்துப் போய், லேசான வெட்கத்தோடு, அவள் தலைக்குனியும் போது, சக்திவேலன், தான் அவளுடன் தனியாகப் பேச வேண்டும் என்றான்.

கோவிலுக்கு வெளியே இருந்த, குளக்கரைப் படியில், அமர்ந்திருந்த ப்ரியா, "சொல்லுங்க... என்ன பேசணும்" எனச் சக்தியிடம் வினவினாள்.

அவனோ எதில் இருந்து ஆரம்பிப்பது எனக் குழம்பினான், வழக்கம் போல் பெண் பார்க்க செல்லும் எல்லா மாப்பிள்ளைகளும் கேட்பது போன்றே "என்ன பிடிச்சிருக்கா... உன... உங்களுக்கு..." எனக் கேட்டான்.

அவளோ வெட்கத்தோடு ம்ம் கொட்டினாள். சக்தியோ "சந்தோஷம்... ஆனா அதுக்கு முன்ன உங்கக்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த பற்றிப் பேசணும். அதுக்கப்புறம் நீங்க உங்க முடிவ சொன்னா போதும்" எனக் குளத்தைப் பார்த்தாவாறே கூறினான்.

அதற்கும் "இம்" என்றாள். சக்தி, தன் அன்னைக்கும் மேலாய், தான் வணங்கும் தெய்வமாய்ப் போற்றும் தன் அண்ணி மலர்மதியை பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். சிறு வயதிலேயே தன் அன்னையை இழந்து, தந்தை மற்றும் அண்ணனின் பராமரிப்பில் தான் வளர்ந்தான் சக்தி. சக்திக்கும் அவன் அண்ணனுக்கும் பதினைந்து வயது வித்தியாசம், அதனால் சிறு குழந்தையான சக்தியைக் கவனித்த அவன் தந்தை, தன் பெரிய மகனை கவனிக்கத் தவறி விட்டார்.

பின் வேலைக்குச் செல்ல வேண்டிய வயதில், நிலையான வேலையில்லாமல், கெட்ட சகவாசத்தால் தினமும் குடித்து விட்டு வந்த அண்ணன் செல்வத்தின் போக்கு, அவன் தந்தைக்கு வேதனையை அளித்தது. பின் அவர் நோய் வயப்பட்டு, அவரது உடல் நிலை மோசமடைந்த தருவாயில், அவசர அவசரமாய் அவர்கள் சொந்தத்தில் இருந்த மலர்மதியை, செல்வத்திற்குத் திருமணம் முடித்து வைத்தனர். அப்போது சக்திக்கு பத்து வயது நடந்து கொண்டிருந்தது. இவர்கள் திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே சக்தியின் தந்தை இறந்து விட, "அப்பா... அப்பா..." என அழுது கரைந்த சக்தியை, மலர் தான் அரவணைத்து ஆறுதல் படுத்தினாள்.

வீட்டிற்கு ஏற்ற குத்து விளக்காய், அன்பும் கருணையும் நிறைந்தவளாய் இருந்தாள் மலர். ஆனால் அவள் கணவன் செல்வமோ, முக்கனாங்கயிறு இல்லாத காளையாய், அவனின் கலாட்டாக்களும் குடியும் அதிகமாகியது. முன்பாவது, அவனை அதட்ட, அவன் தந்தை இருந்தார். அவருக்குப் பயந்தோ அல்லது மரியாதை நிமித்தமாவோ குடித்தாலும், அளவோடு முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்து விடுவான்.

இப்போது அவர் இல்லாத வீட்டில், இவன் தலைவனாய் ஆன தலைக்கணத்திலோ, தன்னைத் தட்டிக் கேட்க, ஆள் இல்லாத தைரியத்திலோ அவனின் ஆட்டம் அதிகமாகியது. தினம் குடித்து விட்டு, மலரிடம் சண்டை போடுவது அல்லது மலரின் வீட்டை, அவர்களின் ஏழ்மையை மட்டம் தட்டி பேசுவான். அண்ணனின் கத்தலைக் கேட்டு மிரளும் சிறுவனான சக்தி, தன் அண்ணியின் மடியில் போய்த் தஞ்சமடைந்து கொள்வான்.

மலரும், தினமும் விடிந்ததும், அவனிடம் அவன் தவறுகளை நயமாய் எடுத்து சொல்ல தான் செய்வாள். ஆனால் அவனோ "எல்லாம் எனக்குத் தெரியும், நீ போ..." என அதற்கு முற்று புள்ளி வைப்பான். ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல், கிடைத்த வேலையெல்லாம் இழக்க தொடங்கினான். இந்நிலையில் மலர் கர்ப்பமானாள். குழந்தையின் வரவினாலாவது, இனி தன் கணவன் திருந்தி விடுவான் என எண்ணி சந்தோஷமடைந்தவள், அந்த நம்பிக்கையோடும், குழந்தைத் தனம் மாறாது, தன்னிடம் அன்னையைக் காணும் சக்திக்காகவும், செல்வத்தின் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு இருந்தாள்.

ஆனால் எந்த நம்பிக்கையைக் கையில் பிடித்துக் கொண்டு, நிம்மதியாய் இருந்தாளோ, அந்த நம்பிக்கையைத் தூள் தூளாக்கினான் செல்வம். இத்தனை நாளும் குடியும், வீட்டில் கலாட்டா செய்வதுமாய் இருந்தவன், மலர் வளைகாப்பு முடிந்து தன் தாய் வீட்டிற்கு, கையில் சக்தியோடு சென்று விடவும், சுதந்திரமாய் வீட்டிற்கே பெண்களை அழைத்து வந்து கூத்தடிக்கவும் தொடங்கி விட்டான்.

விசயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்தவள், கணவனை இழந்து தனியாளாய் தன்னை வளர்த்து ஆளாக்கிய தாயுடனே, குழந்தை பிறந்த பின்னும், புகுந்த வீடு செல்லாமல் தாய் வீட்டிலேயே இருந்து விட்டாள். பிறந்த தன் மகனுக்கு, சகதோரனாய் சக்தி இருக்கட்டும், என இரு குழந்தைகளையும் சேர்த்து ஒன்றாய் வளர்த்தாள்.

பின் ஆறு மாதம் கழித்து, சொந்த வீட்டையும் தொலைத்து விட்டு, வெறுங்கையுடன், செல்வம் மலரை தேடி வந்தான். குழந்தை பிறந்த போது வராதவன், ஏன் மலரின் தாயார், தன் மகளின் வாழ்வை, தானே பாழாக்கி விட்டோம் என எண்ணி எண்ணியே கவலையோடு காலமான போதும் வராதவன், இன்று வந்துள்ளானே என யோசனையோடு பார்த்தாள் மலர். சக்தி கூட அவனை முறைத்து தான் பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.