(Reading time: 12 - 24 minutes)

ந்த உணவு விடுதியில் ஒவ்வொரு குடிலிலும் ஒவ்வொரு மேசையும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.  நால்வர் அமரக்கூடிய மேசையில் எதிரெதிரே அமர்ந்து குளிர்பானம்  கொண்டுவர சொல்லிவிட்டு அமர்ந்திருந்தோம்.  யார் முதலில் பேசுவது என ஒரு தயக்கம் இருவருக்குள்ளும்.  சில மணித்துளிகளில் நாங்கள் கேட்ட பானமும் வந்தது.  மெதுவாக ஸ்ட்ராவை வைத்துக் கலக்கிக்கொண்டு இருந்தோம்.  விருந்தா முதலில் பேச மாட்டாள் என்று நன்கு தெரிந்துபோனது எனக்கு.  சரி, முதலில் தைரியத்தை வரவழைப்போம் என நினைத்து இரு மடக்கு குடித்து தொண்டையை சரி செய்து கொண்டு ஆரம்பித்தேன்.

“எப்படி இருக்க விருந்தா?”

“ம்ம்ம்ம்.  நீங்க?”

“நல்ல இருக்கேன்.  இப்போ என்ன பன்ற?”

“நான் பெங்களூர்ல xxxx கம்பனில வேலை செய்யுறேன்.”

“ஓ… நான்…” என்று நான் என்னைப்பற்றி கூற ஆரம்பிக்க, “எனக்குத் தெரியும்” என்றாள்.  என்னைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறாள் என்பது என் நெஞ்சில் ஒரு ஓரத்தில் சுகத்தைத் தந்தது.

எப்படி அடுத்தது கேட்க நினைப்பதை கேட்பது என நான் யோசித்துக்கொண்டிருக்க, அவளே தொடர்ந்தாள்.

“எதுக்கு வர சொன்னீங்க?”

“அது வந்து…. உனக்கு எப்போ திருமணம்?”  ஒரு வழியாக கேட்டேவிட்டேன்.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள்.  பின், “பாத்துட்டு தான் இருக்காங்க.  எனக்குப் புடிக்கல” என்றாள்.

“ஏன்?”

இந்த கேள்வி அவள் செவியில் விழுந்த அடுத்த நொடி என்னை நோக்கினாள், ‘உனக்குத் தெரியாதா?’ என.  எனக்குத் தெரியும் என்பதை அவள் அறிந்தே இருந்தாள் போல.

“உங்க வீட்டுல யாரும் எதுவும் சொல்லலியா?”

“கேட்டுட்டு தான் இருக்காங்க.  ஒருவேளை, மனசுல யாராவது இருந்தா சொல்லுன்னு சொன்னங்க.”

“அதுக்கு நீ என்ன சொன்ன?”

“ஒன்னும் சொல்லல”

அதன்பின், நான் கேட்க நினைத்ததை கேட்டேன், ஒரு வழியாக.  “நான் பெண் கேட்டு வந்தால் வேண்டாம்ன்னு சொல்லிடுவியா?”

சில கணங்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்; பின்புதான் நான் கேட்டது புரிந்தது என்று அவளது உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் முகமே காட்டிக் கொடுத்தது. புரிந்தபின் என் விழிகளை கூர்ந்து பார்த்தாள்.  பிறகு என்ன அறிந்துகொண்டாளோ, என் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.

எனக்கு என்ன செய்வது எனப் புரியாததால் அவளுக்கு அருகில் இருந்த நாற்காலியை இன்னும் அருகில் இழுத்துப் போட்டு அமர்ந்து, “விருந்து” என விளித்து அவள் தோளைத்தொட்டேன்.  உடனே என் தோளிலேயே சாய்ந்து அழுதாள்.  அழுது ஓயும்வரை லேசாக தட்டிக்கொடுப்பதைத்தவிர எதுவும் தோன்றவில்லை எனக்கு.  அதற்கு இன்னொரு காரணம், எனக்கு பெண்களுடன் பேசிப்பழக்கம் இல்லை.  அதனால் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

விருந்தா இயல்பு நிலைக்கு வந்தவுடன் பேச ஆரம்பித்தாள்.  “நீங்க இன்னைக்கு இங்க வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை.  எங்கே என்னை சந்திக்க வேண்டாம் என்று தான் நீங்கள் இவ்வளவு வருடமாக வரலன்னு நெனைச்சேன்.  ஆனால், இன்று, என்னை….. என்னால நம்பவே முடியலை” என்றாள். 

எனக்கு விருந்தாவின் மனநிலை புரிந்தது.  கிட்டாது என மனத்தில் நாம் எண்ணிய ஒன்று எதிர்பாராமல் கிடைத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது அவளது மனம்.  அவளுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது இருப்பதால் நான் பேச ஆரம்பித்தேன்.

“என்னை மன்னிச்சுடு விருந்தா.  படிக்கும்போது வழக்கமாக தோன்றும் ஈர்ப்பு என்று தான் நினைத்தேன்.  ஆனால், இன்னைக்கு உன்னை பார்க்கும்போது தான் தெரிந்தது, இது அதற்கும் மேல் என்று.  உன்னைக் கண்டதிலிருந்தே என் நெஞ்சில் ஒரு சலனம்.  அங்கிருந்து கிளம்பும்போது தான் உணர்ந்தேன், உன்னை நீங்குவது கடினம் என்று.  இதுக்கு பெயர் என்னன்னு எனக்கு சொல்ல தெரியல.  ஆனா, உன் கூடவே இருக்கனும், உன்னை நல்லா பாதுக்கனும், நீ என் மேல பாசமா இருக்குறத ரசிக்கனும்ன்னு என்னென்னமோ தோனுச்சு.  அதனால தான் உன்கூட பேசவந்தேன்.  ஒருவேளை வேறு யாராவது உன் lifeல இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கனும்ன்னு.  உன்கிட்ட ஏன்னு கேட்டபோது ஒரு பார்வை பார்த்தியே, அப்போ தான் தெரிஞ்சுது, நானும் உன்ன காதலிக்கிறேன்னு.”

தன் தோளில் இருந்து தலையை தூக்கி பார்த்த விருந்தாவின் வியப்பான பார்வையை நோக்கிகொண்டே மேலும் பேசினான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.