(Reading time: 14 - 27 minutes)

அன்னையின் அன்பு - சித்ரா. வெ

Mom and Daughter

காலையிலிருந்து விரதம் இருந்ததால் தலையெல்லாம் கிறுகிறுவென்று சுத்தியது... கோவிலில் கூட்டமாக இருப்பதால் நெரிசலில் வெகுநேரம் நிற்க முடியவில்லை... இதில் சிறிது நாட்களாக இருக்கும் முட்டி வலி வேறு.. இப்படி கஷ்டங்களோடு பிரதோஷ வழிபாட்டை முடித்துக் கொண்டு வந்தாள் காயத்ரி.

இந்த முறை வந்திருக்கும் வரனாவது தன் மகளுக்கு அமைய வேண்டும்... இதுதான் காயத்ரியின் வேண்டுதல்... ஒவ்வொரு வரனும் தட்டிக் கொண்டே போகிறது அதனால் பிரதோஷம், கிருத்திகை, பௌர்ணமி, சஷ்டி, சோமவரம் இப்படி எந்த நாளையும் விட்டு வைக்காமல் விரதம் இருந்தாள் அவள்...

வீட்டிற்கு வந்து ஃபேன் போட்டு அதன் கீழ் அமர்ந்தாள் காயத்ரி.. கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது... விரதம் முடியவே பசி வேறு தெரிய ஆரம்பித்தது... மதியம் சாதமும் கொஞ்சம் ரசமும் வைத்திருந்தாள்... அதையாவது சாப்பிடலாமா என்று நினைத்தாள்... சோர்வின் காரணமாக எதுவும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருந்தாள்..

பூஜா இந்த நேரம் அலுவலகத்தில் இருந்து வந்திருக்க வேண்டியது... ஆனால் அவள் நேராக அந்த வீட்டிற்கு சென்றிருப்பாள்... இன்னைக்கு மதிய சாப்பாடும் அவள் எடுத்து போகவில்லை... பாதி நாட்கள் இப்படி இருப்பதால் சரியாக சமைக்க கூட காயத்ரி நினைப்பதில்லை... தான் ஒருத்திக்காக என்ன சமைப்பது அதனாலயே அவளுக்கு விரதம் இருப்பது கூட கஷ்டமான விஷயமாக இல்லை...

பக்கத்து வீட்டு ராணி காயத்ரியை தேடி வந்தாள்... "என்ன காயத்ரி இன்னைக்கு பிரதோஷத்துக்கு கோவில்ல கூட்டமா..??"

"ஆமாம்க்கா... இது சனி பிரதோஷம் இல்ல அதான் கூட்டம்.."

"ஆமாம் விரதம் முடிஞ்சு ஏதாவது சாப்பிட்டியா..??"

"இல்லைக்கா... இப்போ தானே வந்தேன்.. வீட்டில் ரசமும் சாதமும் இருக்கு சாப்பிடனும்..."

"என்ன ரசமும் சாதமுமா... ஏன் இன்னைக்கு உன்னோட பொண்ணு சாப்பாடு எடுத்துப் போகலையோ.. சரி என்ன இன்னும் அவ வரலியா..?? ஓ அங்கப் போயிருக்காளா..?? பொண்ணுக்கு நல்ல வழிப் பொறக்கனும்னு நீ கோவில் கோவிலா போய் விரதம் இருக்க.. ஆனா உன் பொண்ணுக்கு அதைப்பற்றி கவலை இருக்கா... எப்பப் பார்த்தாலும் அங்கப் போய் உட்கார்ந்திருக்கா...

உன்னை நினைச்சாலே கவலையா இருக்கு... சரி எங்க வீட்டில் இருந்து குழம்பும் பொரியலும் எடுத்துட்டு வரேன் சாப்பிடு.." என்று சொல்லி எடுத்து வரச் சென்றாள் ராணி.

ராணி எடுத்து வந்த குழம்பும் பொரியலையும் வைத்து சாப்பிட்டு முடித்ததும் பூஜாவுக்கு என்ன டிஃபன் செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.. அப்போது திரும்பவும் கேட் திறக்கும் சத்தம் கேட்டது... பூஜா தான் வந்திருப்பாளோ என்று எட்டிப் பார்த்தால் சங்கரன் வந்தார்...

பூஜா விஷயமா இன்று மாப்பிள்ளை வீடு வரைக்கும் செல்வதாக சொல்லியிருந்தார் அவர்... அதனால் நல்ல செய்தியாக இருக்குமோ என்று ஆர்வத்துடன் அவரை வரவேற்றாள் அவள்...

"என்னங்க மாப்பிள்ளை வீட்டுக்கு போனீங்களா... என்ன சொன்னாங்க அவங்க..."

"மாப்பிள்ளைக்கு நம்ம பூஜாவை ரொம்ப பிடிச்சிடுச்சாம்... அவளை தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு ஒத்த காலில் நிக்கறாராம்... ஆனா.." என்று பேச்சில் தயக்கம் காட்டினார் சங்கரன்.

அவரின் தயங்கிய முகத்தை பார்த்த காயத்ரி.. " என்னங்க இந்த முறையும் என்னை காரணம் காட்டி நம்ம பூஜாவா வேண்டாம்னு சொல்லிட்டாங்களா..??" என்று வருத்தத்தோடு கேட்டாள்.

"இல்ல காயத்ரி... எல்லா விஷயமும் கேள்விப்பட்டும் மாப்பிள்ளை பூஜாவை தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொல்றாரு... ஆனா அவங்க வீட்ல தான்.." என்று திரும்பவும் தயங்கிய போது..

"என்னங்க அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டேங்குறாங்களா.." என்று இந்த சம்பந்தமும் அமையாதா... என்ற ஆதங்கத்தோடு கேட்டாள்.

"இல்லை காயத்ரி மாப்பிள்ளை அரவிந்த் பூஜாவை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றாராம்... அதுக்காக அவங்க வீட்டிலேயும் ஒத்துக்கிட்டாங்க....

உன்னைப் பத்தி அவங்க பெருசா எடுத்தக்கலையாம்... ஆனா அவங்க சொந்தக்காரங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சா ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி பேசுவாங்களாம்.... அதனால நீ கல்யாணத்துல கலந்துக்க கூடாதாம்.... உனக்கு பதிலா துர்கா அம்மா ஸ்தானத்துல இருந்து நாங்க ரெண்டுபேரும் இந்த கல்யாணத்தை நடத்தனுமாம்... அப்படின்னா இதுக்கு ஒத்துக்கறோம்னு சொல்றாங்க..."

"என்னங்க இதுக்கு சம்மதம்னு சொல்லிட்டு தான வந்தீங்க..." சந்தோஷத்தோடு கேட்டாள்.

"என்ன காயத்ரி.... என்ன இருந்தாலும் நீ பூஜாவை பெத்தவ இல்லையா...?? நீ இல்லாம எப்படி இந்த கல்யாணத்தை நடத்துறது...?? யோசிச்சு சொல்றோம்னு சொல்லிட்டு வந்துட்டேன்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.