(Reading time: 10 - 20 minutes)

யக்கத்தில் தடுமாறி தடுமாறி வரவேற்பை நெருங்கி, அவளை பற்றி, அவள் இருக்கும் நிலை பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆவலில் கேட்டான் ஆதி

'மிசஸ் சௌம்யா... எந்த ரூம்லே... இருக்காங்க???' கேட்டபடியே அவன் திரும்ப, அங்கே  மார்புக்கு குறுக்கே கை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் அவன்!!! காலையில் அவளுடன் பார்த்தானே இவனை!!! இவன் தான் அவள் கணவன் என்று புரிகிறது ஆதிக்கு. அவன் பெயரெல்லாம் தெரியவில்லை.

அவன் பார்த்த பார்வையில் தன்னை பற்றி அவனுக்கு எல்லாம் தெரியுமென்றே தோன்றியது ஆதிக்கு. என்  புகைப்படம் கூட பார்த்திருக்க கூடும்.

'என்ன கேட்க அவனிடம்??? என்ன பேச அவனிடம்??? சின்ன புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான் ஆதி. அவள் கணவனும் எதுவும் பேசாமல் அங்கிருந்து கடந்து நடந்தான்.

நிமிடங்கள் கடந்துக்கொண்டே இருக்க, நேரம் இரவு எட்டை நெருங்கி இருக்க ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவனை மருத்துவமனையையே சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருந்தான் ஆதி.

காலையில் அவன் கண்ட காட்சி இதுதான்!!!

நிறைமாத கர்ப்பிணியாய், கூட ஆரம்பித்திருந்த வலியின் தாக்கம் முகத்தில் தெரிய கணவனின் தோளை பிடித்தபடி மெல்ல மெல்ல நடந்து வந்துக்கொண்டிருந்தாள் சௌம்யா!!!

அவள் இவனை கவனித்ததாக தெரியவில்லை. இப்போது அவளுக்கும் இவனுக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லைதான் என்றாலும் இப்போது அவள் நலமறிந்துகொள்ள துடிக்கிறது மனம்.

தவறுகள் செய்யும் போது எதுவுமே தெரிவதில்லை. ஆனால் அதற்கான தண்டனைகள் கிடைக்கும் போது சுளீர் சுளீரென வலிக்கிறது. அப்பாவின் திடீர் மரணம், வியாபாரத்தில் நஷ்டங்கள், வீட்டில் நிம்மதியின்மை எல்லாம் அவள் விலகி சென்ற பிறகு தானோ???

சில நிமிடங்கள் கழித்து திடீரென கண்ணில் தென்பட்டான் அவள் கணவன்.

கைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டே வந்துக்கொண்டிருந்தான் அவன். அவனை கடந்து நடந்த வேளையில் கொஞ்சம் சத்தமாக சொன்னான்.

'சௌம்யாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க...' ஆதியின் முகத்தில் மகிழ்ச்சியின் தாண்டவம். அவள் கணவன் அதையும் கவனித்திருந்தான்.

ஆதி அப்படியே நின்றுவிட, என்ன தோன்றியதோ??? அழைப்பை துண்டித்துவிட்டு ஆதியின் அருகில் வந்தான் அவன்.

'நான் கெளதம். சௌம்யாவோட ஹஸ்பண்ட்' என்றான் நிதனாமாக.

'ம்... தெரிஞ்சது..'

'சௌம்யா உங்களை பத்தி எல்லாம் சொல்லி இருக்கா..'

'ம்..' குற்ற உணர்வு அழுத்த குரல் வெளிவரவில்லை.

'காலையிலே உங்க அம்மாவோட வரும்போதே நான் உங்களை பார்த்தேன்' என்றான் கெளதம்.

'ம்...' என்ற ஆதி தயக்கத்தில் மூழ்கிய பார்வை பார்க்க

'என்ன வேணும் உங்களுக்கு? குழந்தையை பார்க்கணுமா?' அவன் மனம் படித்து விட்டவனாக புன்னகையுடன் கேட்டான் கெளதம்.

ஆச்சர்ய கடலில் வீழ்ந்து மீண்டான் ஆதி. எதிரில் நிற்பவனை கையெடுத்து வணங்க வேண்டும் போல் இருந்தது. எப்படிப்பட்ட மனிதன் இவன்!!!  நானும் இருக்கிறேனே மனிதன் என்ற பெயரில் சுயநல மிருகமாய்!!! பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. அவனையே பார்த்துக்கொண்டு ஆதி நின்றுவிட..

'சரி வாங்க..' என்றபடி நடந்தான் கெளதம். 'சௌம்யா தூங்கிட்டு இருக்கா...'

அந்த அறைக்குள்ளே இருவரும் நுழைய தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது கையும் காலும் முளைத்த பூ பந்து... கௌதம் அதை எடுத்து அவனிடம் நீட்ட நடுங்கும் கைகளுடன் அதை வாங்கிக்கொண்டான் ஆதி.

'சில நிமடங்கள் கண்ணில் சேர்ந்த நீருடன் அதை பார்த்துக்கொண்டிருந்தவனின் மனம் நெகிழ்ச்சியில் கரைந்து கிடந்தது. மறுபடியும் அதை கெளதமிடமே கொடுத்தான்.

கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த சௌம்யாவை ஒரு முறை ஆதியின் பார்வை தொட்டு திரும்பியது.

சில நிமிடங்கள் கழித்து இருவரும் வெளியே வர கௌதமின் கைகளை பிடித்துக்கொண்டான் ஆதி.

'ரொம்ப தேங்க்ஸ்..'

'இதிலே என்ன இருக்கு மிஸ்டர் ஆதி. மத்தியானத்திலிருந்து நீங்க இதுக்காகதான் தவிக்கறீங்கன்னு தோணிச்சு.. அதான் கூட்டிட்டு வந்தேன்..

'இங்கே வந்து நிக்கற தகுதி, உங்ககிட்டேயெல்லாம் பேசற தகுதி எல்லாம் இல்லை எனக்கு .. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணோம். அவளை எங்க வீட்டிலே யாருக்கும் பிடிக்காதுதான். எங்களுக்கு ரொம்ப நாள் குழந்தை இல்லை அதுக்கு அவ மட்டும் தான் காரணம் அப்படிங்கிற மாதிரி வீட்டிலே எல்லாரும் பேச, டாக்டரும் அவ கிட்டே கொஞ்சம் குறை இருக்குன்னு சொல்ல, கொஞ்சம் கூட யோசிக்காம அவளை நிறைய காயப்படுத்தி விவாகரத்து பண்ணிட்டேன். இப்போ பாருங்க அவளுக்கு ஆண்டவன் கொடுத்திட்டான் குழந்தையை. எனக்கு இன்னும் இல்லை மிஸ்டர் கெளதம்' அவன் குரல் உடைந்தது.'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.