(Reading time: 14 - 27 minutes)

"ன்னங்க நான் இருந்தா என்ன..?? அக்கா இருந்தா என்ன..?? என்னை விட அவங்க தான் அவ மேலே அன்பா இருக்காங்க... நீங்க ரெண்டுப்பேரும் ஒன்னா இருந்து கல்யாணத்தை நடத்துனா எனக்கு சந்தோஷம் தாங்க..."

"துர்கா அதுக்கு மறுப்பு சொல்லமாட்டா காயத்ரி... நாங்க ஒன்னா இருந்து இந்த கல்யாணத்தை நடத்துவதில் எந்த பிரச்சனையும் இல்ல... ஆனா நீ கல்யாணத்துக்கு வரவே கூடாதுன்னா எப்படி..??"

"இங்கப் பாருங்க இதுவரைக்கும் வந்த சம்பந்தமெல்லாம் ஒட்டு மொத்தமா வேண்டாம்னு சொன்னாங்க... ஆனா இப்போ இவங்க இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்காங்க... இத விடக் கூடாதுங்க...

அதுமட்டுமில்லாம பூஜாக்கும் இந்த வரனை பிடிச்சிடுச்சு... இதை விட்ற கூடாதுங்க... அக்காவை கூட்டிக்கிட்டு போய் பேசி முடிங்க... என்னைப்பத்தி யோசிக்காதீங்க..."

"நீயே சொல்றப்போ என்ன காயத்ரி... இந்த சம்பந்தத்தையே பேசி முடிக்கலாம்... சரி நான் வரட்டுமா...

ஆ அப்புறம் நான் நேரா இங்க தான் வரப்போறேன்னு வீட்ல சொல்ல ஃபோன் பண்ணப்போ பூஜா தான் எடுத்தா... மீனாவும் வித்யாவும் வீட்டுக்கு வந்திருக்காங்க... அதனால அவ இன்னைக்கு அங்கேயே இருக்காளாம்... நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை இல்ல... அதனால திங்கள்கிழமை அங்க இருந்தே ஆஃபீஸ்க்கு போறாளாம்... உன்கிட்ட சொல்ல சொன்னா...

நான் இங்கேயே படுத்துக்கலாம்னு பார்த்தா பேரப் பசங்க தாத்தா எப்போ வருவாருன்னு கேப்பாங்க காயத்ரி.. "

"அதனால என்னங்க... நீங்க வீட்டுக்கு போங்க... நான் இருந்துப்பேன்..."

"சரி காயத்ரி அப்போ நான் கிளம்பறேன்.."

ங்கரன் கிளம்பியதும் கோவிலில் இருந்து வந்து சாப்பிட்டதே போதும் என்று அப்படியே படுத்துவிட்டாள் காயத்ரி... தன் மகளுக்கு கல்யாணம் கூடிவிட்டது என்ற சந்தோஷம் ஒருபக்கம்... அந்த கல்யாணத்துக்கு போக முடியாதே என்ற வருத்தம் ஒருபக்கம்... அங்கேயே இருக்கப் போவதாக தன் அப்பாவிடம் சொன்ன தன் மகள் தன்னிடம் சொல்லவில்லையே என்ற ஏக்கம் ஒருபக்கம் எல்லாம் சேர்ந்து அவளை தூங்கவிடவில்லை... எதையெதையோ மனசு நினைத்துக் கொண்டது...

சிறுவயதில் அம்மா அப்பா இல்லையென்றாளோ.... இல்லை திருமணம் ஆகி குழந்தைகள் ஆனபின்பு அம்மா அப்பா இல்லையென்றாளோ அது பெரிதாக தெரியாது... ஆனால் பதின் பருவத்தில் அவர்கள் இல்லையென்றால் அது கஷ்டமாக இருக்கும்... அதுவும் அம்மா இல்லையென்றால் அது மிகவும் கஷ்டம்..

அப்படி அம்மா அப்பா இல்லாமல் அண்ணன் அண்ணியின் பாதுகாப்பில் இருந்தவள் தான் காயத்ரி... அதுவும் அண்ணியின் வசைப்பாட்டு காதில் கேட்க முடியாது... அதற்காகவே வேலைக்குச் சென்றாள் அவள்...

வேலைப் பார்க்கும் இடத்தில் அந்த முதலாளி புதிதாக கட்டும் கட்டிடத்தில் மேஸ்திரி வேலை பார்த்தவர் தான் சங்கரன்... வேறு ஊரிலிருந்து தங்கி வேலை பார்த்தார்... வீட்டில் பாடும் வசைப்பாட்டுக்கு இதமாக அவர் பேச்சு இருக்க அதில் மயங்கி காதலில் விழுந்த பயன் வயிற்றில் குழந்தை... அவரோ வேலை முடிந்து ஊருக்கு சென்றுவிட்டார்...

வீட்டிற்கு தெரிந்து பிரச்சனையாகி முதலாளியிடம் வந்து முறையிட்டான் அவள் அண்ணன்... அப்போது தான் தெரிந்தது சங்கரனுக்கு திருமணம் ஆனது... இவளிடம் திருமணம் ஆகவில்லை என்று தான் ஏமாற்றினான்... இவளை அழைத்துக் கொண்டு அவர் ஊருக்குச் சென்று முறையிட்டனர்...

இவளைப் பார்த்ததும் தலைகுனிந்துக் கொண்டார் சங்கரன்... அப்போதே அவளுக்கு எந்த நியாயம் கிடைத்து என்ன பிரயோஜனம்னு இருந்தது... ஆனால் வயிற்றில் குழந்தையோடு திரும்பவும் அண்ணியோடு கஷ்டப்பட முடியாது...  20 வயதில் வயிற்றில் குழந்தையோடு தனியாக வாழவும் முடியாது.. எல்லாம் சேர்ந்து என்ன முடிவு செய்கிறார்களோ அதன்படியே நடந்துக்கொள்வோம் என்று முடிவெடுத்தாள்....

நடந்த தவறுக்கு தன் கணவனும் காரணம் என்று தெரிந்ததும் எல்லோரும் எடுக்கும் முடிவுக்கு சம்மதம் என்று துர்காவும் தெரிவித்தாள்... எல்லோரும் சேர்ந்து சங்கரன் காயத்ரியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கூறினர்... துர்காவும் காயத்ரியும் அதற்கு ஒத்துக் கொண்டனர்...

தன் கணவன் தன்னை ஏமாற்ற தான் நினைத்தான் என்று தெரிந்ததும் காயத்ரியால் சங்கரனோடு சந்தோஷமாக வாழ தோன்றவில்லை... தன் குழந்தையின் எதிர்காலத்துக்காக அதை சகித்துக் கொண்டாள்... சங்கரனோ மனதில் ஏற்பட்ட குற்ற உணர்வால் காயத்ரியிடம் கொஞ்சம் நன்றாக நடந்துக் கொண்டார்...

வாரத்தில் ஐந்து நாட்கள் முதல் மனைவியோடு இரண்டு நாட்கள் காயத்ரியோடு என்று இருந்தார்... ஆனால் ஊரை பொறுத்தவரை மனைவி என்ற உரிமை துர்காவிற்கு தான்... அதற்கெல்லாம் காயத்ரி கவலைப்பட்டதில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.