(Reading time: 16 - 32 minutes)

" ஹெலோ "

" ஹெலோ தங்கச்சி, நான் சந்துரு பேசுறேன்மா  " என்றான் அவன் விசும்பலுடன் ..

" சொல்லுங்க அண்ணா , என்னாச்சு ? ஏன் அழறிங்க ?"

" பகல் ..... பக .. பகலவன் நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டான்மா " என்று கதறி அழுதான் சந்துரு ..

அதிர்ச்சியில் உறைந்தே போனாள்  பனித்ரா .. பயத்தில் கைகள் சில்லிட முகமெங்கும் வெப்பம் பரவியது ..

" இருக்காது .... வனு  என்னை விட்டுட்டு போக மாட்டார் .. தன்னை நம்பி தன்னையே ஒப்படைச்சவளை  விட்டுட்டு போக மாட்டார் .. என் வனு  நிச்சயம் கோழை இல்லை .. எனக்கு தெரியும் " என்று தனக்கே தைரியம் சொல்லி கொண்டவள்

" என்ன ஆச்சு  சொல்லுங்க அண்ணா " என்றாள்  குரல் நடுங்க ..

" உன்னை பார்க்கத்தான் வண்டியை எடுத்துகிட்டு கிளம்பினான்மா .. அவன் முகமே சரி இல்லை .. நான் அப்போவே சொன்னேன் , நான் வண்டிய  ஓட்டுறேன்னு ... இல்லை மச்சான் பனி வீட்டில் போயி எங்க காதலை சொல்லி கல்யாணம் பேசியாகனும்னு  சொன்னான் ... என்னடா உலருறேன்னு கேட்டேன் ... என்ன நினைச்சானோ , சாரி மச்சான்னு சொல்லிட்டு போனான் .. இப்போ பார்த்தா ரோட் எக்சிடன்ட்ன்னு சொல்றாங்க ..எதிரில் லாரி வர்றதை பார்க்காமல் மோதி  ஸ்பாட்லயே  இறந்துட்டான்மா " என்று கதறினான் சந்துரு ..

" வனு !!!!!!!!!!!:" என்று அதிர்ந்து கத்தினாள்  பனித்ரா ..முதல் முறையாய் தங்கையின்  அலறலை கேட்ட பவி  அவளது அறைக்கு ஓடி வந்தாள் ..

" அக்கா .. அக்கா " என்றவள் எதையும் சொல்லாமல்

" என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க அக்கா " என்றாள் .. அந்த நிலையிலும் சூழ்நிலையை ஓரளவு யூகித்த  சந்துரு பவித்ரா போனை எடுக்கவும் , பகலவன் பனியின் நல்ல நண்பன் என்று கூறி  நடந்ததை கூறினான் .. போனை வைத்த பவித்ரா தங்கையை எப்படி சமாதனம் செய்வது என்று புரியாமல் விழிக்க , வார்த்தைகளுக்கு அவசியமே இல்லாமல் அவளை கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள்   பனித்ரா ..

மூன்று மாதங்கள் கடந்திருந்தது .. தங்கையின் மாற்றங்களை கவனித்தாள்  பவித்ரா .. ஜீவனே இல்லாமல் வளம் வருபவளை பார்க்க அவளுக்கு கொஞ்சம் சந்தேகமாய் இருந்தது .. பகலவனிற்கும்  அவளுக்கும் இருக்கும் உறவினை பற்றி நண்பர்களிடம் கேட்டு பார்க்கலாமா ? என்று அவள் யோசித்து கொண்டிருந்த வேளையில்தான்

பனித்ராவினுள் பகலவனின் இறுதி உயிர் உருவாகி இருந்தது ..

சந்தோஷமும் சோகமும் ஒன்றாய் கிளர்ந்தது அவளுக்குள் .. ஒரு புறம் தனது நிலை , குடும்பத்தின் கௌரவம் , அக்காவின் வாழ்வு என்று ஓர் உலகம் , இன்னொரு புறம் இதுவே பகலவன் அவளுக்கு முதலும் கடைசியுமாய் தந்து போன உறவு .. இனி அவளே நினைத்தாலும் அவளால் அவன் மழலைக்கு தாயாகிவிட முடியுமா என்ன ? ஒருவேளை அவன்தான் மகனாய் தன்னை காக்க வருகிறான் என்று தோன்றியது அவளுக்கு ..

ஆனால்  அவளது மனப்போராட்டம் எந்த விதத்தில் சமுதாயத்தின் பார்வையை மாற்றிவிட போகிறது ? தேகத்தின் தேடலிற்கு தான் இன்றைய இளைஞர்களுக்கு அவசரம் என்று அவதூறாய் பேசி கூனி குறுக வைக்கும் .. அதைவிட கொடுமை , அவளது அக்காவின் எதிர்காலம் !!!

வேண்டாம் , எனக்கு புண்ணியமாய் இருந்தாலும் என் அக்காவின் வாழ்வின் என் புதல்வன் பாவமாகிவிடுவான் .. இவனை நான் பாவத்தை சுமக்க விட மாட்டேன் .. அதே நேரத்தில் என் அக்காவையும் என்னால் தலைகுனிய வைக்க முடியாதே !

இறுதியாய் தன் அக்காவின் முன் வந்து நின்றாள்  வெளிநாட்டில் படிக்கிறேன் என்று ..

" கண்டிப்பா என்னை விட்டுட்டு நீ போகனுமா திரு ? நீ சின்ன பொண்ணு .. உன்னால எப்படி முடியும் ?"

" என்னை நம்புங்க அக்கா ப்ளீஸ் .. என்னால் இங்க இருக்க முடியல " என்றாள்  அவள் இறைஞ்சாளாய் .. கடைசியாய் தங்கையின் கெஞ்சல்  தான் அவளை  வென்றது ..இருப்பினும் மனதில் உறுத்திய அந்த கேள்வியை  கேட்டே விட்டாள்  பவித்ரா

" பனி , நீ பகலவனை நேசித்தாயா ?"

" முடிந்து போனதை பற்றி பேச வேண்டாம் அக்கா .. அதே நேரம் உனது கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது " என்றுவிட்டாள்  அவள் ..

சென்றுவிட்டாள்  பனித்ரா  வெளிநாட்டிற்கு .. பவித்ராவின் கண்பார்வையில் ஒரு தேசத்தின் பெயர்கூறி அவள் கண் மறைந்தவுடன், வேறொரு நாட்டிற்கு சென்று விட்டாள்  பகலவனின் உயிருடன் .. கடைசியாய் செல்வதற்கு முன்பு பவித்ராவின் கைகளில் அந்த கடிதத்தை கொடுத்து " இதை படிச்சு எனக்கு பாவ மன்னிப்பு கொடுத்திடு அக்கா " என்று கூறி இருந்தாள் ..

தோ தங்கையை வழி அனுப்பிவிட்டு  கடிதத்தை திறந்து படித்தாள்  பவித்ரா ..

அன்புள்ள அக்கா ,

அக்காவிற்கும் அம்மாவிற்கும் பெயரளவில் மட்டும்தான் பேதம் என்பதை வாழ்ந்து காட்டியவள் நீ ! ஆனால் நான் உனக்கு நல்ல தங்கையும் இல்லை , நல்ல மகளும் இல்லை .. அன்று கேட்டாயே எங்கள் உறவை .. இதோ சொல்கிறேன் கேள் .. ( நடந்தது அனைத்தையும் கூறி இருந்தாள்  பனித்ரா  கடிதத்தில் )

நானே ஒரு குழந்தை என்றாயே அக்கா .. ஆனால் நான் இன்று என் குழந்தையோடு பயணிக்க சென்றுவிட்டேன் .. நான் சுயநலவாதிதான் .. உன்னை தனியே விட்டுச்சென்ற கல்நெஞ்ச காரித்தான் .. எனினும் என் செய்வது ?

சமுதாயம் என்னை கைகாட்டி உன்னை நிராகரித்து விடக்கூடாது அல்லவா ? மாண்டும் , நல்ல பெயருடன் வாழ்ந்து வந்த நம் பெற்றோரின் பெயர் கெட்டுவிட  கூடாது அல்லவா ?

என் வாழ்வை பொருத்தவரை யார் அக்கா நிஜமான குற்றவாளி ? காதலா ? சூழ்நிலையா ? என் வனுவா ? அல்லது நான்னா  ? என்னை நீ புரிந்து கொள்வாய் ! ஆனால் உலகம் ? நாளை என் வனுவின் வம்சத்தை எவனோ இழிவான் ! தந்தை பெயர் அறியாதவன் என்பான் ! தகாத உறவின் சன்மானம் என்பான் ! இதை எப்படி என்னால் ஏற்க முடியும் அக்கா ?

சிறு நொடிகள் கொண்டுவரும் சுகமானது எத்தனை பேரின் வாழ்வில் தீ இறைக்கிறது ? என்னை போல எத்தனை பனித்ரா  பூமியெங்கும் இருக்கிறார்களோ ? ஆசைக்காக தன்னை இழந்தோர் பலர் என்றால் , அதில் காரணத்திற்காக தன்னை இழந்தவர் சிலர் .. பலரை பற்றி பேசிட எனக்கு விருப்பம் இல்லை .. ஆனால்  எங்களை போன்ற சூழ்நிலை கைதிகளின் நிலை என்ன அக்கா ?

எங்கள் புனிதத்தை நிரூபிக்க எங்கிருக்கிறது  அக்கினி ?  எத்தனை பெண்களின் விருப்பம் இல்லாமலே அவர்களின் பெண்மை சூறையாட படுகிறது ? அவர்களுக்கு எங்கு அக்கா  நியாயம் கிடைக்கிறது ? ஏன் அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் இல்லை ?

கற்பிழந்தவள் என்று அவர்களையும் , தந்தை பெயர் அறியாதவன் என்று சிசுவையும் சாடும் சமுதயாத்தில் நானும் இருப்பதா ? அதனாலே நான் கண்காணா தேச போகிறேன் அக்கா .. நிச்சயம் நான் கோழை இல்லை .. எனது வனுவிற்கு உயிர்கொடுப்பேன் ... தூரதேசத்தில் அவர் வணிகம் செய்வதாய்  கூறி என் மகனுக்கு பகலவனின் வாரிசு என்ற அடையாளம் தந்து தலைநிமிர்ந்து இருப்பேன் .. அந்த நாள் வரும்வரை காத்திருப்பேன் அக்கா ! அன்று  நான் உன்னோடு வந்திருப்பேன்

அன்புடன்

திரு (பனித்ரா )

வித்ராவின் பாதையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கடிதம் அது .. நேற்றுவரை " இந்த பிள்ளை எனக்கு வேண்டாம் " என்று கதறும் பெண்களை பார்த்ததுமே காரணம் அறியாமல் முகம் சுளிப்பவள் தான் அவளும், ... ஆனால் இன்றோ அவள் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு கதை .. மௌனமான கண்ணீரின் ஓசை அவளை மட்டும் தினமும் வந்தடைந்தது .. ஏதோ ஒரு வகையில் ஒரு குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்றி இருக்கிறோம்  , யாரோ ஓர் பெண்ணின் வாழ்கை மீட்டு எடுத்திருக்கிறோம்  என்று இப்போதெல்லாம்   நிம்மதி பெற்று கொள்கிறாள் பவித்ரா .. அன்றைய நிகழ்வுகளை பின்னே ஒதுக்கி விட்டு மருத்துவமனைக்குள் நுழைய  அவளுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது ..

ஓர் உந்துதலுடன் பிரித்து படித்தாள்  பவித்ரா ..

" அக்கா, உன் தங்கையின் மகனுக்கு தனது  பெரியம்மாவை பார்க்க வேண்டுமாம் .. மூன்று வயது சிறுவனிடம் உன் புகைப்படத்தை காட்டி விட்டேன் .. நீயும் அவனை பார்க்க வேண்டும் அல்லவா ? இதோ புகைப்படத்துடன் அன்பு முத்தங்கள் " 

சூழ்நிலையின் காரணத்தினால் தங்களை நியாயபடுத்தி கொள்ள முடியாத நிலையில் தடுமாறி இருக்கும்  பெண்களுக்கும் , இளமையின் வேகத்தில் மோகத்திற்கு அடிபணிந்துவிடாதே  என்று தங்கைகளுக்கு எச்சரிக்கவும் , மனதில் பெரும் போராட்டமே நிகழ்தாலும் அதை மறைத்து புன்னகைத்து சேவை புரியும் மருத்துவர்களுக்கும் இந்த கதை அர்ப்பணம் .. நன்றி

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.