(Reading time: 7 - 14 minutes)

இரவுகள் சிறுகதைத் தொடர்

01 - காப்பி வித் பேய் - சுபஸ்ரீ

Coffee with ghost

ஹாய் பிரெண்ட்ஸ்

“இரவுகள்” என்ற தலைப்பை மைய்யமாக வைத்து சிறுகதைத் தொடரைத் தொடங்குகிறேன்.  அதில் முதல் சிறுகதையான “காப்பி வித் பேய்”  உங்கள் பார்வைக்கு . .

காயத்ரி அந்த மங்களான நிலவொளியில் நடந்தாள். உலர்ந்த சரகுகள் மேல் அவளின் கால் பட்டு “சரக் … சரக்” கென ஒலியை எழுப்பியது. ஆந்தைகளின் வினோத சத்தம் இருளை இன்னும் பயங்கரமாக்கியது. அவளுக்குள் அச்சம் சற்றே துளிர்விட தொடங்கியது.

அவள் நடையில் ஒரு நடுக்கம் மெல்ல எட்டிப் பார்த்தது. ஆனாலும் தொடர்ந்து நடந்தாள். தேய்பிறை நிலவு மேக்கங்களுக்குள் மறைந்து அவளுடன் கண்ணாமூச்சி விளையாடியது. இருள் தன் கைகளை அகலமாக விரித்து இவளை விழுங்க தொடங்கியது. அப்போது சட்டென ஒரு அழகான இளம் பெண் காயத்ரி முன் தோன்றினாள். நிலவொளியில் அழகாக தெரிந்தாள்.

“வா காயத்திரி?” புதியவள் வரவேற்றாள்

“நீ யாரு?”

“உனக்கா தெரியாது பாதகி” என கோப சிரிப்பை கக்கினாள். அந்த சிரிப்பு நொடிக்குநொடி அதிகமானது. அவள் திடீலென கோரமான அருவருப்பான அரக்கியாக மாறினாள். அப்படியே காயத்திரியை விழுங்க அவளை நெருங்கினாள்.

“ச்சே என்ன இது இனிமே ராத்திரி படுக்கும்போது டிவி சீரீயல் பாக்கவே கூடாது” என முணுமுணுத்துக் கொண்டே சேனலை மாற்றினார் வக்கீல் வரதாச்சாரி.

வழக்கறிஞர் வரதாச்சாரி எத்தனையோ வழக்குகளை தன் வாத திறமையால் வென்றவர். மனைவி அலமு என்கிற அலமேலு ஒரே மகள் கிருத்திகா அவளும் வக்கீலுக்கு படித்துக் கொண்டிருக்கிறாள்.      

சுவரில் தொங்கிய கடிகாரம் இரவு பத்தரை என காட்டியது. சமையலறை நோக்கி நடந்தார். அவர் மனைவியும் மகளும் நெருங்கிய உறவினர் திருமணத்துக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் திரும்ப இரண்டு நாட்கள் ஆகும். ஒரு கொலைகாரன் வாய்க்கரிசி போட்டதால் இவரால் அக்ஷதை போட போகமுடியவில்லை.  

மனைவி ஊருக்கு சென்றுள்ளதால் சுய நளபாகம் . . சுமாராக சமைப்பார். காலையில் வத்த குழம்பும் சுட்ட அப்பளமும் காப்பாற்றியது. இரவுக்கு முன்னமே அலமு மாமி பிசைந்து பிரிட்ஜில் வைத்திருந்த சப்பாத்தி  மாவில்  தீந்து போன இலங்கையும் ஆஸ்திரேலியாவுமாக சப்பாத்தி செய்து தக்காளி கெட்சப் உதவியோடு சிரமப்பட்டு முழுங்கினார்.

பிறகு காபியை கலந்து ஹாலுக்கு கொண்டு வந்து வைத்துக் கொண்டார். அவருக்கு இரவு படுக்கும்முன் காபி குடிக்கும் பழக்கம் உண்டு.

“இந்த லோகத்துல ராத்திரி காபி குடிக்கிற ஓரே மனுஷன் நீங்கதான் போங்கோ” என அடிக்கடி முணுமுணுப்பார் மாமி

“நேக்கு காபி குடிச்சாதாண்டி தூக்கம் வரும் . . . இப்படியே பழகிடுத்து” என இவரும் சளைக்காமல் பதிலளிப்பார். அது ஏனோ இப்போது நினைவு வந்தது. ஒருவர் அருகில் இருக்கும்போது அவரை நாம் கண்டு கொள்வதேயில்லை. சற்று விலகி போனால் அவர்கள் நினைவு நம்மை சுற்றிக் கொண்டே இருக்கும்.

வெளியே லேசாக தூர ஆரம்பித்து இருந்தது. இடியும் மின்னலும் பக்கவாத்தியமானது. “ஏண்ணா மழைவர மாதிரி இருந்தா . . . கேன்டுலும் தீப்பெட்டியும் எடுத்து பக்கத்துலயே வெச்சிக்கோங்கோ  . . . நம்ம ஏரியால மழை தூரினாலே கரண்ட கட் பண்ணிடுவானே . . இன்வெர்டர் வேல செய்யல . . ரிப்பேர் செய்ய கடங்காரன் இன்னமும் வரல” என  அலமு மாமியின் வாக்கியம்  இப்போது அசரீரீயாக காதில் ஒலித்தது. “கரண்ட் போனா பாத்துகலாம்” என நினைத்த அடுத்த நொடி கரண்ட் கட் ஆனது.

தன் செல்போன் டார்ச்சை உயிர்பித்து. இரண்டு கேன்டில்களை ஏற்றினார். பின்பு காபியை கொஞ்சம் உறிஞ்சினார். இதமான சூடான காபி தொண்டைகுழி வழியே ருசியை பரப்பி உள்ளே சென்றது. நாக்கில் இன்னமும் காபியின் சுவை மிச்சமிருந்தது. கமகம வென காபியின் மனம் சுகமாக இருந்தது. “பேஷ் பேஷ் காபி பிரமாதம்” என தன்னைதானே பாராட்டிக் கொண்டார்.

அப்போது ஜன்னல் பட்டென அடித்துக் கொண்டது. யாரோ ஒருவர் சட்டென நகர்வது போல தோன்றவே ஜன்னலருகில் சென்று பார்த்தார். யாருமில்லை எங்கும் இருள் பரவிகிடந்தது. ஏனோ அந்த சீரியல் நினைவுக்கு வந்து பீதியை கிளப்பியது. பெருமாள் அஷ்டோத்திரத்தை முணுமுணுத்தார்.

திரும்ப வந்து சோபாவில் அமர்ந்தார். ஏதோ சத்தம் கேட்க திரும்பியவர். சோபாவை அடுத்த நாற்காலியில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். ஒரு நொடி அவர் இதயம் துடிப்பதை நிருத்தியது. பயத்தில் வெலவெலத்து போனார்.

“நீ … நீ?” வார்த்தை தடுமாறியது

பதில் வரவில்லை மௌனமாய் அது அவரையே பார்த்தது

“ஆ ஆ . . பேய்ய்ய்” என பயத்தில் உளறினார்

“என் பேரு சங்கர் ஆனா ஆவி . . .பேய்  ... .உங்களுக்கு எந்த பேர் சௌகிரியமோ அப்படியே கூப்பிடுங்க. நான் அந்த ரகம்தான் ” சாதாரணமாய் பதிலளித்தது

“எப்படி .  . உள்ள” இன்னும் பயம் தெளியவில்லை

“ஜன்னல் வழியா வந்தேன் போயிடுவேன் பயப்படாதீங்க”

சிறுவன் பதினைந்து வயதிருக்கும். அவன் பேச்சு வரதாசாரிக்கு சற்று பயத்தை விளக்கியது.

“ஏன் இங்க?”

“சீரியல் பாக்க”

“நீயுமா டிவி சீரியல் பாக்குற?” ஆச்சரியத்தில் அவர் முட்டை கண்கள் மூக்குகண்ணாடி வழியே ஒரு நொடி வெளியே வந்தது போல இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.