(Reading time: 14 - 28 minutes)

னால் இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினையாமல், செல்வம் தன் நடிப்பை அழுகையோடு தொடர்ந்தான். பெண்ணின் இதயம், இரத்தத்தால் சூழப்பட்டு இருக்கிறதோ இல்லையோ, இரக்கத்தால் சூழப்பட்டுத் தான் இருக்கும் போல. இது எல்லாம் படைத்த பிரம்மனின் தவறு போலும். ஆம், அவனும் ஒரு ஆண் தானே!

அதனால் மலரும் தன் கணவனை நம்பி புகுந்த வீட்டிற்கு அல்ல, தான் இருந்த தாய் வீட்டிலேயே, அவனுக்கு அடைக்கலம் தந்தாள். ஒரு மாதம் நன்றாகத் தான் சென்றது. மீண்டும் செல்வத்தின் சுயரூபம் தலை தூக்க ஆரம்பித்தது. குடித்து விட்டு வந்தது போதாதென்று, தன் குடி செலவுக்கு அவளிடம் பணத்தையும் பிடுங்க ஆரம்பித்தான். உச்சக்கட்டமாய்... கடைசியில் தன் மனைவி மலரையே, பணத்திற்காக அடுத்தவனுக்குத் தாரை வார்க்கவும் துணிந்தான்.

மலரை தேடும் வண்டாய், தன் கணவன் திரும்ப வந்திருந்தாலும் பரவாயில்லை, அவனை ஏற்றிருப்பாள். ஆனால் மலரையே துண்டாக்கும் எண்ணத்தோடு தான் வந்துள்ளான் என்பதை அறிந்து, பொங்கி எழுந்தாள். அங்கிருக்கும் அக்கம் பக்கத்தாரின் துணையோடு, தன் கணவன் எனும் கயவனைக் காவல் நிலையத்தில் புகார் செய்து, அவனை உள்ளே தள்ளி, இனி தன் வாழ்வில் வராதப்படி சட்டப்படி பிரிந்தும் விட்டாள்.

பின் மீண்டும் ஒரு புது வாழ்வை, தன் மகனோடும், சக்தியோடும் தொடங்கினாள். அவர்களை வளர்த்து ஆளாக்கி, நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து, இதோ இப்போது சக்தி படிப்பில் முதல் மாணவனாய் வந்து, வேலையும் பெற்று, கை நிறையச் சம்பாதிக்கவும் தொடங்கினான். அதனால் தான் அவனுக்கு மணமுடிக்க, ப்ரியாவை காண வந்தனர்.

ப்ரியாவும், பொறுமையாய் அவன் சொன்னக் கதையைக் கேட்டு, மலரின் வாழ்வை எண்ணி சிறிது துயர் கொண்டாலும், மேற்கொண்டு சக்தி சொல்லப் போவதை கேட்க தயாரானாள். "அதனால, எனக்கு வரப்போற மனைவியும், என் அண்ணியை நல்லப்படியா ஒரு தாய் போலப் பார்த்துக்கணும்னு நான் எதிர்ப்பார்க்கிறேன்." என முடித்தான்.

இப்போது ப்ரியாவின் பதிலுக்காக, அவள் முகத்தைப் பார்த்தான். அவளோ "கண்டிப்பா... ஆனா பார்த்துக்குறேன் சொல்ல முடியாது, ஒரு வேளை என் செயல் அவங்களையோ, இல்ல அவங்க செயல் என்னையோ காயப்படுத்தலாம், அதுனால அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்குவேன். அதுக்கு உங்க ஒத்துழைப்பும் தேவை." என எதார்த்தமாய் மொழிந்தவளை, சக்திக்குப் பிடித்துப் போய் விட்டது. "கண்டிப்பா என் அண்ணி அப்படிப் பண்ணமாட்டாங்க. அது உனக்கே தெரிய வரும்" எனத் தன் அண்ணிக்கு அக்மார்க் சான்றிதழ் வழங்கினான்.

அவன் சொன்னது போலவே திருமணத்திற்குப் பின் மலரும், ப்ரியாவை ஒரு மகள் போலவே நடத்தினாள். ப்ரியாவும், மறுவீடு சென்ற போது, "ப்ரியா மா, அங்க இருக்க அந்த மலர கத்தரிச்சு விட்டுட்டேன்னா, நீ பாட்டுக்கு மாப்பிள்ளையும், நீயும் தனியா சந்தோசமா இருக்கலாம். மாமியார், மாமனார், நாத்தின்னு பிடுங்கல் இல்லாத வீடுன்னு தான், அண்ணி இருந்தாலும் பரவாயில்லன்னு சம்மதிச்சேன். மாப்பிள்ளைக்கிட்ட எப்படிச் சொன்னா கேட்பாரோ, சமயம் பார்த்து சொல்லி, அந்த மலரையும், அவ புள்ளையையும் வீட்ட விட்டு அனுப்பிடு" எனச் சொன்ன தன் தாயை வெறுமனே ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

பின் இவர்கள் திருமணமும் முடிந்து, ஆறு மாதங்கள் கடந்த நிலையில், "என்ன ப்ரியா இன்னுமா நீ தலைக்கு ஊத்திட்டு இருக்க... நல்ல செய்தி எப்போ சொல்லப் போற? உனக்கும் கல்யாணம் பண்ணி மாசம் ஆறு ஆச்சே" எனத் தன் பிறந்தகத்துக்குச் சென்ற போது, தாய் கேட்ட கேள்விக்கு, "எப்படி மா உனக்குப் பேரப் பிள்ளைங்க பிறக்கும்? ஒரு பிள்ளைய அவங்க அம்மாட்ட இருந்து பிரிக்க நினச்சேல... அதான் உன் பிள்ளைக்கு இன்னும் நல்லது நடக்காம இருக்கு" என்று சொன்னாள்.

அவளைப் புரியாது பார்த்தவரை, "என்னமா முழிக்கிற... என் வீட்டுக்காரர், அவங்க அண்ணிய அம்மாவ தான் பார்க்குறார். அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு என் புருஷன்ன படிக்க வச்சிருக்காங்கன்னு தெரியுமா? அப்படிப்பட்டவங்கள நீ வெளிய துரட்ட சொல்லுற... உன்னால நல்லது செய்ய முடியலேன்னாலும், அடுத்தவங்கள செய்ய விடு மா. எல்லோரும் மகளுக்குத் தான் புத்தி சொல்லுவாங்க. இங்க நான் சொல்லுறேன், கொஞ்சமாவது நீ நல்லது நினச்சு, செஞ்சா தான், உன் பிள்ளைங்க வாழ்க்கை நல்ல படியா இருக்கும். அத நினைவுல வச்சுக்கோ" மேலும், "இனிமே என்ன பார்க்க வரேன் மாப்பிளைய பார்க்க வரேன்னு வீட்டுப் பக்கம் வராத" எனச் சொல்லி சென்றாள்.

பிரியா இப்படிக் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது, ப்ரியாவின் தாயார், மகளைக் காண வருகிறேன் என்று பேர் பண்ணிக் கொண்டு வந்தாலும், அமைதியாய் இருக்க மாட்டார். ஏதாவது பேசி, மலரை ஜாடைமாடையாய் திட்டுவது, இல்லை என்றால் பணி ஏவுவது என்றிருப்பார். ஆனால் மலரோ, அவர் சென்றதும், ப்ரியாவிடம் ஏன் எனக் கூடக் கேட்க மாட்டள், முகத்தையும் திருப்ப மாட்டாள், என்றும் போல் அமைதியாய் இருந்து கொள்வாள்.

இப்படி எந்த வித பிரச்சனையும் இல்லாது, நீரோடை போல் சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், செல்வம் மீண்டும் வந்து கல்லெறிய தொடங்கினான். அதுவும் லாவகமாய், மலரின் மைந்தன் ரகுவை கைக்குள் வைத்துக் கொண்டு, அந்தச் சிறுவனின் தந்தை பாசத்தைப் பகடைக் காயாக்கி கொண்டு, சூடாட ஆரம்பித்தான்.

ஆம், ரகுவின் தந்தைக்கான பாசத்தையும், ஏக்கத்தையும் தனக்குச் சாதகமாக்கி, அவனை அடிக்கடி சந்தித்து, அவனுக்கு அவன் தாயைப் பற்றி அவதூறும், அவனின் சித்தப்பாவை பற்றித் தவறாகவும் சொல்லி, இருவரும் சேர்ந்து இருக்கத் தான், தன்னை விரட்டி விட்டார்கள் என நீலிக் கண்ணீர் வடித்தான். முதலில் அவர்கள், இதைக் கண்டு கொள்ளவில்லை, அவன் நண்பர்களோடு விளையாட தான் செல்கிறான் என எண்ணினர், பின் அவனின் நடவடிக்கையில் மாற்றம் வரவும், சக்தி தான், செல்வத்தோடு ரகு செல்கிறான் என்பதனைக் கண்டு, கண்டித்தனர்.

மேலும் ஒரு நாள் வீட்டிற்கே வந்த செல்வம், ரகுவை உரிமையாய் அழைத்துச் செல்ல, அதைக் கண்ட மலர், தன் மகனின் கையைப் பற்றித் தடுக்கப் போக... அவனோ தன் தாயை உதறி "சீ... விடு என்ன... தே-----" எனச் சொல்லக்கூடாத வார்த்தைகளை உதிர்க்க... பிரியா இதைக் கேட்டு ஸ்தம்பிக்க... மலரோ ஒரு நொடி விரைத்தவள், மூளையே கலங்கி பிரமை பிடித்தவள் போன்று அசையாது நின்றாள் 

தன் மகன் சென்ற திசையையே கண்ணில் நீர் மல்க பார்த்தவள், பத்து மாதம் சுமந்து பெற்று, பாராட்டி சீராட்டி வளர்த்த தன்னை, அவன் குறிப்பிட்ட வார்த்தையே அவள் மூளையில் வலம் வர, இந்தப் பூமி பிளந்து தன்னை விழுங்காதா என எண்ணியவள், இனி தான் உயிரோடு இருப்பதில் அர்த்தம் இல்லை என அப்படியே வெளியே சாலைக்கு ஓடினாள் 

நல்ல வேளை, சக்தியின் புண்ணியமோ அல்லது மலரின் தர்மமோ, கன ரக வாகனங்கள் வராமல், ஒரு ஆட்டோ எதிரே வந்து அவளை மோதி கீழே சாய்த்தது. அப்போது தான் வேலை விட்டு வந்த சக்தி, சாலையில் தன் அண்ணி மயங்கி விழுந்து கிடப்பதை அறிந்தவன், மின்னல் வேகத்தில் செயல்பட்டு மருத்துவமனையில் சேர்த்த பின் தான் நடந்ததை அறிந்தான். இரண்டு நாட்கள் சக்தியை துடிக்க வைத்து, அதன் பின்னே கண் விழித்தாள் மலர். நல்ல வேளை உயிர் பிழைத்ததால், சரியாயிற்று, இதுவே எதுவும் ஆகியிருந்தால்? அந்த நினைவே அவனை அதிர்ச்சியடையச் செய்ய, அதனால் தான் அவன் இவ்வாறு குமுறிக் கொண்டிருந்தான் 

ஆனால் உயிர் பிழைத்து விட்டோமே என்று வருத்தப்பட்ட மலர், சக்தியின் பேச்சினால் ஓரளவு ஆறுதலாய் இருந்தார். சக்தியும், ரகுவை பழையப்படி மாற்றி, அவனை அழைத்து வருவது தனது பொறுப்பு என வாக்கு கொடுக்கவும் தான் தெளிந்தாள் மலர். மறுநாள், மருத்துவமனையில், சாப்பாடு வாங்கி வந்த சக்தி, ப்ரியாவிடம் தர, அதைப் பிரித்து ஒரு வாய் உண்ணும் போதே, குமட்டிக் கொண்டு வர, அவள் குளியலறை செல்லும் போதே, "என்னாச்சு ப்ரியா..." எனப் பதறினான் சக்தி.

அதில் கண்விழித்த மலர், திரும்பி வந்த ப்ரியாவின் முகத்தைப் பார்த்தவர், சக்தியை சற்று நேரம் வெளியே இருக்கும் படி சொல்லி விட்டு, அவளிடம் விசாரிக்க, அவளோ வெட்கப்பட்டுக் கொண்டே அதை உறுதி செய்ய, மலர் "டேய்... சக்தி..." எனக் கூவ, என்னவோ ஏதோ என உள்ளே வந்தவனிடம் "சக்தி... நீ... நீ அப்பாவாகிட்ட டா..." என உள்ளம் உவகையில் பொங்க, சந்தோசத்தோடு தெரிவித்தார்.

அன்று மதியமே, ப்ரியாவை தனது அன்பு மழையில் நனைய வைத்தார் மலர். "இனிமே ஒழுங்கா நேர நேரத்துக்குச் சாப்பிடனும், அதுவும் பழம் கீர தான் சாப்பிடனும் நான் சக்திட்ட சொல்லி பழம் வாங்கிட்டு வர சொல்றேன். அப்புறம், நான் உனக்கு வாய்க்கு ருசியா மாவடு போட்டு, புளி காய்ச்சல் பண்ணி தரேன். இந்தச் சக்தி எங்க மா காணாம போயிட்டான். எவ்ளோ வேல இருக்கு, என்ன வீட்டுக்கு விடாம இங்க அடச்சு வச்சிருக்கான்" என என்னவோ சக்தி அவரை மருத்துவமனையில் சிறை வைத்தது போல் புலம்பியவரைக் கண்டு புன்னகைத்தாள் ப்ரியா.

குழந்தை என்றதுமே, ப்ரியா "அக்கா... எனக்காக என் பிள்ளைக்காக, நீங்க எனக்கு வேணும் கா. நிஜமாவே என்ன உங்க தங்கச்சியா நினச்சா... இது மாதிரி ஒரு காரியத்த இனிமே பண்ண மாட்டேன் என் மேல சத்தியம் பண்ணுங்க கா" என அழுதாள். பெற்ற பிள்ளையை விடப் பெறாத இந்த இரு குழந்தைகளுக்காக, இனி வாழ வேண்டும் என அக்கணமே முடிவு செய்தார்.

எல்லோருக்கும் இனிப்பை வழங்கி விட்டு வந்த சக்தியிடம், "ஏய் சக்தி... உனக்குக் குழந்த பிறக்க போற சந்தோசத்துல, என்ன மறந்துட்டேல..." எனச் சண்டை பிடித்தவர், "சீக்கிரம் என்ன டிசஸ்சார்ஜ் பண்ண சொல்லு. நான் வீட்டுக்கு போய், என் கையால இனிப்பு செஞ்சு நான் கொண்டாட வேண்டாமா?" என உரிமையாய் கோபித்துக் கொண்டார் அவனிடம். வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும், சிறிய அளவு பாசத்திற்காக, சிறு குழந்தையென மலையளவு சந்தோசப்படும் தெய்வம் தான் பெண்.

This is entry #43 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.