(Reading time: 7 - 13 minutes)

சிறுகதை - நிதர்சனங்கள் - ஐ.கிருத்திகா

running_goat.

ண் சிமிட்டும் நேரத்தில் அந்த சம்பவம் நடந்து விட்டது. நிகழ்ந்த அந்த கொடூரத்துக்கு காரணம் விதியா அல்லது சூழ்நிலையா என்று யூகிக்க முடியவில்லை. ஏனென்றால் அதற்கான அவகாசத்தை அந்த சம்பவம் யாருக்கும் அளிக்கவில்லை. எல்லோரும் உறைந்த தினுசில் நின்றிந்தனர். ஒரு பெண்மணி திகைத்து போய் கையிலிருந்த கூடையை நழுவவிட்டாள். காய்கறிகள் திசைக்கொன்றாய் சிதறி ஓடின. கடைத்தெரு சட்டென்று ஸ்தம்பித்து பின் உயிர் பெற்றது. குமார் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் நின்றிருந்தான்.காய் வாங்குவதற்காக பையோடு வந்து கொண்டிருந்தவனுக்கு அந்த ஆடு தலைதெறிக்க நடுச்சாலையில் ஓடிவந்தபோதே கொஞ்சம் பயம்தான். கல்லை விட்டெறிந்து அதை சாலையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்று நினைத்து ஒரு கல்லையும் எடுத்து விட்டான். 

அவனுடைய எண்ணத்துக்கும் செயலுக்கும் அவ்வளவு இடைவெளி இருந்ததா என்று அவனுக்கு தெரியவில்லை. வாயு வேக, மனோ வேகத்தில் எதிரில் வந்த அந்த காரைக் கண்டு மிரண்டு போய் செய்வதறியாது தலையை சிலுப்பிய ஆடு நொடிப் பொழுதில் காரின் முகப்பில் அறையப்பட்டு "மே...." என்று அலறியபடி தூரத்தில் போய் விழுந்தது. கார் நிற்காமல் பறந்தே போனது.

ஆட்டை துரத்திக்கொண்டு வந்தவள் விழிகள் நிலைகுத்த நின்று விட்டாள்.ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆட்டைப் பார்த்த கறிக்கடை பாய் கூட கலங்கி போய்விட்டார்.

எல்லோரும் உச்சு கொட்டியபடி நகர, அவள் மட்டும் ஆட்டின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

" பொன்னி, இப்படி போயிட்டியேடி...நான் என்னா பண்ணுவேன்."

அவள் நெஞ்சிலடித்து கொண்டு அழுததைப் பார்த்த குமாருக்கு பகீரென்றது. 

' மனிதனுக்கு மனிதன் அன்பு காட்ட மறுக்கும் இந்த உலகத்தில் ஒரு ஆட்டின் மேல் இத்தனை அன்பா இந்த பெண்ணுக்கு..'

" ஏன் பாய், ஆக்சிடெண்ட்டுல செத்த ஆட்டை விலைக்கு வாங்க மாட்டீங்களா?" என்று குமாருக்கு பக்கத்தில் நின்றிந்த ஒருவன் பாயிடம் கேட்க, அவர் அவசரம், அவசரமாக தலையை அசைத்தார். 

" கண்டிப்பா வாங்க மாட்டேன். அடிபட்டு சாவுற ஆட்டை வாங்கக் கூடாதுன்னு ஒரு கொள்கை வச்சிருக்கவன் நான். அதிலிருந்து மாற மாட்டேன்."

பாய் சொல்ல, கேட்டவன் உதட்டை பிதுக்கியபடி நகர்ந்தான். பெரிய யோக்கியன் என்கிற கேலி அதில் தெரிந்தது.

குமார் திரும்பி ஆட்டுக்கு சொந்தக்காரியைப் பார்த்தான். அவள் இன்னமும் அதே இடத்தில அமர்ந்து ஒப்பாரி வைத்து கொண்டிருந்தாள்.

மனம் சங்கடப்பட்டது.

'படித்தவர்களிடமிருக்கும் நாகரிகம் பாமர மக்களிடம் கிடையாதென்பது உண்மைதான். இல்லாவிட்டால் ஒரு ஐந்தறிவு ஜீவனுக்காக ஒருத்தி தன்னிலை மறந்து இப்படி அழுவாளா. நாசூக்காக அன்பை தெரிவிக்கும் இந்த கணினி யுகத்தில் சூழ்நிலை மறந்து நாலு பேர் மத்தியில் கண்ணீரால் அன்பை கரையவிட அவர்களால் மட்டுமே முடியும்.'

குமார் யோசித்தபடியே வீட்டுக்கு வந்தான். 

" என்னங்க இது, வெறுங்கையோட வந்திருக்கீங்க. காய் வாங்கலையா...?" என்ற மாலா சோர்வுற்றிருந்த அவன் முகத்தைப் பார்த்து புருவம் சுருக்கினாள்.

" ஏன் என்னவோ போலிருக்கீங்க?"

நடந்தை சொன்னான். 

" ச்சோ...ச்சோ...கேட்கறதுக்கே கஷ்டமா இருக்கு..." என்றவளுடைய பார்வை கடிகாரத்தில் பதிந்தது. 

" மணி பத்தாயிடுச்சா...அறுசுவை நேரத்துல இன்னிக்கு மொச்சை சப்ஜி செஞ்சு காட்டப்போறாங்க..." என்றபடி வேகமாக எழுந்து போய் டிவியை போட்டவள் அப்படியே அதில் மூழ்கி போனாள்.

குமாருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் சொன்ன விஷயத்திலிருந்த உருக்கம் அவள் மனதை பாதிக்கவில்லையோ என்று தோன்றியது. 

எல்லா மனிதர்களுமே இப்படித்தானே இருக்கிறார்கள். ஆட்டின் பரிதாப சாவைக்கண்டு எல்லோரும் அதிர்ந்தது வாஸ்தவம்தான். ஆனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அந்த அதிர்ச்சி நீடிக்கவில்லை.அவரவர் தத்தம் வேலையை எண்ணி நகர ஆரம்பித்தனர். சிதறிய காய்களை பொறுக்கிய அந்த பெண்மணியும் வேக, வேகமாக நடையைக் கட்டினாள். 

" அதுக்காக யாரை குறை சொல்லமுடியும்? அவங்கவங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை. இரக்கப்பட்டுகிட்டே நின்னா ஆடு உயிரோட வந்துடுமா?" 

மாலா நறுக்கென்று கேட்டாள். குமாரால் பதில் சொல்ல முடியவில்லை.

அவன் வெகுநேரம்வரை அந்தப் பெண்ணைப் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தான்.

'ஆட்டின் மேல் எவ்வளவு பிரியம் வைத்திருந்தால் அப்படி கதறுவாள்.' 

ஆச்சர்யமாக இருந்தது. இந்த காலத்திலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்கிற நினைப்பு மனதுக்கு சற்று ஆறுதலை தர, பெருமூச்சு விட்டவனை மாலா முறைத்து பார்த்தபடி நின்றிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.