(Reading time: 14 - 27 minutes)

ந்த நிலையில் தான் பூஜா பிறந்தாள்... இனி தன் உலகமே குழந்தை தான் என்று சந்தோஷப் பட்டாள் காயத்ரி... 4 வயது வரை அவளை பார்த்து பார்த்து வளர்த்தாள்... குழந்தையை அடிக்கடி வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போவார் சங்கரன்.... துர்காவும் காயத்ரியிடம் பாராமுகமாக இருந்தாலும் பூஜாவிடம் அப்படி இருக்கமாட்டாள்...

பூஜாவும் பெரியம்மா, அக்கா என்று பாதி நேரம் அந்த வீட்டிலியே இருப்பாள்.... தனக்கு எந்த உரிமை கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை... தன் மகளுக்காவது கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டாள்... ஆனால் அங்கு தான் பிரச்சனையாகி போனது...

பூஜாவின் மனதில் யாரும் விஷத்தை விதைக்கவில்லை... அவளுக்கு அந்த உறவு முறை புரிய ஆரம்பித்ததும்... தன் பெரியம்மா நல்லவர்கள்... தன் அம்மா தான் அவர்களுக்கு துரோகம் செய்தது என்று அவளாகவே முடிவு செய்துக் கொண்டாள்... வெளியிலும் தன் அம்மா காயத்ரி தான் என்று சொல்ல தயங்கினாள்.... இப்படியே தன் அன்னையிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்துவிட்டாள் பூஜா...

திருமண வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது... அதெல்லாம் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும்... அம்மா கல்யாணத்துக்கு வரனும்னு தன் மகள் சொல்லவில்லையே என்று ஒரு பக்கம் வேதனையாக இருந்தது காயத்ரிக்கு... தன் மகளுக்கு நல்லது நடக்கும் போது மனக் கஷ்டத்தோடு இருக்கக் கூடாது அது தன் மகளுக்கு நல்லதில்லை என்று பக்தியில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்...

இனிதாக திருமணம் நிறைவேறியது... புகுந்த வீட்டிற்குச் செல்வதற்கு முன் பூஜாவும் அரவிந்தும் தனிமையில் இருந்தார்கள்... அப்போது பூஜாவிடம் அரவிந்த்...

"பூஜா கல்யாணம் முடிஞ்சிடுச்சு... உங்க அம்மாக்கிட்ட ஆசிர்வாதம் வாங்க வேண்டாமா..?? எனக்கு உங்கம்மா கல்யாணத்துல கலந்துக்க கூடாதுன்னு சொன்னதுல விருப்பமே இல்ல... நான் அதுக்கு ஒத்துக்கவே இல்ல... உன்னோட விருப்பத்துக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சோம்... எல்லாத்துக்கும் ஒத்துக்க முடியாது... பூஜாவே இதுக்கு சம்மதிச்சிட்டாளாம்... நீ ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கன்னு சொன்னாங்க..."

"......"

"எனக்கு புரியுது பூஜா... இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கனும்னு உன்னை கட்டாயப்படுத்தியிருப்பாங்க... அதனால தான் நாம ஃபோன்ல பேசும் போது உங்கம்மா கல்யாணத்துக்கு வருவதில் எந்த பிரச்சனையுமில்ல... அப்போ யாராவது ஏதாவது சொன்னாங்கன்னா நான் பார்த்துக்கிறேன்னு சொல்ல நினைச்சேன்... ஆனா நீ தான் உங்கம்மா பத்தி பேசும் போது பேச்சை மாத்திடுவ.."

"அது... உங்களுக்கு அம்மா பத்தி பேசுனா பிடிக்குமோ பிடிக்காதோன்னு தான்..."

"என்ன பூஜா... அவங்க என்ன தப்பு பண்ணாங்க... இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்னு அவங்க ஆசையாப் பட்ருப்பாங்க... ஏதோ இப்படி ஒரு வாழ்க்கை அவங்களுக்கு அமைஞ்சிடுச்சு...

இப்படி ஒரு வாழ்க்கை அவங்க வாழறாங்கன்னா அது உனக்காக தான் இருக்கும்... அவங்க ஆசிர்வாதம் நமக்கு கிடைக்க வேணாமா..?? எங்க தாத்தா சொல்லுவாரு... பெத்தவங்க மனசை கஷ்டப்படுத்துவது ரொம்ப பாவமாம்... அய்யோ நம்ம பையனோ பொண்ணோ இப்படி செஞ்சிட்டாங்களேன்னு அவங்க வேதனைப்பட்டாளே அது நம்மல கஷ்டப்படுத்துமாம்... அதனால நாம போய் அவங்கக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிப்போம்.."

"ம்ம்.. நான் போய் பெரியம்மாக்கிட்ட சொல்லிட்டு வந்துட்றேன்.."

கணவனிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தவளை எதிர்கொண்டார் சங்கரன்...

"பூஜா புகுந்த வீட்டுக்கு போகறதுக்கு முன்னாடி அம்மாக்கிட்ட போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாம்மா.. நான் வேணா மாப்பிள்ளைக்கிட்ட சொல்லவா..??"

"இல்லப்பா.. அவரே என்கிட்ட அதான் சொன்னாரு.. நான் பெரியம்மாக்கிட்ட சொல்லிட்டு கிளம்பறோம்..."

"ம்ம்.. சரிம்மா நீங்க முன்னாடி போங்க... எனக்கு ஒரு வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்..."

தந்தையிடம் பேசிவிட்டு பெரியம்மாவை தேடிப் போனாள்... துர்கா யாரோடோ பேசிக் கொண்டிருந்தாள்... இப்போது போய் சொல்லலாமா என்று தயங்கி நின்ற போது அங்கே இவளைப் பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருந்தது...

"துர்கா உனக்கு எவ்வளவு பெரிய மனசு... உன்னோட வாழ்க்கையில பங்குப் போட்டவ பொண்ணா இருந்தாலும்... உன் பொண்ணுங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்ச மாதிரி அவளுக்கும் செஞ்சு வச்சிரிக்கியே..."

"அவங்க ரெண்டுப்பேரும் செஞ்ச தப்புக்கு அவ என்னக்கா பண்ணுவா... சின்னப் பொண்ணா இருக்கும்போதிலிருந்தே பெரியம்மா பெரியம்மான்னு பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பா.... அதுமட்டுமில்ல நான் இப்படி இருப்பதால தானே எல்லாம் என்னக்கேட்டு என் முன்னாடி நடக்குது... இல்லைன்னா எனக்கு தெரிஞ்சு கொஞ்சம்... தெரியாம கொஞ்சம்னு அவர் செய்வாரு...

ஆனா ஒன்னுக்கா... கடவுள்னு ஒருத்தர் இருக்காரு... ரெண்டு குழந்தைகளோட இருந்த என் வாழ்க்கைய அந்த காயத்ரி தட்டிப் பறிச்சால்ல... அவளோட ஒரே ஒரு பொண்ணு கல்யாணத்தை அவளால பார்க்க முடிஞ்சுதா..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.