(Reading time: 12 - 24 minutes)

“சீனியர் இனி அடிக்கும்போது கொஞ்சம் கவனமா இருக்கோம்... மாட்டாத மாதிரி அடிக்கிறோம் சீனியர்... அதுக்குன்னு எல்லா இடத்துலயும் வக்கீல்ன்னா வாய் மட்டும்தான் பேசணும்... கை பேசக்கூடாதுன்னு சொல்லாதீங்க... சில இடங்கள்ல கை பேசினா தப்பில்லை... இப்போ இந்த வீடியோவை என்ன பண்ண போலீஸ் ஸ்டேஷன்ல கொடுக்கவா...”

“வேண்டாம் சாரங்கா... அந்த இன்ஸ்பெக்டர் நாரயணனோட ஆளு.... நாம கொடுக்கற எந்த எவிடென்ஸா இருந்தாலும் அது உருப்படியா கோர்ட் வந்து சேராது.... இதை நாம கேஸ் நடக்கும்போது யூஸ் பண்ணிக்கலாம்... கேஸ் ஹியரிங் என்னைக்கு வருது.....”

“நாராயணன் கேஸ் வர்ற புதன் கிழமை காலைல, நரேஷ் கேஸ் அன்னைக்கே மதியம்.... அந்த நரேஷ் போன வாரம் அந்த ச.மு.க. கட்சி ஆளைப் போய் பார்த்து இருக்கான் போல... என்ன விஷயமா சீனியர்....”

“இப்போ அவனுக்கு கொஞ்சம் மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பிச்சு இருக்கு... அதுதான் ஏதானும் ஒரு கட்சில சேரலாம்ன்னு முடிவு பண்ணிட்டான் போல... அந்தக் கட்சி மட்டும் இல்லை.... ரெண்டு வாரத்துக்கு முந்தி இன்னும் ரெண்டு வேற கட்சி ஆளுங்களையும் பார்த்திருக்கான்... இடைத்தேர்தல் வேற வருது இல்லை... எந்த கட்சி சின்னத்துலயானும் நிக்கலாம்ன்னு நினைச்சிருப்பான்...”

“சீனியர் நான் போய் அந்த ராணியைப் பார்த்துட்டு அடுத்த புதன்கிழமைக்கு கொஞ்சம் தயார்படுத்தறேன்....”

“செய் பாரதி.... ஆனா அந்த லேடியை மட்டும் நம்பி இதுல இறங்க முடியாது... நமக்கு அந்த நரேஷை உள்ளத் தள்ள மட்டும்தான் இந்தக் கேஸ்... அவனோட மத்த இல்லீகல் டீலிங்க்ஸ் டீடைல்ஸ் அதுக்குள்ளே கலெக்ட் பண்ணிடணும்.... எனக்கு என்னவோ அந்த நரேஷ் பெரிய லெவெல்ல ஏதோ தப்பு பண்றா மாதிரியே தோணுது.... சாரங்கன் காட்டின டாகுமென்ட்ஸ் டீடைல்ஸ் தவிர வேற சிலதும் இருக்கும்னு தோணுது.....”

“நான் வேண்ணா இன்னொரு தடவை அவனோட இடத்துக்குப் போய் பார்க்கவா சீனியர்...”

“இல்லை சாரங்கா இப்போதைக்கு அவனை கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம்.. அவனுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது... அந்த ராணிதான் அவன்மேல இருக்கற கோவத்துல இதை எல்லாம் பன்றான்னுதான் நினைக்கணும்.... அதுதான் நமக்கு வசதி.... அதே மாதிரி இன்னும் கொஞ்ச நாளைக்கு அந்த ராணி விஷயம் வெளிய கசியக்கூடாது... அப்பறம் மீடியா, அது இதுன்னு அவன் வீட்டுக்கிட்ட கூட்டம் சேர ஆரம்பிச்சுடும்... நாம அவன் வீட்டுக்குள்ள நுழையுறது கஷ்டம்....”

“நீங்க சொல்றது கரெக்ட் சீனியர்.... நேத்து மதி சார்க்கு ரெகார்ட் பண்ணினதுல ஒரு சின்ன பகுதிதான் அனுப்பினேன்.... நான் அவர் வீட்டுக்குப் போய் முழு வீடியோவையும் கொடுத்துட்டு அப்படியே அந்த போலீஸ்ஸ்டேஷன்ல மயூரி வீட்டுக்கு பாதுக்காப்பு வேணும்ன்னு ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துடறேன்... நீ என்ன பண்ணப் போற சாரங்கா...”

“நீ மதி சார் வீட்டுக்குப் போயிட்டு ராணியைப் பார்க்க போ பாரதி... நான் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு அப்படியே அந்த கவுன்சிலர் ஏரியால போய் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வரேன்....”

“சாரங்கா, அங்கப்போய் எந்த வம்பையும் இழுத்துட்டு வராத....”

“கண்டிப்பா மாட்டேன் சீனியர்.... சும்மா அவன் ஏரியா எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வந்துருவேன்...”

பாரதியும், சாரங்கனும் சந்திரனிடம் கூறிக்கொண்டு கிளம்பினார்கள்.

அவர்கள் வெளியில் வர பாரதியின் கைப்பேசி அழைத்தது....

“சப்பாணி வாத்தியார் கால் பண்ணுறாருடா...”

“ஓகே பக்கி, நீ உன் ஆளுக்கூட கடலையை போடு... நான் கிளம்பறேன்....”

“ஹலோ ராஜா எப்படி இருக்கீங்க... என்னது இது.... காலேஜ் கட் அடிச்சுட்டீங்களா..... இந்த நேரத்துல போன் பண்றீங்க....”

“பாரதி ஒரு ஒரு ஸ்டேட்மெண்ட்டா கேளு.... அதே மாதிரி நடுவுல பேசும்போது மூச்சு விடு... எனக்கு இன்னைக்கு லாஸ்ட் 2 பீரியட் இல்லை.... so free....சரி அதுதான் மேடம் என்ன பண்றீங்கன்னு கேக்கலாம்ன்னு போன் பண்ணினேன்... பிஸியா இருக்கியா.... பேசலாமா...”

“உங்கக்கூட பேசறதுன்னா எப்பவுமே நான் ப்ரீதான் ராஜா... சொல்லுங்க....”

“என்ன சொல்லுங்க... லவ் டிக்ளர் பண்ணி எத்தனை நாள் ஆச்சு..... அதுக்கப்பறம் ஆளையே பார்க்க முடியலை... போன் பண்ணினாலும் அஞ்சு நிமிஷம் பேசிட்டு வைக்கற..... அம்மா கேஸ் நடத்துன ராம்ஜெத்மலானிக்கூட இத்தனை பிஸியா இருக்க மாட்டாரு....சும்மா ஒப்புக்கு உன் சீனியர்கூட போற நீ இத்தனை அலம்பல் பண்ற....”

“ஹலோ அவரை சுத்தி அவரோட ஜூனியர்ஸ் இருப்பாங்க.... மெயின் வேலையெல்லாம் அவங்க முடிச்சுடுவாங்க... இவரு கடைசியா வந்து ‘ஆகவே மை லார்ட்’ அப்படின்னு ஆரம்பிச்சா போதும்... ஆனா நான் அப்படியா... அடி முதல் நுனி வரை வேலை பார்க்கணும்.... எம்புட்டு வேலை...”

“சரிம்மா சரி... நீங்க ஓவரா வேலை செய்து களைச்சு போய் இருக்கீங்க... அப்படியே ஐஸ்கிரீம் பார்லர் வந்துடு... மாமா உன்னை கூல் பண்ணிடறேன்....”

“மாமாவா.... அது யாரு எனக்குத் தெரியாம எனக்கு ஒரு மாமா....”

“நானேதான்... வேற யாரு... சரி கேட்ட கேள்விக்கு வாய் பேசாம பதில் சொல்லு.... ஐஸ்கிரீம் பார்லர் வர்றியா....” 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.