(Reading time: 6 - 11 minutes)

கையில்  காகிதங்களோடு  அந்த  பக்கமாய்  வந்த  மேரி  சிஸ்டர் ,

" டாக்டரைப்  பார்த்தாச்சா...?" என்றதும், சித்தியின்  முகம்  தொங்கிப்  போனது. 

" டாக்டர்  தைராய்டு  டெஸ்ட்டுக்கு  எழுதி  கொடுத்திருக்கார். அதான்  சித்தி  இப்படி...."

" என்னாச்சும்மா...ஏன்  ஒரு மாதிரி  இருக்கீங்க....?"

" என்னால  இதை  ஏதுக்கவே  முடியலை  சிஸ்டர்...இதுநாள்  வரை  சீக்கு, பிணின்னு  ஆஸ்பத்திரி  பக்கம்  போனதேயில்லை. பிரசவம்  கூட  வீட்டுலதான். இவ்ளோ  வருஷத்துக்கப்புறம்  இப்படியொரு  கஷ்டம்  வரும்னு  நான்  நெனச்சுக்கூட  பார்க்கலை. "

சித்தி  தழுதழுத்தாள். 

" இவ்ளோ  நாள்  நல்லா  இருந்தேன்னு  உங்க  வாயாலேயே  சொல்றீங்க. அது  எவ்ளோ  பெரிய  வரபிரசாதம். இந்த  மருத்துவமனையை  ஒருதரம்  சுத்தி  வந்தீங்கன்னா,  நீங்க  வரம்  வாங்கி  வந்தவங்கதாங்கறது  உங்களுக்கே. தவிரவும்  தைராய்டு  அவ்ளோ  கொடிய  வியாதியில்லம்மா...  தினமும்  ஒரு  மாத்திரை  போட்டுக்கணும், கொஞ்சம்  வாக்கிங்  போகணும், சில  காய்கறிகளை  தவிர்க்கணும், வருஷம்  தவறாம  செக்கப்  செஞ்சிக்கணும். அவ்ளோதான். பல  உயிர்கொல்லி  வியாதிகளுக்கு  மத்தியில  இது ஒண்ணுமேயில்ல.....புரிஞ்சுதாம்மா...?"

 கோவில்  மணியோசை  போன்ற  அவரது  கணீர்க்குரலில்  சித்தி   சற்று   மட்டுப்பட்டிருந்தாள்.

" டெஸ்ட்  பண்ணிப்பாருங்க...எதுவுமில்லாத  பட்சத்துல  சந்தோஷப்படுங்க. தைராய்டா  இருந்தா  கடவுளுக்கு  நன்றி  சொல்லுங்க. ஏன்னா   அவர்  உங்ககிட்ட  நிறைய  சலுகை  காட்டறார். அதனாலதான்  உங்களுக்கு  கடுகத்தனை  கஷ்டம்  மட்டும்  கொடுத்திருக்கார்."

அட்சர  சுத்தமான  அவரது  வார்த்தை  சித்தியின்  முகத்தை  தெளிவாக்கியிருந்தது.

மருந்து, மாத்திரையெல்லாம்  உடம்பு  பலப்படதான். மனசு பலப்பட  இப்படிப்பட்ட  வார்த்தைகளே உகந்தவை.

மேரி  சிஸ்டர்  மிகக்  கனிவான   பார்வையை வீசிவிட்டு  சென்றார். 

'இந்த  மருத்துவமனையில்  தான்  இவரைப்போல்  இன்னும்  எத்தனையெத்தனை  பெண்மணிகளோ.... '

நான்  வியந்து  நிற்க., மேரிமாதாவும்,  குழந்தை  இயேசுவும்  அழகாய்  புன்னகைத்து  ஆசீர்வதித்து  கொண்டிருந்தனர்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.