(Reading time: 12 - 24 minutes)

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,

வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,

மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,

அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,

காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,

தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.

என்று ஒரு பெண் தன்னை அந்த கோதை எனவே நினைத்துக்கொண்டு அந்த நாராயணனை நினைத்து நடனமாடிக்கொண்டிருக்க, விருந்தா என்னும் பேதையோ, என்னையே நோக்கிக் கொண்டிருந்தாள், அருகில் இருக்கும் தோழியுடன் பேசுவது போல.  அவள் கண்களில் நான் அந்த நொடி கண்டது என்ன? குழம்பிப்போனது மனது.

அதன்பின் அவளைப் பார்க்காமல் தான் இருந்தேன்.  இசை, நடனம் என மேடை களைகட்டியது.  Contemporary, free style, குத்து என்று அனைத்து வகையான நடனங்களிலும், பாடுவதிலும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு தங்களது திறமைகளை பறைசாற்றிக்கொண்டிருந்தனர்.  அப்போது தான் அவளது பெயர் அழைக்கப்பட்டது.  என்ன செய்யப்போகிறாள் என்று பார்க்கும்போதே தன் இனிய குரலால் அழகாக ஒரு பாடல் பாடினாள்.  வைரமுத்துவின் வரிகளுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல இருந்தது அவளது குரல்.

மாமனே ஒன்னத்தாங்காம ஒத்தையில் சோறும் உங்காம

பாவி நான் பருத்தி நாராப் போனேனே

காகம்தான் கத்திப் போனாலும் கதவுதான் சத்தம் போட்டாலும்

ஒம்முகம் பாக்க ஓடி வந்தேனே

ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே

ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே

ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே

அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே

முத்து மாமா என்ன விட்டுப் போகாதே

என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே

என்று என்னைப் பார்த்து உருகிப் பாடிக்கொண்டிருந்தாள்.  இன்னும் இவள் என்னை மறக்கவில்லையோ என எண்ணத்தோன்றியது எனக்கு. 

அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்து எல்லாரிடமும் பேசிவிட்டுக் கிளம்பும்போது என்னையும் அறியாமல் மீண்டும் என் கண்கள் தேடியது விருந்தாவைத் தான்.  சில நொடி தேடலுக்குப் பின் ஓர் ஓரமாக அமர்ந்து அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டேன்.  இப்போதும் அவள் காலையில் இருந்து என்னைக் கண்ட அதே பார்வை.  இந்த சமயம், முன் எப்போதும் இருந்ததைவிட அதிகமாகவே காண முடிந்தது.  இந்த முறை என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.  ‘இந்த ஜென்மத்தில் இதுதான் நம் கடைசி சந்திப்பென்றால் என் வாழ்நாள் முழுக்க எனக்கு நினைத்துப் பார்க்க சேகரிக்கிறேன் உன் நினைவுகளை’ என்று சொல்லாமல் சொல்லியது அந்தப் பார்வை.  உடனே சென்று அவளை அணைத்துக்கொள்ள ஏங்கின என் கைகள்.

என்ன இது? அந்த விழிகளும் அதில் தெரியும் ஏக்கமும் என்னை ஏதோ செய்கிறதே? இதுதான் காதலா? இருக்கலாம்.  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.  இன்னும் ஒரு முறை அந்தக் கண்களில் இப்படி ஒரு பார்வையை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்பது தெரிந்துபோனது.  பேசிப்பார்க்கத் தோன்றியதால் விருந்தாவின் அருகில் சென்று கல்லூரிக்கு அருகில் இருக்கும் உணவு விடுதிக்கு வருமாறு அழைத்தேன்.  ஆச்சரியத்துடன் பார்த்தாலும், சரி என்று தலையசைத்தாள்.  பின் இருவரும் தனித்தனியாக அங்கு சென்றோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.