(Reading time: 14 - 27 minutes)

திகாரில் தமிழர்கள் - மலர் மாணிக்கம்

Tihar Jail

காலை ஏழறை மணியிருக்கும். நானும் மாமாவும் டெல்லி ஜெயில் ரோட்டில் உள்ள சி.5.எ ஜனக்புரி பஸ் ஸ்டாப்பில் இறங்கினோம். அங்கிருந்து நாலாம் நம்பர் திகார் ஜெயிலுக்கு போய், அங்கு ஆக்ஸிடண்ட் கேசில் கைது செய்யப்பட்டு இருக்கும் உறவினர் ஒருவரைப் பார்க்க வேண்டும்.

சாலையோரம் இருந்த நடைமேடையில் ஏறி நடக்க ஆரம்பித்தோம். அதில் ஒரு சிலர் நாய்களைப் பிடித்துக் கொண்டு வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள் நடைமேடையை ஒட்டி முழங்கால் அளவு இருந்த சுவருக்கு உள்ளே அடர்த்தியாக, நெருக்கமாக மரங்கள் இருந்தன. அதையடுத்து நிமிர்ந்து பார்க்குமளவு பெரிய உயரமான மூன்று மதில் சுவர்கள் இருந்தன. மூன்றாவது மதில் சுவரின் மேல் அமைக்கப்பட்டிருந்த கோபுரங்களில் போலீஸ்காரர்கள் துப்பாக்கியுடன் காவல் காத்து கொண்டிருந்தார்கள். அதற்குள் தான் திகார் சிறை இருந்தது. நடை மேடையில் இரண்டு போலீஸ்காரர்கள் இடைவெளி விட்டு நின்று கொண்டு ரோட்டில் போகும் வாகனங்களையும், மக்களையும் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஏன் மாமா? அது என்ன நாலாம் நம்பர் ஜெயிலு அப்படின்னா திகார் ஜெயில் எத்தன தான் இருக்கு?”

“திகார் ஜெயில் மொத்தம் ஒன்பது இருக்கு. அதுல 6-ம் நம்பர் ஜெயிலு பெண்களுக்கு, 7ம் நம்பர் ஜெயிலு சிறுவர்களுக்கு, மத்தது எல்லாம் ஆண்களுக்குன்னு பேப்பர்ல படிச்சிருக்கேன்”

“ம்ம்… சரி மாமா. அப்ப ஜெயில்ல பெண்கள விட ஆண்கள் தான் அதிகமா இருக்காங்க, அப்படித்தான?”

“ஆமாண்டா, அங்கேயாவது இந்த பொம்பளைங்க தொல்ல இல்லாம இருக்காங்களே!

“இரு மாமா, அத்த கிட்ட சொல்றேன்”

“அடப்போடா உங்க அத்த கிட்ட இருக்கிறத விட திகார் ஜெயில்ல இருக்காலாம்”

நாங்கள் இருவரும் பேசிக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தோம் எங்களுக்கு கொஞ்ச தூரம் முன்னாளிருந்த குப்பைத் தொட்டி பக்கத்தில் சிவப்பு கார் வந்து நின்றது. அதிலிருந்து கையில் ஏதோ பார்சலுடன் இறங்கிய ஒருவன், நடைமேடை மீது ஏறி, முழுங்கால் அளவு இருந்த மதில் சுவரை தாண்டி, திகார் ஜெயில் மதில் சுவர் பக்கத்திலிருந்த மரத்தடியில் மறைந்தான். பிறகு யாராவது தன்னை கவனிக்கிறார்களா, என சுற்றி பார்த்துவிட்டு தன் கையிலிருந்த பார்சலை ஜெயிலுக்குள் வீசினான்.

‘மாமா அங்க பாரு காருகாரன் என்னத்தையோ ஜெயிலுக்குள்ள வீசுறான்!!.

‘ஆமாண்டா நானும் பார்த்தேன்’.

‘மாமா அங்கு பாரு… நமக்கு முன்னால ஒரு போலீஸ் காரரு ஓடிவாறார்.’

‘டே அப்படியே திரும்பி பாரு’

‘பின்னாடி என்ன மாமா’ என திரும்பினேன். அங்கேயும் ஒரு போலிஸ்காரர் லத்தியுடன் ஓடி வந்துக் கொண்டிருந்தார். எனக்கு பயம் வயிற்றைக் கிள்ளியது.

‘மாமா, அவங்க ரெண்டு பேரும் நம்மள பாத்து தான் ஓடி வாறாங்க. வா மாமா அந்த பக்கம் போயிருவோம்’.

‘பயப்படாத இருடா, நாம தான் எந்த தப்பும் பண்ணலயே’ என என் கையை பிடித்தார்.

‘பயப்படாதன்னு சொன்னீங்க. ஆனா உங்க கை நடுங்குது’

‘ஏண்டா இதென்ன காமெடி பண்ற நேரமா’

‘சரி விடு மாமா, கோபப்படாத. வா நாம அந்த பக்கம் போயிருவோம்;;;;;;;;;;’ என நானும் மாமாவும் நடைமேடையை விட்டு இறங்கி அந்த பக்கம் போனோம்.

நடைமேடயில் ஓடி வந்த இரண்டு போலீஸ் காரர்களும் பார்சலை தூக்கி எறிந்தவனை மடக்கி பிடித்து கன்னத்தில் பளார் பளார் என விட்டு ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர். நான் மாமாவும் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.

‘மாமா அந்த சிவப்பு கலரு கார்க்காரன் என்னத்த ஜெயிலுக்குள்ள தூக்கி வீசியிருப்பான்?’

‘யாருக்குடா தெரியும். ஆனால் செல்போன், போதை பொருள், ஆயுதமெல்லாம் இப்படித் தான் தூக்கி வீசி கடத்துறாங்கன்னு நியூஸ் பேப்பர்ல படிச்சிருக்கேன்’

‘ஓ! இப்படியெல்லாம் பண்றாங்களா. மாமா எனக்கு ஒரு டவுட்டு இவன் மரத்துக்கு பின்னால போய் யாருக்கும் தெரியாம தான வீசினான் பிறகு எப்படி ரோட்டுல நிக்குற போலீஸ்காரங்களுக்கு கரெக்டா தெரிஞ்சுது?’

‘கோபுரத்துல நிக்குற போலீஸ்காரங்க கையில இருக்கிற வயர்லஸ் போன் மூலமாக இவங்க கிட்ட சொல்லியிருக்கலாம்’.

‘ம்ம்.... ஒன்னு கவனிச்சிங்களா மாமா..? அவங்க பாக்க டெல்லி போலீஸ் மாதிரி இல்லல்ல’

‘ஆமாண்டா இப்படி வெறட்டி, வெறட்டி பிடிக்கிறாங்கன்னா கண்டிப்பா ஏதாவது ஸ்பெ~லான போலீசா தான் இருக்கும்’.

இருவரும் பேசிக் கொண்டே திகார் ஜெயில் 4ம் நம்பர் கேட்டுக்கு வந்திருந்தோம். கேட் முன்பு துப்பாக்கியுடன் சில காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். அதற்கு பக்கத்தில் பார்வையாளர்கள் உள்ளே செல்ல சிறிய கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே மக்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

நானும் மாமாவும் உள்ளே நுழைந்தோம். ஒரு பக்கம் மக்கள் வரிசையாக ஒரு அறைக்குள் சென்று கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சில பேர் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை ஒப்படைத்து விட்டு வரிசையில் போய் நின்றார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.