(Reading time: 12 - 24 minutes)

19. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்! ஜெய்-சரயூ நிச்சயம் உங்களில் சில பேருக்கு, இது இவ்வளவு சீக்கிரம் தேவையானு தோனியிருக்கும்.  கதைக்கு தேவைப்படவும் தான் அதை இங்க சேர்த்திருக்கேன்.  இது கதை தானேனு எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, ப்ளீஸ்! 

ழக்கமாக நண்பர்கள் சபை கூடும் அந்த மனோரஞ்சித மரத்தடியில் அமர்ந்திருந்தான் ஜெய்.  கல்லூரி வாழ்க்கையின் நான்கு ஆண்டுகளில் அவன் அறிந்திராத தனிமை அது.  ஒரு வேளை இதுதான் வாழ்க்கையின் நிதர்சனமோ? படிப்பு முடிந்ததும் அவரவர் வேலை, குடும்பம், வாழ்க்கை என பரபரப்பான இயத்திர தன்மையோடு பொறுந்திகொள்வதும், அதற்கிடையில் நண்பர்களுக்கான நேரம் என்பதே இல்லாமல் போய் விடுகிறதோ?

கல்லூரியின் முதல் நாளன்று இருந்த மகிழ்ச்சி, உற்சாகம், நம்பிக்கை என அனைத்துமே இன்று அவனிடமிருந்து விடை பெற்றிருக்க..... அழிக்க முடியா பல பொன்னான நினைவுகளும், அவை கொடுத்த அனுபவமும், பிரிவின் வலியும், ஏக்கமும் அங்கு குடிபெயர்ந்திருந்தன.

சரயூவின் மனதை வென்று அவளின் தித்திக்கும் காதலில் திளைத்திட எண்ணியவனுக்கு, அவளிடம் தன்னுடைய காதலை கூட சொல்லாமல் போவது பெரும் துன்பத்தை தந்தது.  அவன் போட்டிருந்த காதல் திட்டங்களில் ஒன்றை கூட நிறைவேற்ற முடியவில்லையே! 

இப்படியே உட்கார்ந்து வயலின் வாசிச்சுட்டே மீதி காலத்தையும் ஓட்ட வேண்டியதுதா.  எத்தனை முறை உனக்கு சொன்னே ஜெய்.... கேட்டியா? சரூட்ட சொல்லிடு.... இதுக்கு மேலயும் காதலை சொல்லாம விடுறது தப்பா முடிஞ்சிருமோனு எனக்கு தோனுதுனு சொன்னனே... ம்ஹீம்... என்ன பிரயோஜனம்? நீ என்னை ஒரு பொருட்டாவே மதிக்கலை.  சரி போனா போகுதுனு, விடவா முடியுது! அவளையே நினைச்சுகிட்டு கொடுமையா இருக்கு.  இதை கூட புரிஞ்சுக்காம, அவள் உன்னை பார்த்து வெட்க படனும்னு காத்திட்டிருந்தா....

மனதின் புலம்பலை பொறுமையாக கேட்டு கொண்டிருந்தவனுக்குள் முதல் முறையாக சிறு நடுக்கம்.  மலை போன்ற அவனுடைய நம்பிக்கையில் விழுந்த விரிசல் கொடுத்த நடுக்கம்.  தன்னவளின் மனதை வெல்ல முடியாதோ என்ற சந்தேகம் அவனை புரட்டி போட்டது.

“சஞ்சய்....மச்சா.... சஞ்சய்....” ரூபின் அவனை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தான்.

“என்னாச்சு மச்சா உனக்கு? உடம்புக்கு ஏதாதுமா? நான் கூப்பிட்டது உனக்கு கேட்கவே இல்லையா?”

தன் காதலை நினைத்து குழம்பியிருந்தவனை, இந்த கேள்விகள் எட்ட, சற்று தடுமாறினான்.

பின்பு சமாளிப்பாக, “இல்லை மச்சா! சும்மாதா....”

புத்தகத்தை புரட்டிய ரூபினின், “சும்மாவா?” என்ற கேள்வியே ‘நீ சொல்றது நம்புற மாதிரி இல்லையே’ என்பதாக ஒலித்தது.

“என்னவோ நேத்து தான் காலேஜுக்கு வந்த மாதிரி இருக்கு... அதுக்குள்ள நாலு வருஷம் ஓடி போச்சு...”

ஜெய்யிடம் எழுந்த பெருமூச்சு, பரபரப்பில் இவ்வளவு நேரமாக அவன் மறந்திருந்த அவர்களின் பிரிவை நினைவு படுத்தியது.  புத்தகத்தை மூடிவிட்டு அவனிடமாக திரும்பி அமர்ந்தான். 

“நாலு வருஷம் இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருக்க வேணாம்... ஹும், என்ன செய்றது?” ஏக்கத்தில் தோய்ந்திருந்தன வார்த்தைகள்.

“கவலை பட ஒன்னுமே இல்லை மச்சா! நாம என்ன ஆதி மனுஷங்க காலத்துலயா இருக்கோம்? நமக்குதா நினைச்ச நேரத்துல பேசிக்க ஃபோன் இருக்கு, வீடியோ கால் செய்தா ஒருத்தர ஒருத்தர் பார்க்க கூட முடியும்.  அப்றம் என்ன மச்சா? ஃப்ரீயா விடு” வரவழைத்த உற்சாகக் குரலில், தன்னையும் சமாதானம் செய்து கொண்டு நண்பனையும் தேற்ற முயன்றான் ரூபின்.

எங்கோ பார்வையை பதித்திருந்தவன், இவனிடமாக திரும்பி, ஆம் என்பதாக தலையை மட்டும் அசைத்தான்.  உதட்டுக்கு வலிக்குமோ என்பதை போல் ஒரு சிறு புன்னகை.

நொடிக்கும் குறைவான ஜெய்யின் நகையை பார்த்தவனுக்கு, அவனை நன்றாக புரிந்தது.  அதுவே தன்னுடைய மனதில் மறைத்து வைத்திருந்த வலிகளை கிளறிவிட்டது.

“நீங்களாவது இங்கயே இருப்பீங்க, நினைச்சா மீட் செய்துக்கலாம்.  என்னால அதுவும் முடியாதே”

அவனுடைய கண்களின் வெறுமையும், வருத்தமும் ஏக்கமும் போட்டியிட்ட அவன் வார்த்தைகளும் ஜெய்யால் பொறுக்க முடியவில்லை.  இயல்பிலேயே ரூபின் மிகவும் கலகலப்பானவன்.  கண்களில் துள்ளும் குறும்பும், அதற்கு சற்றும் குறையாத பேச்சும் தான் அவனுடைய அடையாளம்.  அப்படியானவனிடம் இந்த திடீர் மாற்றம்... அதுவும் தங்களுடைய பிரிவைப் பற்றி பேசியதும் எழுந்த மாற்றம் ஜெய்யின் மனதை பிசைந்தது.   

“சௌம்யாவுக்காகவும் உங்களோட எதிர்காலத்துக்காகவும் தானே அமெரிக்கா போற மச்சா! உங்க விஷயம் சௌம்யா விட்ல தெரிஞ்ச போது என்ன நடக்குமோன்னு எவ்வளவு பயந்தீங்க.  இப்ப எல்லாம் சரியாகி, ரெண்டு பேரு வீட்லயும் உங்க காதாலை ஏத்துக்கிட்டாங்க.  நீங்க கல்யாணத்துக்கு பிறகு அமெரிக்கா போயி செட்டில் ஆகற வரைக்கும் அவங்க யோசிச்சு வச்சிருக்காங்க... இப்ப என்ன? கொஞ்ச நாள் நீ தனியா அங்க இருக்க வேண்டியிருக்கும்... அதும் நீ கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள ஓடிரும் மச்சா!” ரூபினை தேற்றுவதற்காக அவனை சுற்றியிருக்கும் சந்தோஷங்களை எடுத்துக் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.