(Reading time: 17 - 33 minutes)

ரே கல்லூரியில், ஒரே வகுப்பில் தான் இருவரும் படித்தோம். அவளைப் பார்த்த முதல் பார்வையிலே அவள் மீது காதல் கொண்டேன். ஆனால், என் காதலை கல்லூரியின் இறுதி ஆண்டின் தொடக்கத்தில் தான் கூறினேன்.

முதல் பார்வையிலே காதல் கொண்டாலும், அவள் மனதின் நறுமணத்தை உணர எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது.

உணர்ந்த மறுநாளே அவளிடம், எங்கள் கல்லூரியின் மைதானத்தில் தனிமையில் என் காதலை சொன்னேன். வழக்கம் போல் அதே பதில் தான்.

சாரி... நா உன்ன என் ஃப்ர்ண்ட்டா தான் பார்த்தேன். நீ இப்படி சொல்லுவனு நா எதிர்பார்க்கல... என்றாள்.

உடனே, நான் என் காதலை அவளுக்கு புரிய வைக்க, பேச முயன்றேன்.

இல்ல, நீ எதுவும் சொல்ல வேண்டா,

உன் மேல எனக்கு எந்த லவ்வும் வரல, உன் மேல மட்டுமில்ல,

எனக்கு யார் மேலயும் லவ் கண்டிப்பா வரவே வராது.

என் வீட்ல யார சொல்றாங்களோ அவர தான்

நான் கல்யாணம் பண்ணிப்பேன்.

என்று நிதானமாக என் கண்களைப் பார்த்துக் கூறினாள்.

உடனே, நான் வேகமாகப் பேசத் தொடங்கினேன்.

அப்ப, உங்க வீட்ல என்னை கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னா, உனக்கு ஓகேவா?

அவங்கள நா சம்மதிக்க வைக்கிறேன். இப்ப நம்ம படிச்சுட்டு இருக்கோம்,

நீ ஒரு ஐந்து வருசம் டைம் கொடு, நா நல்ல ஜாப்ல சேர்ந்து, கொஞ்சம் செட்டில் ஆகிட்டு

உங்க வீட்ல பேசி சம்மதம் வாங்குறேன். அதுவரைக்கும் நீ என் கூட பேச கூட வேண்டாம்,

ஆனா, நா உங்க வீட்ல வந்து பேசுறவரைக்கும் நீ வெயிட் பண்றேன் மட்டும் சொல்லு.

என்று என் பேச்சை நிறுத்தி அவள் கண்களைப் பார்த்தேன்.

அவளுக்கு என் காதலை புரிந்துக் கொள்ள முடிகிறது என்பதை என்னால் உணர முடிந்தது.

நீ சொல்றதுலாம் ப்ராட்டிக்கலா செட்டாகாது,

நா என்னோட மதத்தை சேர்ந்த, ஒரு கிறித்துவ மலையாளி பைனத்தான்

கல்யாணம் பண்ணிப்பேன். எங்க வீட்ல அதத்தான் விரும்புவாங்க,

எனக்கும் அதான் விருப்பம், கண்டிப்பா உன்னால எங்க வீட்டு சம்மதத்த வாங்கவே

முடியாது என்று உறுதியாக கூறினாள்.

உன்னை ரொம்ப லவ் பண்றேன், உன்னை மிஸ் பண்ண நா விரும்பல, என்று நான் பேச தொடங்கும் போதே,

உனக்கு ஒரு முறை சொன்னாப் புரியாதா?

லவ்வே வேண்டானு சொல்றேன்,

நீ அதயே பேசிட்டிருக்க?

என்று கத்தினாள்.

பிறகு, சற்று நிதானமாகி,

உன் மனச கஷ்டப்படுத்த நா விரும்பல,

எனக்கு யார் மேலயும் லவ் வராது. புரியுதா?

என்கிட்ட திரும்ப இதப் பத்தி பேசாத...

என்று சொல்லி என்னை கடந்து சென்று விட்டாள்.

அவள் தன் முடிவில் மிக உறுதியாக இருந்தாள்.

உண்மையாகவே அவளுக்கு காதலில் நம்பிக்கை இல்லையென்றும், குடும்ப மரபு, கட்டமைப்பை உடைக்க அவள் விரும்பவில்லை என்றும் என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

அந்த நிகழ்வுக்கு பின், அவள் எப்பவும் போல, இயல்பாகவே என்னிடம் பேசி வந்தாள். அவளிடம் என் காதலை வெளிப்படுத்திய நிகழ்வு நடக்கவேயில்லை என்பது போல் அவள் பேச்சு இருந்தது.

பல முறை நான் குழம்பி இருக்கிறேன்.

அவளிடம் மீண்டும் என் காதலை எடுத்து சொல்ல முயன்ற போதெல்லாம், அவள் அதற்கான எந்த பதிலையும் பேசாமல், அதற்கு சம்மந்தமே இல்லாத வேறு விஷயங்களையே பேசி வந்தாள்.

அவள் காதலைப் பற்றி பேச விரும்பாமல் பேச்சை மாற்றி விடுவாள்.

அவளை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை.

நான் அவளிடம் காதலை பற்றி பேசுவதை நிறுத்தி கொண்டேன்.

ஆனால், கல்லூரி படிப்பு முடித்து, நல்ல வேலையில் சேர்ந்து, பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டு, நேரே அவள் வீட்டிற்கு சென்று, அவளை பெண் கேட்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.

கல்லூரி காலம் நிறைவடைந்தது.

ஒரு சில வாரங்களில் ஆவடியிலிருந்த தன் வீட்டை மாற்றிக் கொண்டு கேரளா சென்று விட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.