(Reading time: 7 - 13 minutes)

நேத்து ராத்திரியில் இருந்து பொறிக்குள்ள இருக்கு பசிக்குமே என்று பொறியின் கம்பி இடுக்கு வழியாக பிஸ்கட் துண்டுகளை போட்டேன். அது சாப்பிடவில்லை என்மேல் கோபம் போலும் என்னை முறைத்தது.

“என்ன முறைக்கற எனக்கும் உன்மேல கோபம்தான் …  நாலு நாளைக்கு முன்னாடி நானே மசால்வடை செஞ்சி பொறிக்குள்ள வெச்சா சாப்பிட மாட்டே … .. ஆனா நேத்து டீகடை மசால்வடை மட்டும் பிடிச்சிருக்கா?” நான் பேசுவது எதுவும் அதுக்கு புரியாது இருந்தாலும் அதோடு ஏனோ பேசினேன். இப்போது எலிக்கு பயம் கொஞ்சம் விட்டிருந்தது. பிஸ்கட்டை ஆராய்ச்சி செய்ய தொடங்கியிருந்தது.

பாவமாக என்னை பார்த்தது. எனக்கே கஷ்டமாக இருந்தது. “யாரு உன்ன என் வீட்டுக்கு வர சொன்னது … சரி வந்ததும் வந்தே சும்மா இருக்காம ஸூவ கடிச்சி துணிய கடுச்சி எல்லா சாமனையம் உருட்டிவிட்டு என்ன அமர்க்களம். இத்தனையும் பண்ண உனை சும்மா விட்டுவோமா?”

எலி என்னால் எந்த ஆபத்தும் இல்லை என நினைத்ததோ என்னவோ பொறியின் கம்பி வழியாக என்னை நன்றாக பார்த்தது. ஒரு நிமிடம் பொறியை திறந்து எலிக்கு விடுதலை கொடுத்துவிடலாமா என எனக்கு தோன்றியது. அட! என்ன நினைப்பு என நானே என்னை கடிந்துக் கொண்டேன்.

பத்து நாட்களாக கடையில் தேடிபிடித்து எலிப் பொறி வாங்கி. அதை எப்படி பிடிப்பது என ஸ்கெட்ச் போட்டு பிடித்திருக்கிறேன். (எலி தானே புலியா பிடிச்சனு நீங்க கேட்குறீங்க … என் ரேஞ்சுக்கு இதுவே புலி மாதிரிதான்ங்க)

மாலை என் கணவர் எலியை விட்டுவர சென்றார். எலிபொறியை ஒரு பையில் போட்டு கொடுத்த அனுப்பினேன். உள்ளே இருந்த எலி பயத்தில் நடுங்கியது. “பயப்படாத உனை பத்திரமா ஒரு இடத்துல விடுவாங்க ஜாக்கிரதையா போ ..இனிமே இப்படி மாட்டிக்காத ” என அதோடு  பேசினேன். “அம்மா எலிக்கு தமிழ் தெரியுமா?” என மகன் கேட்டான். என் கணவர் என்னை பார்த்து அவனுக்கு பதில் சொல்லு என ஜாடையாக சிரித்தார்.

“வீட்ல பெட்ஸ் வளர்த்தா  அதோடு பேசறதில்லையா?“ என கேட்க வேண்டும்  என தோன்றியது ஆனால்  வாதம் செய்யும் மன நிலையில் நான் இல்லை. எலி சென்றுவிட்டது. எலி மேல் எனக்கு இரக்கம் தோன்றியது என்னவோ உண்மைதான். இனிமேல் இப்படி செய்யவே கூடாது என முடிவு செய்தேன்.

அடுத்து வந்த நாட்களில் எலியின் நினைவு முற்றிலும் இல்லாமல் போனது.

இரண்டு மாதம் கழித்து “பத்மினி என் சட்டைய எலி கடிச்சிருக்கு பாரேன்”  என என் கணவரும். “அம்மா என் புது செருப்பு” என மகனும் சத்தம் போட்டனர்.

“அந்த எலிபொறி எங்க?

“என்னங்க இன்னிக்கு மசால்வடை வாங்கிட்டு வாங்க”

“ராத்திரி எலிய பிடிச்சே ஆகணும்” சரமாரியாக உத்தரவுகளை என்னுள் இருந்து வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல பிறப்பித்தேன்.

அந்த நொடி என்னிடமிருந்த கருணை பரிதாபம் எல்லாம் எங்கு சென்றதோ தெரியவில்லை.

“அன்னிக்கு வந்த எலியா இது?” என என் மூளை கேட்ட கேள்வியை பின்னுக்குதள்ளியபடி  என் மனம் ”இத்தனை நாளா எங்க இருந்த? சுகமா இருந்தியா?” என குசலம் விசாரித்தது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. இன்றைய இரவுக்கான வியூகத்தை அமைத்தபடி.

மீண்டும் என் மூளையின் “நீ எலி கட்சியா? இல்ல எதிர் கட்சியா?” என்ற கேள்விக்கு மட்டும் பதில் தெரியவில்லை.

இரவுகள் - 01

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.