(Reading time: 6 - 11 minutes)

சிறுகதை - தேவதூதர் - ஐ.கிருத்திகா

Earth-Angel

ரிசப்ஷனில்  இருந்த  அந்த  பெண்மணிக்கு  அறுபது  வயதிருக்கலாம். மெல்லிய  தேகம். சந்தன  நிற  சேலையும்    அதற்கு  பொருத்தமாக  முழங்கை   வரை  நீண்டிருந்த  சந்தன  நிற  ரவிக்கையும்   அணிந்திருந்தார். கழுத்தில்  நீண்டு  தொங்கிய  சங்கிலியில்,  சிலுவையில்  அறையப்பட்ட  இயேசு. கண்ணாடி  பிரேமுக்கு  பின்னால்  கனிவான  கண்கள். 

வரும்  நோயாளிகளின்  விபரம்  கேட்டு , தகுந்த  மருத்துவரை  கைக்காட்டி, அவர்களிடம்   அனுப்பி  வைப்பது  அப்பெண்மணியின்  வேலை. 

" பேர்  என்ன....?"

இப்போது  அவர்  என்னைப்பார்த்து  கேட்டார்.

" மாலதி...."

நான்  சித்தியின்  பெயரை  கூறினேன். 

" என்ன  பிரச்சனை?"

"தைராய்டா  இருக்கலாமோன்னு  ஒரு  சந்தேகம்.  செக்கப்  பண்ணிட்டு  போய்டலாம்ன்னு  வந்தோம்"

அவர்  மெலிதாய்  புன்னகைத்து  மருத்துவர்  இருக்கும்  அறையை  காட்டினார். அது  பெரிய மருத்துவமனை  என்பதால்  நிறைய  துறை  சார்ந்த  மருத்துவர்கள்  அங்கு  வருவதுண்டு.

அப்பெண்மணி  காட்டிய  அறைக்கு எதிரே  இருந்த  நாற்காலியில்  நானும், சித்தியும்  அமர்ந்தோம். சித்தியின்  முகம்  வெளிறிப்போயிருந்தது. 

கடந்த  இரு  மாதங்களாக  உடம்பு  சற்று  உப்பினாற்  போலிருக்க, என்னுடைய  பிடிவாதத்தால் மருத்துவ  பரிசோதனைக்கு  சம்மதித்து  வந்திருந்தாள்.

மருத்துவமனை  மிக  சுத்தமாயிருந்தது. அது  ஒரு  கிறித்துவ  மிஷனுடைய  ரொம்ப  காலத்து   மருத்துவமனை. ஆங்கிலேய  காலத்தில்  கட்டப்பட்ட  அந்த  கட்டிடம்  மிக  கம்பீரமாகவும், சுத்த  பொலிவுடனும்  ஜொலித்தது. அசுத்த  வாடையோ, பினாயில்  வாடையோ  இல்லாதிருந்தது  மனதுக்கு  இதமாயிருந்தது.

வெள்ளையுடை  நர்ஸுகள்  கையில்  மருந்துகளுடனும், சிலர்  வீல்  சேரில்  நோயாளிகளை  வைத்து  தள்ளியபடியும்  இளஞ்சிட்டுக்களாய்  திரிந்து  கொண்டிருக்க, சிறு, சிறு  பேச்சுக்களுக்கிடையேயும்  அந்தகாரமில்லாத  அமைதியில்  அந்த  இடம்  ஆழ்ந்திருந்தது.

கழுவிவிட்டாற்  போலிருந்த  வராண்டாவின்   நடுநாயகமாக  மேரிமாதா  சிலை  அமைக்கப்பட்டிருக்க, அதன்  கையில்  குழந்தை  இயேசு. எதிரே  பெரிய  உண்டியல். உண்டியல் மேலிருந்த  தட்டில்  மெழுகுவர்த்திகள்   எரிந்து  கொண்டிருந்தன. 

நான்  கடவுளை  நோக்கி  கை  தொழுகையில்  பின்னால்  கரங்கள்  கூப்பிய  நிலையில்  சித்தி. 

" பெருமாளை  சேவிச்சிட்டு  பேசாம  இருந்துடுவேன்" என்று  நொடிக்கொருதரம்  சொல்பவள். சங்கடம்  வந்து  விட்டால்  ஆறுதலாய்  முகம்  புதைக்க  ஏதாவது  ஒரு  மடி  கிடைத்தாலும்  சரிதானே. அந்த  உணர்வுதான்  போலும். 

மெழுகுவர்த்தியில்   ஒன்றிரண்டு  அணைந்து  போயிருக்க, நெற்றியில்  விபூதிப்பட்டை  இட்டிருந்த  செக்யூரிட்டி  அதை  திரும்பவும்  ஒளியூட்டினார்.

"மனசுல  என்ன  வருத்தத்தோட    இதை  ஏத்தினாங்களோ...அணைஞ்சு  போயிருக்கறத  பாக்க  கஷ்டமாயிருக்கு...." என்றபடி  புன்னகைத்தவர்," மெழுகுவர்த்தி  ஏத்தி  வைக்கற  பழக்கத்தை  உண்டாக்கினவங்க  ரிசப்சன்ல  இருக்க  மேரி   சிஸ்டர்  தான். முன்னாடி  இங்கே  வெறும்  உண்டியல்தான்  இருந்தது. உண்டியல்ல  போடற  காசு  மிசனோட  பொதுசேவைக்கு  பயன்படும். ஏத்தி வைக்கற  மெழுகுவர்த்தி  நோயாளிகளோட  பிரார்த்தனையை  கடவுள்கிட்ட  நேரடியா  கொண்டு  போகும்னு  சிஸ்டர்  சொல்லுவாங்க. கடவுளின்  முன்னே  மெழுகுவர்த்தி  எரிஞ்சு, கரையும்  போது  நோயாளிகளின்  நோயும்  கரைஞ்சு  போகும்ங்கறது  அவங்களோட  நம்பிக்கை" என்று  செக்யூரிட்டி  சொல்லிக்கொண்டே  போக, எனக்கு  ஆச்சர்யமாக  இருந்தது.

அரைமணி  நேர  காத்திருப்புக்கு  பின்  மருத்துவர்  அழைத்தார். சம்பிரதாய  பரிசோதனைகளுக்கு  பிறகு, சில  டெஸ்டுகள்  எழுதி  தந்தார்.

" தைராய்டு  டெஸ்ட்  எழுதியிருக்கேன். லேப்ல  கொடுத்துட்டு  போங்க. மூணு  நாள்ல  ரிசல்ட்  வந்துடும். வந்ததும்  என்னை  வந்து  பாருங்க...." 

அவருக்கு  நன்றி  தெரிவித்து  வெளியில்  வந்த  போது  சித்தி  அழுது  விடுவாள்  போலிருந்தாள். 

" என்னடி  இது, இதெல்லாம்  எனக்கு  தேவையா?" 

" பதட்டப்படாதே  சித்தி...கொஞ்ச  நேரம்  அமைதியா  இரு"

அவளை  சமாதானப்படுத்த  எண்ணி, வெளியிலிருந்த  நாற்காலியில்  அமரவைத்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.