(Reading time: 10 - 20 minutes)

“இந்த ட்ரஸ் ஒகேவா இருக்கா டின்னருக்கு” அவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்.

“ஹஹஹாஹ்” உல்லாசமாக சிரித்தான் அவன்.

“நான் என்னவோ ஏதோன்னு நினச்சுட்டேன். என் அர்ஷுமா அழகு தேவதை. இந்த சந்தேகம் எல்லாம் வரலாமா” அவளை மயக்கத்தோடு பார்க்க அவளோ அவனை கிள்ளி வைத்தாள்.

“இது ஹாஸ்பிடல். அதுவும் நீங்க வொர்க் செய்யற இடம். நாம லிப்ட்ல இருக்கோம்.கொஞ்சம் நெனப்பு இருக்கட்டும்” அவள் சிரித்துக் கொண்டே சொல்லவும் அவனும் அவளோடு இணைந்து சிரித்தான்.

ந்நேரமும் பரபராப்பாக காணப்படும் நியுயார்க் நகரம் அன்று புதுப்பொலிவோடு இருப்பது போல வர்ஷினிக்குத் தெரிந்தது.

அவ்வளவு போக்குவரத்து நெரிசலிலும் மிக லாவகமாக காரை ஓட்டினான் கணேஷ் ராம்.

“நீங்க இங்க எவ்வளவு நாளா இருக்கீங்க ராம்”

“இங்கேன்னா யு எஸ்ஸிலா நியுயார்க்கிலா”

“ரெண்டும் தான்”

“யுஜி முடிச்சிட்டே இங்க வந்துட்டேன். ஓஹியோ, மினிசோட்டா, காலிபோர்னியா, நியூயார்க்ன்னு பல இடங்கள்ல இருந்திருக்கேன். ஆனா நியூயார்க் இஸ் க்ளோஸ் டு மி” அவன் மனம் தானாக அந்த நாளின் நினைவுகளுக்கு சென்றது.

அவனது படிப்பு அவனது குரு ஹர்ஷவர்தன், அவனது செர்ரி ஹரிணி, பிரியமான தோழி பூரி மசாலா எனும் பூர்வி எல்லோரைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தான்.

“உன்னை பத்தி சொல்லுடா அர்ஷுமா. நான் உன்னை பத்தி எதையுமே தெரிஞ்சுக்கல” அவன் கேட்ட போது அவனது போன் மீண்டும் ஒலித்தது.

அவனது ட்ராவல் ஏஜனட் அவனது பயண விவரங்களை சொல்ல பேசிக் கொண்டே வந்தான்.

அதே நேரம் அவர்கள் சென்ட்ரல் பார்க் அருகில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

ஹாலில் ஏற்கனவே நிறைய பேர் இருக்க கணேஷ் ராம் வர்ஷினியோடு நுழைந்ததும் பலரின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பியது.

கணேஷ் ராம் ஒரு பெண்ணோடு வருவதை சற்று ஆச்சரியமாக நோக்கின சில விழிகள்.

கணேஷ் அங்கிருந்தவர்களோடு கைகுலுக்கி வர்ஷினியை பெயர் மட்டும் சொல்லி அறிமுகம் செய்து வைத்தான்.

பெரும்பாலும் மருத்துவர்கள் ஆதலால் அதன் தொடர்பான பேச்சுக்கள் தான் அவர்கள் உரையாடல்களில் இடம் பெற்றது.

வர்ஷினியை யார் எவர் என்று அங்கு யாரும் தூண்டித் துருவிக் கேட்கவில்லை.

“அர்ஷுமா, என்னோட பிரசன்டேஷன் ஸ்டார்ட் செய்யணும். நான் போறேன். நீ இங்கேயே உட்கார்ந்திரு. கொஞ்சம் போர் அடிக்கும். சாரிடா. ஐ வான்ட் டு ஸ்பென்ட் சம் டைம் வித் யூ. மூணு மாசம் கழிச்சு தானே உன்னைப் பார்க்க முடியும். பிரசன்டேஷன் முடிஞ்சதும் வேற எங்கேயாவது டின்னர் போகலாம். ஜஸ்ட் போத் ஆப் அஸ் சரியா” அவன் அவளிடம் சொல்ல அவளோ அவனது கையைப் பற்றினாள்.

“ராம், நீங்க என்னை பத்தி கவலை படாதீங்க. உங்க கூட இங்க இருப்பது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா. ஐ ஆம் சோ ப்ரௌட் அபௌட் யூ” அவள் முகம் நிறைய மகிழ்ச்சி தெரிய அதைக் கண்டவன் நிறைவாகப் புன்னகைத்தான்.

அந்த ஈவன்ட் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கணேஷ் ராம் பற்றிய சிறு அறிமுகம் தந்தார். அதைக் கேட்க கேட்க மிகுந்த பெருமையாக இருந்தது வர்ஷினிக்கு.

பின் கணேஷ் முதலில் அவனது பயணம் பற்றி எடுத்துரைத்தான். அங்கிருந்த மருத்துவர்கள் எல்லோரும் ஹர்ஷவர்தன் ஹரிணியை அறிந்திருந்தனர் ஆகையால் அவர்கள் தற்போது மேற்கொண்டு வரும் பணியில் சிறு காலம் தன்னை இணைத்துக் கொள்வதை கணேஷ் பெருமையாக சொல்லவும் அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்.

அடுத்து அவன் தனது சொற்பொழிவை தொடங்கினான்.

வர்ஷினி மனம் முழுக்க ராம் ராம் ராம் தான். அவன் பாதி பேசி முடித்திருக்க அவன் என்ன பேசினான் என்றே அவள் கவனித்தாள் இல்லை.

எல்லோரும் மீண்டும் கைதட்டவும் தான் சுற்றுப்புறம் உணர்த்தாள்.

பின்னர் சில மருத்துவர்கள் அவனிடம் கேள்விகள் கேட்க அதற்குப் பதிலளித்தான்.

அதில் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலை கேட்ட வர்ஷினி தலையில் மின்னலாமல் முழங்காமல் பேரிடி ஒன்று இறங்கியது.

“இருதய நோய் பரம்பரையாக தொடர்வது உண்டு. தாய் தந்தையருக்கு இருந்தால் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்பு உண்டு” என்று அவன் சொன்ன அந்த வரி மட்டும் தான் தெளிவாக அவள் செவிகளை அடைந்தது. அவன் மேற்கொண்டு பேசிய எதுவும் அவளுக்கு கேட்கவில்லை.

அவள் முழுவைதயும் கவனமாக கேட்டிருந்தால் பின்னாளில் அவளும் வருந்தி அவனையும் துயரத்தில் ஆழ்த்திய நிலை ஏற்பட்டிருக்காதோ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.