(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 04 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

லைபேசியில் மிளிர்ந்த சுடரொளியின் பெயரை பார்த்ததும் இதுவரை தவிப்போடு இருந்த மகிக்கு இப்போது சிறு கோபம் எட்டிப்பார்த்தது..  அதுமட்டுமில்லாமல் எதிரே அருள் வேறு நின்றிருக்க, இப்போது அந்த அழைப்பை ஏற்பது சரியல்ல என்பதை உணர்ந்தவன், அந்த அழைப்பை துண்டித்தான்.

“யாரு போன்ல??”

“தேவையில்லாத கால் தான்.. நீ சொல்லு..”

“மகி.. நம்ம வீட்ல திடிர்னு இப்படி ஒரு முடிவெடுத்துட்டாங்க, அப்போதிலிருந்து உன்கிட்ட பேசனும்னு நான் வெய்ட் பண்றேன்..” அவள் பேசிக் கொண்டிருந்த போதே, திரும்ப சுடரிடம் இருந்து அழைப்பு வந்தது.. அவன் அதை திரும்ப அணைத்தான்.

“என்னை பொறுத்தவரைக்கும் வீட்டு பெரியவங்க எடுக்குற முடிவுக்கு நான் எப்பவும் சரின்னு தான் சொல்வேன்.. இருந்தாலும் இப்போ எந்த சூழ்நிலையில இந்த நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செஞ்சாங்கன்னு தெரியுமில்ல.. இப்பவும் எனக்கு இதுல சம்மதம் தான்.. ஆனா உனக்கு இதுல முழு சம்மதமா..?? இல்ல வீட்ல முடிவெடுத்துட்டாங்க, வேண்டாம்னு சொன்னா, எல்லாரோட மனசும் கஷ்டப்படும், குறிப்பா நான் வருத்தப்படுவேன்னு சம்மதம் சொன்னியா? இதுக்கு மட்டும் எனக்கு பதில் தெரியனும்” அவனை பார்த்து அவள் சொல்லிக் கொண்டிருக்க, திரும்ப அவனது அலைபேசி ஒலியெழுப்பியது.

கிழ் திரும்ப திரும்ப அவளது அழைப்பை ஏற்காமல் துண்டிப்பதில் சுடரொளிக்கு மனதுக்குள் வலித்தது.. அவனின் ஒதுக்கத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. நரக வேதனையாக இருந்தது.. இன்னும் ஒருமுறை முயற்சித்து பார்க்க வேண்டும், அதையும் மகிழ் ஏற்கவில்லையென்றால், நேராகவே வீட்டிற்குள் சென்று அவனிடம் பேசிவிட வேண்டியது தான், என்று மனதுக்குள் நினைத்தப்படி திரும்ப அவனது அலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

திரும்ப சுடரொளி தான் அழைக்கிறாள் என்று தெரிந்து மகி அதை அணைக்க போக, திடிரென அவன் கையிலிருந்த அலைபேசியை அருள் பிடுங்கினாள். “யார் திரும்ப திரும்ப உனக்கு போன் பண்றது?” என்று கேட்டப்படியே, அவள் அலைபேசியை பார்க்க, அதில் தெரிந்த சுடரொளியின் பெயரை பார்த்தவள், “ஆமாம் எதுக்காக சுடர் உனக்கு போன் பண்றா?? அதை ஏன் நீ கட் பண்ற?? என் முன்னாடியே அவக்கிட்ட பேசு..” என்று சுடரின் அழைப்பை ஏற்று அதை ஸ்பீக்கரில் போட்டாள்.

அலைபேசியின் அழைப்பை மகிழ் ஏற்றதும் சுடர் மகிழ்ச்சியடைந்தாள்.. “ஹலோ மகிழ்.. மகிழ்..மகிழ்” என்றதற்கு மேல் அவளுக்கு பேச்சு வரவில்லை..

மகியோ, அவள் குரல் கேட்டும் அமைதியாக இருந்தான்.. அருள்மொழிக்கோ சுடரின் குரலை கேட்டதும், மறக்க நினைத்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.. அவளின் குரலை கூட கேட்க பிடிக்கவில்லை, இருந்தும் அவள் இப்போது எதற்காக மகிக்கு போன் செய்தாள், என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டி, சுடர் மேல் எழும்பிய கோபத்தை அடக்கிக் கொண்டாள்.

அலைபேசி அழைப்பு ஏற்கப்பட்டும், அவள் பேசிய பின்னும் கூட எதிர்முனையிலிருந்து பேச்சு வராததால் குழம்பிய சுடர், “ஹலோ மகிழ் லைன்ல தான இருக்க” என்றுக் கேட்டாள்.

அப்போதும் மகி அமைதியாக இருக்க, பேசு என்பது போல் அருள் கண்களை அசைக்க, “எதுக்க போன் பண்ண?” என்று குரலில் கடினத்தை காட்டி பேசினான்.

அவன் குரலில் இருந்த கடினம் எதிர்முனையில் இருந்த சுடருக்கும் புரிந்தது.. “மகிழ் எனக்கு உடனே உன்னை பார்க்கனும்..”

“எதுக்கு? இனி என்கிட்ட பேச வேண்டியது என்ன இருக்கு? அதான் இனி என் முகத்துல கூட முழிக்காதன்னு சொல்லிட்டு வந்தேன்ல.. அப்புறம் எதுக்கு போன் பண்ணி தொந்தரவு செய்ற?”

அவனின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் ஈட்டி போல் அவளை குத்தியது, இருந்தும் அவள் செய்ததையெல்லாம் நினைத்து பார்த்து, அதற்கான எதிரொளி தான் மகிழ் பேசுவது என்பதை புரிந்துக் கொண்டாள் அவள், “உன்னோட கோபம் எனக்கு புரியுது மகிழ்.. நான் செஞ்சதெல்லாம் தப்பு தான்.. இருந்தாலும் உன்னை இப்போ பார்க்கனும் மகிழ்.. ப்ளீஸ் மாட்டேன்னு மட்டும் சொல்லிடாத, நான் இப்போ உங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கேன், கொஞ்சம் வெளிய வா மகிழ்” என்று கெஞ்சினாள்.

அவள் பேச்சை கேட்டு மகி, அருள் இருவரும் ஒரு நொடி அதிர்ந்தார்கள்.. இன்னும் என்ன பிரச்சனைகளை கொண்டு வர அவள் இங்கு வந்திருக்கிறாள், என்று அருள் நினைக்க, அதை தன் வாய்மொழியாலேயே மகி கேட்டான்.

“ஹே எதுக்கு இப்போ இங்க வந்திருக்க, பண்ண பிரச்சனைகளெல்லாம் போதாதா? இன்னும் என்ன செய்ய இங்க வந்திருக்க? இன்னைக்கு இங்க என்ன நடக்கப் போகுதுன்னு தெரியுமில்ல? அது தெரிஞ்சும் நீ வந்திருக்கன்னா, இங்கப்பாரு நீ இதுக்கு மேலயும் ஏதாவது செய்ய நினைச்ச என்னை மனுஷனா பார்க்க மாட்ட சொல்லிட்டேன்” என்று வார்த்தைகளால் அவளை காயப்படுத்தினான்.

இதற்கு மேலும் வார்த்தைகளில் அவன் காட்டும் கடுமையை கேட்க அவள் விரும்பவில்லை, இருந்தும் அவள் பேச வேண்டியதை பேசிட நினைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.