(Reading time: 7 - 13 minutes)

திடீர் சாமியார் - ஜான்சி

Saint

ரு ஊரில் கிருஷ்ணா என்பவரின் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. பல நாட்களாக அவருக்கு நேரமே சரியில்லை போலும், வேலை ஒன்றும் கிடைக்காமல் மிகவும் சிரமப் பட்டு வந்தார். அவரது வீட்டில் வறுமைக் காரணமாக மிகவும் சண்டைச் சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. அன்றும் அப்படித்தான் அவர் மனைவி சண்டைப் போட்டதில் மனம் வெறுத்து அவர் வீட்டை விட்டு வெளியே வந்து கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தார்.அவர் நடந்து நடந்து பக்கத்து ஊர் வரை வந்து விட்டார். கால்கள் வலிக்கவே அவர் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து கால்களுக்கு ஓய்வு கொடுத்தார்.

 களைப்பில் அந்த வீட்டின் சுவற்றில் முதுகைச் சாய்த்து அமர்ந்தவருக்கு வீட்டின் உள்ளேயிருந்து மிகவும் சுவையான பதார்த்தம் தயாரிப்பதன் காரணமாக வெளிவந்த நறுமணம் மூக்கை வருடிச் சென்றது.ஆனால், அதையெல்லாம் உணரும் நிலையில் அவர் இல்லை. தன்னுடைய வீட்டின் நலனுக்காக என்னச் செய்யலாம்? வீட்டில் உள்ள வறுமையைத் தீர்க்க வழி என்னவென்று யோசித்துக் கொண்டிருந்தார். அதே நேரம் உள்ளே ஒரு பெண்மணி தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தது இவருடைய காதில் விழுந்து வைத்தது.

"இவ்வளவு நேரம் சுட்டதில 62 பணியாரம் தான் செய்ய முடிஞ்சது, அப்பாடா.............." என்று தன் வேலையை முடித்து எழும்புவது இவருக்கு புரிந்தது. 

 மனம் வெறுத்தவராக உட்கார்ந்திருந்த அவரிடம் வீட்டின் வெளியே வந்த அந்தப் பெண்மணி 

"யாரப்பா நீ எங்க வீட்டு முன்னால வந்து உட்கார்ந்து இருக்கிற?..........."

அவர் பதிலே பேசாததால் மறுபடி மறுபடி அந்த பெண் தொணதொணக்க கேட்டுக் கொண்டிருந்தவருக்கு சலிப்பாக ஆகிவிட்டது.

 " நானே உலகத்தை வெறுத்துப் போய் உட்கார்ந்து உட்கார்ந்திட்டு இருக்கேன். ஏம்மா நீ வேற கொஞ்ச நேரம் கூட என்னை உட்கார விடாம தொணதொணக்கிறியே?" என்றதும்

 உலகத்தை வெறுத்து இருக்கிறாராமா........அப்படினா ஒரு வேளை சாமியாரோ? என அவசர அவசரமாக யோசித்த அந்த பெண்........

 அப்படின்னா நீங்க சாமியாரா? அப்போ நான் கேட்கிற ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம். இன்னிக்கு நான் எத்தனை பணியாரம் சுட்டேன்? என்றுக் கேட்டதும்,

 பதில் சொல்லாவிட்டால் இந்த பெண் நம்மை விடப் போவதில்லை என்று உணர்ந்துக் கொண்ட கிருஷ்ணா சலிப்பாக,

"62 பணியாரம்" என்றுச் சொன்னார்.

 அதைக் கேட்ட அந்தப் பெண்மணிக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. உடனே அக்கம் பக்கத்திலிருந்த அனைவரையும் கூப்பிட்டு இந்த அதிசயமான விஷயத்தைச் சொன்னாள்.

 மற்றவர்களுக்கும் இதை அறிந்து மிகவும் ஆச்சரியமாகி விட்டது. வாசலில உட்கார்ந்து இருப்பவருக்கு வீட்டுக்குள்ள சுட்ட பணியாரத்தின் எண்ணிக்கை தெரிஞ்சிருக்குன்னா அவர் எப்படிப் பட்ட தீர்க்க தரிசியாக இருப்பார் முக்காலமும் அறிந்த ஞானியாக இருப்பாரோ? அவருக்கு எல்லாருடைய பிரச்சினைகளையும் தீர்க்கும் வல்லமை நிச்சயமாக இருக்கும். என்று தமக்குள்ளேச் சொன்னவர்களாக அவரை விழுந்து விழுந்து உபசரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 அவர் உட்கார்ந்திருந்த அதே திண்ணையை அவருக்கு இருப்பிடமாக்கி தத்தம் வீடுகளிலிருந்த பழம், தேங்காய், பூ என கொண்டு வந்து குவித்து விட்டனர். பல நாட்களாக பசியால் வாடி இருந்த கிருஷ்ணா மனமகிழ்ச்சியோடு சாப்பிட ஆரம்பித்தார். அவர்கள் தனக்கு ஏன் இதெல்லாம் கொண்டு வந்து தருகிறார்கள் என்பதை அவர் உணரவில்லை. மீதமிருப்பதை தன் வீட்டிற்கு கொண்டுச் செல்ல வேண்டுமென்று எண்ணும் போது தான் அவர் முன் ஒருவர் மிக பவ்யமாக வந்து உட்கார்ந்தார்.

 "சாமி"

"என்னது நான் சாமியா? நான் ஆசாமிய்யா?" கிருஷ்ணாவின் மனதில் இப்படித்தான் முதலில் தோன்றியது.

"சாமி, என் வயலுக்கு தண்ணியே இல்லாம வரண்டிருக்கு சாமி, மழையே இல்லை. இதுக்கு நீங்கதான் வழி சொல்லணும் சாமி" என்று உருகி உருகி கேட்டுக் கொண்டார்.

 "என்னது? நான் இவன் பிரச்சினையை தீர்க்கணுமா? என் பிரச்சினையை தீர்க்க முடியாமதானே நானே ஊர் விட்டு ஊர் வந்தது. இப்போ என்னச் செய்யிறது? என்று யோசிக்க ஆரம்பித்தவருக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. அவர்கள் உபச்சாரம் எல்லாம் பெற்றுக் கொண்ட அவர் இப்போது மட்டும் தாம் சாமியார் இல்லையென்றுச் சொன்னால் தர்ம அடிக் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.வேறு வழியில்லாமல் அவரிடம்,

"நீ கவலைப் படாதே மகனே, இன்றிரவு உன்னுடைய வயலுக்கு மட்டும் மழைப் பெய்யும். கவலைப் படாமல் போய் வா....' என்றார்.

 அன்றிரவே அந்த நபரின் வயலுக்குப் போய் பக்கத்திலிருந்த கிணற்றிலிருந்து மிகவும் கஷ்டப் பட்டு இரவு முழுவது நீரை இரைத்தார். காலையில் எல்லோரும் வரும் முன் தன்னுடைய ஊருக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்தவரால் அதைச் செயல் படுத்த முடியவில்லை. இரவு விழித்ததால் அசந்து உறங்கி விட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.