(Reading time: 14 - 27 minutes)

பெரியம்மா பேசியதை பூஜா தவறாக எடுத்துக் கொள்ளவில்லை... ஆனாலும் மனசுக்குள் சின்ன வலி..

அரவிந்தோடு பூஜா அவள் வீட்டில் இறங்கும் போது ராணியின் குரல் கேட் வரையிலும் கேட்டது...

"தன் பொண்ணுங்களுக்கு கல்யாணம் நடத்துன மாதிரியே உன் பொண்ணு கல்யாணத்தை சிறப்பா நடத்துனா துர்கா... ஆனா ரெண்டுப்பேரும் பாத பூஜை பண்ணும் போது பார்த்த எனக்கு கஷ்டமா இருந்துச்சு... அங்க நீ நின்னுருக்க வேண்டியது காயத்ரி..."

"விடுங்கக்கா அதுல என்ன இருக்கு... கூட்டு குடும்பமா இருக்க வீட்ல தம்பி பசங்களுக்கு கல்யாணம் நடக்கும்போது அண்ணனும் அண்ணியும் பாதபூஜை செஞ்சுக்கறதில்லையா... அப்படிதானே இதுவும்.. அக்கா தானே பெரியவங்க..."

"சரி நானும் அதை ஒத்துக்கறேன்... ஆனா அந்த கல்யாணத்தை நீ பார்க்க கூட முடியலையே... துர்காவையும் உன் புருஷனையும் விடு... உன் பொண்ணாவது நீ இந்த கல்யாணத்துல கலந்துக்கனும்னு சொல்லியிருக்கலாம்..."

"விடுங்கக்கா நான் அதை பெருசா எடுத்துக்கல... என்ன மாதிரி இல்லாம அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கனும்னு அந்த கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டேன்... அது மாதிரியே எல்லாம் நல்லப்படியா நடந்துடுச்சு... இதுக்கு மேல எனக்கு என்னக்கா வேணும்... அப்படியே கோவில் குளம்னு சுத்திக்கிட்டு இருக்க வேண்டியது தான்...

பூஜா நல்லா இருக்கனும் நீ ஒதுங்கி இருன்னு சொன்னா... நான் வாழ்நாள் முழுக்கக் கூட அவளை விட்டு ஒதுங்கியிருப்பேன்..."

அவள் முழுசாக சொல்லி முடிக்கவில்லை... அதை கேட்டு தன் அன்னையை ஓடி வந்துக் கட்டிக் கொண்டு அழுதாள் பூஜா... தன் அன்னையின் அன்பு மட்டும் தான் சுயநலமில்லாதது என்பதை புரிந்துக் கொண்டாள் அவள்...

அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருந்த போது தான் அரவிந்தை கவனித்தாள் காயத்ரி...

"வாங்க மாப்பிள்ளை... நிக்கறீங்களே உக்காருங்க..."

"இருக்கட்டும் அத்தை... உங்க ரெண்டுப்பேரோட ரிலேஷன்ஷிப் எப்படி இருந்ததுன்னு எனக்கு தெரியாது... ஆனா இப்போ நடந்ததை வச்சு என்னால புரிஞ்சிக்க முடியுது... இப்போ பூஜா உங்களை நல்லா புரிஞ்சிக்கிட்டா.. நாங்க ரெண்டுப்பேரும் உங்கக் கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்துருக்கோம்... எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை..."

"அரவிந்த் கொஞ்சம் நேரம் இருங்க..." பூஜா குறுக்கிட்ட போது சங்கரன் அங்கு வந்தார்...

"அப்பா... இங்கையாவது அம்மா கூட ஜோடியா நில்லுங்கப்பா... நாங்க ரெண்டுப்பேரும் உங்கக் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கிறோம்..."

"கண்டிப்பாம்மா... " என்று காயத்ரியோடு சேர்ந்து நின்றார்... இருவரும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்... அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராணிக்கு கூட மிகவும் சந்தோஷமாக இருந்தது...

தன் அன்னையை புரிந்துக் கொண்ட நேரத்தில் அவளை விட்டுப் பிரிந்து போகிறோமே என்று பூஜா வருத்தப்பட்டாள்... அதைப் புரிந்துக் கொண்ட அரவிந்த்..

"அத்தை எங்க கல்யாணத்துக்கு உங்களை வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கலாம் ஆனா நாங்க இப்போ தனிக்குடித்தனம் தான் இருக்கப் போறோம்.. நீங்க அடிக்கடி வீட்டுக்கு வரனும்..

அதுமட்டுமில்ல எங்களுக்கு குழந்தை பொறந்தா அதை நீங்க தான் வளர்க்கனும்... எங்க அம்மாக்கு எங்க அண்ணன் அக்கா குழந்தைகளை பார்த்துக்கவே சரியா இருக்கும்... எல்லா குழந்தைகளையும் பார்த்துக்க முடியாது... நீங்க தான் பூஜா கூடவே இருக்கனும்... என்ன அத்தை சரிதானே..."

"என்ன மாப்பிள்ளை இதுதான் என்னோட முக்கியமான வேலையே" என்றாள் காயத்ரி சந்தோஷமாக...

தன் பிரச்சனையை புரிந்து தன் கணவன் சொன்ன தீர்வு மகிழ்ச்சியை அளித்தது பூஜாவிற்கு... சந்தோஷத்தோடு விடைப்பெற்றார்கள்...

அவர்களை ஜோடியாக பார்த்த காயத்ரிக்கு மனது நிறைந்தது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.