(Reading time: 7 - 13 minutes)

இரவுகள் சிறுகதைத் தொடர்

 02. எலி கட்சியா இல்ல எதிர் கட்சியா? - சுபஸ்ரீ

mousetrap

டந்த மூன்று இரவுகள் முற்றிலுமாக வித்தியாசமான நிகழ்வுகள் வீட்டில் நடக்கின்றன.  வீட்டிலுள்ள பொருட்கள் தானாக இடம் மாறுகின்றன. சில சமையல் பாத்திரங்கள் திடீலென தானாக கீழே விழுகின்றன. பல சட்டைகளில் திடீர் கிழிசல். இது சரிபட்டு வரவில்லை என்றால் அடுத்து???? யோசித்தபடியே வேலை செய்தேன்.

வீட்டு வேலை எல்லாம் முடித்தாகிவிட்டது . மசால்வடை வாசனை கும்மென்று மூக்கை துளைத்துக் கொண்டிருந்தது. இரவு பதினோரு மணி. படுக்க என் அறைக்கு சென்றேன். நான் வந்ததைகூட கவனிக்காமல் என் கணவர் ராகவன் தன் ஸ்மார்ட்போனில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தார். வைப்பை வந்ததில் இருந்து வெய்ப்புக்கு மதிப்பு குறைந்துவிட்டது என்ன செய்ய? என் எட்டு வயது மகன் அஷ்வின் அட்டையை போல சுருங்கி கட்டிலில் படுத்திருந்தான். அவன் போர்வையை சரிசெய்துவிட்டேன். 

“என்னங்க நம்ம எதிர்வீட்டு லட்சுமி இருக்காளே அவ” என்று சுவாரசியமாக கூற ஆரம்பித்தேன் என்னவர் கவனித்ததாகவே தெரியவில்லை.  “என்னங்க” சற்றே குரல் உயர்த்தி ….

“என்ன என்ன பத்மினி எதாவது சொன்னியா?”

“நான் பாக்க தீபிகா படுகோணி மாதிரி இருக்கேனா?” வேண்டுமென்றேதான்

“தீபிடுச்ச கோணி மாதிரி இருந்துகிட்டு உனக்கு தீபிகா படுகோணி கேட்டுகுதா” என்னவரின் மைண்ட்வாய்ஸ்  எனக்கு துள்ளியமாக கேட்டது.

கேலியாக “அதுக்கும் மேல” என்றார்

“அப்படின்னா … புரியல?”

இன்னமும் மசால்வடை வாசனை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த்து.

அப்போது “டப்” என்று பெரிய சத்தம் கேட்டது. எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத சத்தம் எப்படிவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். நான் ஓடிப்போய் சமையலறையில் பார்த்தேன் சந்தோஷம் தாங்கவில்லை. மகாராஜாகள் காட்டில் சிங்கம் புலி கரடி போன்றவற்றை வேட்டையாடி வீரத்தோடு திரும்புவதுபோல் எனக்குள் ஒரு பெருமிதம் அறைக்கு திரும்பினேன். “பொறில எலி மாட்டிடுச்சு” சந்தோஷமாக கூறினேன்.

அவரோ “சரி“ என்ற சுவாரஸ்யமில்லா ஒரு வார்த்தையில் என் அத்தனை பெருமிதத்தையும் குறைத்துவிட்டார்.

“நாளைக்கு எலிய வெளியில தூரமா கொண்டு விட்டுடுங்க”

“ம்ம்”

என் நினைவை அந்த எலி ஏனோ முழுவதுமாக ஆக்கிரமித்தது. “எலி எப்படி தூங்கும் ... இருட்டு அதுக்கு பயமா இருக்காதா?”  அவரிடம் கேட்டேன்  எல்லாம்  உலக அறிவ வளர்த்துக்கதான்.

“ரொம்ப முக்கியம்” என்னவரின் மைண்ட்வாய்ஸ்தான்

‘நீ வேணும்னா எலிக்கு துணையா போய் படுத்துக்கோயேன்“ என்றார் (இதுக்கு என் கணவரின் அகராதிபடி “பேசாம தூங்கு இல்லனா கெட் அவுட்“) இதுக்குமேல எதையாவது பேசி பல்ப் வாங்குவதைவிட தூங்குவது மேல் என்ற முடிவோடு கப்சிப்.

எப்போதும் காலையில் பைக்கில் என்னவர் மகனை பள்ளியில் விட்டு அப்படியே அவர் அலுவலகம் செல்லுவார். அன்றும் காலையில் அவர்கள் கிளம்பும்போது

“எலிய மறந்துட்டீங்களே?” என்றேன்

“ஆபீசுக்கா?”

“போறவழியில அப்படியே விட்டுடுங்க”

“ஹய்யா .. எலியும் என்னோட பைக்கில வரபோகுதாம்மா” அஷ்வின் சந்தோஷத்தில் குதித்தான்

“சும்மா இருடா … பத்மினி இப்ப  முடியாது சாயங்காலம் பாக்கலாம்” என்றார் கோபமாக

“நான் ஒரு நாள் பூரா எலியோட தனியா இருக்கணுமா .. முடியவே முடியாது பயமா இருக்குங்க”

“பத்து நாளா எலியோடதான் இருக்க .. அதுவும் அது வெளியில சுத்திட்டு இருக்கும்போது …. அப்ப பயமில்லயா?”

“உண்மைதான் ஆனா ….”

“சும்மா இரு பத்மினி நேரமாச்சு எங்களுக்கு .. ”

“எலிக்கு பசிக்குமே என்ன சாப்பிட தரட்டும் … ”

“நீ சமைக்கிற எதையும் கொடுக்காத சாப்பிடு செத்துடபோது முக்கியமா உன் மசால்வடை” பார்வையில் கேலி

“பை ம்மா …” என்ற அஷ்வின் எலிபொறி அருகில் சென்று “பை எலி”  என அதுக்கும் டாட்டா காட்டினான். இருவரும் கிளம்பினர்.

இப்போது நானும் எலியும் தனியாக வீட்டில்

மரத்தினாலான எலிபொறிக்குள் எலி தப்பிக்க எல்லா முயற்சியும் செய்துக் கொண்டிருந்தது. அருகில் போய் பார்த்தேன்  . . . எலி முதலில் என்னை பார்த்து பயந்தது. பொறியின் மூலையில் போய் ஒட்டிக் கொண்டது. பார்க்கவே ஏனோ பாவமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.