(Reading time: 16 - 32 minutes)

இளமை எனும் பூங்காற்று – புவனேஸ்வரி கலைசெல்வி

ப்ரண்ட்ஸ் , நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறுகதையில் உங்களை சந்திக்கிறேன் .. இது முழுக்கவும் கற்பனை கதைதான் .. ஆனால்  இப்படி கதை பின்னணியில் கூட சிலரின் வாழ்க்கை இருக்கலாமோ ? என்ற கற்பனையை உங்கள் முன் வைக்கத்தான் இந்த கதை .. சொல்ல வந்த கரு வேறு என்பதினால் சில சம்பவங்களை ரொம்பவும் நுணுக்கமாக எழுதவில்லை .. இந்த கதையை பற்றிய உங்களது பார்வையை எதிர்பார்கிறேன் .. இது யாருக்கு சமர்ப்பணம்ன்னு கதை இறுதியில் சொல்லுறேன் ..

விடிந்தும் விடியாத காலை பொழுது !

நெரிசல் இல்லாத நெடுசாலையில் சீரான வேகத்தில் பாய்ந்தது பவித்ராவின் கார்..

" திவ்யம் மகப்பேறு மருத்துவமனை " யின் நிர்வாகியும், புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் என்ற கீர்த்தியையும் இளம் வயதிலேயே அடைந்தவள் அவள்..

Ilamai enum poongatruதிவ்யம் மகப்பேறு மருத்துவமனை .. பெயருக்கு ஏற்றது போல திவ்யமான மருத்துவமனையா இது ? அங்கு பணிப்ப்புரிவர்களை மட்டிலும் ஆம் ! மருத்துவத்துறை என்பதே அர்பணிப்பாக கருதப்படும் சிறந்த தாதிகளையும்  மருத்துவர்களையும் பெற்ற இடம் இது . சேவையை பொருத்தவரை திவ்யமான இடமிது .. ஆனால் அங்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் திவ்யமானதா ?

லேசாய் கைகள் நடுங்கியது அவளுக்கு ! வலது கை செய்யும் உதவியை இடது கைக்கே தெரியாமல் பார்த்து கொள்வது போல , அவளை பொருத்தவரை இடதுகையால் அவள் செய்பவையை  வலது கைக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ள பெரும்பாடு படுகிறாள் அவள் .. இறைவன் குடியிருக்கும் மனம் எனும் நீதி மன்றத்தில் கூட அவளுக்கென்று நீதி இல்லை ..

அவள் மீது குற்றமில்லை ! அவள் மீது நியாமும் இல்லை !

அவள் அதர்மத்தையும் விதைக்கவில்லை  ! அவள் தர்மத்தையும் அறுக்கவில்லை !

அவளை செய்வதை நியாயப்படுத்துவதே அடுத்தவரின் கண்ணீர் துளிகள் தான் ..

" ஆம் , ரொம்ப நன்றி டாக்டர் .. எங்க வம்சத்தை தழைய வெச்சுட்டிங்க  " என்று இனிப்புடன் ஆனந்தமாய் பேசுபவர்களின் கண்ணீரும்

" இந்த உதவியை மறக்கவே மாட்டேன் , எனக்கு நீங்க மறுவாழ்வு தந்து இருக்கீங்க " என்று குற்ற உணர்வுடன் தலைகுனிந்து கொண்டு பெண்கள்  சிந்தும் கண்ணீரும் தான்  !

ஆம் , கரு மலர்ந்து சிசுவாகி பூமிக்கு வரவழைப்பவள்தான்  , இன்னொரு புறம் கருச்சிதைவிற்கும் காரணமாய் இருந்தாள்  .. கடலினளிங்களுக்கும் மாந்தருக்கும் உதவும் சமுத்திரமானது என்றாவது பொங்கி எழுந்து உயிர்பசி கொள்வது போலவே .. இவளது வலது கரம் உயிர் தந்து , இடது கரம் உயிரை ஆரம்பத்திலேயே உறங்க வைக்கிறது ..

அவளை எண்ணி அவளை சுற்றி உள்ள நண்பர்களுக்கு என்றுமே பெருமைதான் .. ஆம், பெருமைபட்டு வாழ்த்துவதற்கு அவளது பெற்றோர்கள் தற்பொழுது சுவர்க்கத்தில் தான் இருந்தனர் ..

அனைவரை பொருத்தவரை அவள் கடவுள் .. ஆனால் அவளுக்கு அவள் யார் ??

காரில் நிலவிய மௌனத்தை கலைப்பதற்காக வானொலியை உயிர்ப்பித்தாள் பவித்ரா. அன்று , அவள் தனது  கடந்த காலங்களை அசைபோட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது போலும் .. வானொலியில் ஒலித்த அந்த பாடல் ,அவளை விழித்தெழ செய்தது ..

இளமை எனும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுதில் ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை  ஒரே ராகம்

உச்சி முதல் பாதம் வரை பதற்றத்துடன் மின்சாரம் பாய்ந்தது பவித்ராவிற்குள் .. நினைக்க மாட்டேன் .. அதை நான் நினைக்கவே மாட்டேன் என்றபடி அவள் தனது மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்குள் அவள் அகக்கண்கள் கடந்த கால காட்சிகளை கண்முன் நிறுத்தின..

னது மருத்துவ கல்வியின் இறுதியாண்டு படிப்பில் தீவிரமாய் கவனம் செலுத்தி கொண்டிருந்தாள் பவித்ரா. நல்ல குடும்பம் என்ற பெயரும் , தந்தையின் அயராத உழைப்பு தந்த செல்வமும் தேவைக்கு அதிகமாகவே இருப்பதினால்  பணவசதியில் அவளுக்கு எந்தவொரு குறையுமில்லை .. அவளுக்கென்று இருந்த ஒரே நல்லுறவு அவளது  தங்கை பனித்ரா..

" திரு ... திரு எழுந்திரு டீ ... காலேஜ் போகலையா நீ ?" என்று தங்கையை உலுக்கி எழுப்பினாள்  பவித்ரா ..

" ம்ம்ம் என்னக்கா ?"  என்று மெல்லிய குரல் எழுப்பி, பூமி தாய்க்கு வலிக்குமோ என்று பயந்தபடி தரையில் பாதம் பதித்து எழுந்தாள்  பனித்ரா.. பனித்ரா, பவித்ராவை விட 3 வயது இளையவள் .. தந்தையின் தொழிலை கவனிப்பதற்காகவே வணிக மேலாண்மை துறையை தேர்ந்தெடுத்து படிப்பவள் ... பவித்ரா கண்டிப்பானவள், தைரியசாலி , எதையும் குரல் உயர்த்தி பேசுபவள் என்றால் பனித்ரா  அவளுக்கு நேரெதிர் .. பெயருக்கு ஏற்றால் போல பனி போன்று மென்மையானவள் .. இயல்பாகவே மென்மையான மனம் கொண்டவள் .. அவளது ஒவ்வொரு செய்கையிலும் பெண்மையும் மென்மையும் மிளிர்ந்திர்க்கும் .. அதிர்ந்து பேச தயங்குபவள் ..

பவித்ராவிற்கு புத்தகம் படிக்கும் பழக்கமும் உண்டு .. பொதுவாக சில கதைகளில் கதாநாயகி பெண்மையின் , மென்மையின் மொத்த உருவமாக சித்தரிக்க பட்டிருப்பதை படிக்கும்போதெல்லாம் பவித்ராவிற்கே  சந்தேகம் எழும் .. உண்மையில் ஒரு பெண்ணால் இப்படி இருக்க முடியுமா ? அல்லது இதுதான் பெண்களின் இயற்கை சுபாவமா என்று ! அதற்கு எடுத்து காட்டாய் அவள் எதிரிலேயே நடமாடுவாள் பனித்ரா ..

" குட் மோர்னிங் அக்கா "

" மோர்னிங் திரு ... காலேஜ் போகலையா ? எனக்கு இன்னைக்கு சீக்கிரம் போகணும் டா .. முத்து அண்ணா , உன்னை காலேஜில் விடுவார் . நான் சமைச்சு வெச்சிட்டேன் .. பத்திரமா காலேஜ் சேர்ந்ததும் எனக்கு மெசேஜ் பண்ணு " என்றபடி மெல்லிய முத்தமொன்றை தங்கையின் நெற்றியில் பதித்தாள்  பவித்ரா .. அவளிடம் பேசும்போது மட்டும் தானும்  மிருதுவான மனநிலைக்கு மாறி விடுகிறோமோ ? என்று எப்போதும் போல  வியந்தாள்  பவித்ரா ..

" சரி அக்கா " என்று சுருக்குமாய் பதிலளித்து  அன்றைய தினத்தை துவக்கினாள்   பனித்ரா... அக்கா செல்லும்வரை பொறுமையாய் இருந்தவளின் மனதில் அவள் சென்றவுடன் மெல்ல கலவரம் பரவியது. காரணம் அவன்தான் .. அவனேதான் !

" ஹே மான்குட்டி நாளைக்கு நீயே என்னை தேடி வந்து காதல் சொல்லணும் .. இல்லன்னா  என்னை உயிரோடு பார்க்க முடியாது .. என் ப்ரண்ட்ஸ்  எல்லாருக்குமே நான் உன்னை காதலிக்கிறேன்னு தெரியும் . என் சாவுக்கு நீதான் காரணம்னு அவங்க சொல்லுவாங்க ஜாக்கிரதை " என்று கண்களில் சிரிப்புடன் அவளை மிரட்டி இருந்தான் பகலவன்  !

ச்ச , என்ன இவன் என்று முகம் சுளிக்கும் அளவிற்கு பகலவன்  நமது கதையின் வில்லன் இல்லை .. பகலவன்  , பார்பவரை மயங்க வைக்கும் பேரழகன்.. பனித்ராவை  உயிராய் நேசிப்பவன். பனித்ராவின்  மருண்ட விழிகளுக்கு கட்டுபட்டு அடிக்கடி அவளை செல்லமாய் மான்குட்டி என்றே அவன் அழைப்பான் .. அவளுக்கும் தன் மீது நேசம் இருக்கிறது என்பதை உறுதிபடுத்திவிட்ட மகிழ்வில் இப்படி அடிக்கடி அவளை சீண்டி பார்பான் .. இப்போதும் கூட , அவன் பேச பேச அந்த மருண்ட விழிகள் அவனது காதல் ததும்பி விழிகளுக்கு இறையாகிட , வேண்டுமென்றே அவளை மிரட்டி ரசித்தான் ..

தனது அக்காவிற்கு தெரியாமல் காதலில் விழுகிரோமே என்ற குற்ற உணர்வில் தான் அவனிடம் தனது மனதை மறைத்து வைத்திருக்கிறாள் பனித்ரா .. மேலும் அவன் தனது காதலை சொன்னதுமே சரியென்று தலையசைபப்து அவளது சுபாவமும் இல்லை அல்லவா ?

" போச்சு இன்று என்ன செய்ய போகிறானோ ?" என்று யோசித்து இன்ப அவஸ்தையை அனுபவித்தபடி  காலேஜிற்குள் நுழைந்தாள்  அவள்..

" ஜான் , இது கொஞ்சம் கூட நல்லா இல்ல மச்சான் .,.. இது படிக்கிற வயசு .. இப்படி அத்து மீறி நீ நடக்குறது நல்லா இல்லை .. ஜான்சி உன்னை உண்மையிலேயே நேசிக்கிறா மச்சி .. அவளை ஏமாற்றாதே "

" டேய் பகலவா, நான் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் நீ இதில் தலையிடாதே "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.