(Reading time: 12 - 23 minutes)

கிழ்.. இங்க நான் எந்த பிரச்சனையும் செய்ய வரல.. இன்னைக்கு உனக்கும் அருளுக்கும் எங்கேஜ்மென்ட்னு எனக்கு தெரியும்.. அதுல நான் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன்.. நீ என்னை கீழ வந்து கூட பார்க்க வேண்டாம்.. நான் கேக்கற ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்லு.. நீ என்னை காதலிக்கிறியா? உன்னோட மனசுல நான் இருக்கேனா? அதுக்கு மட்டும் பதில் சொல்லு, உன்னோட மனசுல நான் இருக்கேன், நீ என்னை காதலிக்கிறன்னு சொன்னா மட்டும் போதும் மகிழ்… அதுக்கப்புறம் உன்னை தொந்தரவே செய்ய மாட்டேன்.. நீயும் அருளும் கல்யாணம் பண்ணிக்க்கோங்க.. நான் எந்தவிதத்திலேயும் அந்த கல்யாணத்துல பிரச்சனை பண்ண மாட்டேன்.. உன்னோட மனசுல எனக்குன்னு ஒரு இடம் இருக்கு அப்படிங்கிற சந்தோஷத்தோட நான் போ.. என்று சொல்ல வந்தவள், இருந்துடுவேன் என்று உடனே மாற்றி கூறினாள்.

 அவள் பேசுவதை மகிழ் மட்டும் கேட்கிறான் என்று நினைத்திருந்தாள்.. கூடவே அருள் நின்றிருப்பது அவளுக்கு தெரியாதே!! மகிழ்வேந்தனை நேருக்கு நேராக பார்த்து தன் கேள்வியை அவனிடம் கேட்க நினைத்தாள். ஆனால் அவன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, அதனால் அவன் குரலிலாவது இவளை அவன் காதலிக்கிறான் என்பதை கேட்டுவிடும் ஆசை அதிகரித்தது.. ஆனால் எதிர்முனையோ அமைதியாக இருந்தது.

சுடரொளி போலவே அருள்மொழியும் மகிழ்வேந்தனின் பதிலை கேட்க ஆர்வமாக இருந்தாள்.. ஏனெனில் அவளது கேள்விக்கும் அதில் தானே பதில் இருக்கிறது.. மகி சுடருக்கு கூறும் பதிலை பொறுத்து தான், அவன் மனதை பற்றி அவளும் அறிய முடியும்.. எனவே மகியை தவிப்போடு பார்த்தப்படி நின்றிருந்தாள்.

சுடரொளியோ அருள்மொழியை விட ஆயிரம் மடங்கு தவிப்போடு அவன் பதிலை கேட்க எதிர்முனையில் காத்திருந்தாள். அவன் மட்டும் அவளை நேசிக்கிறான் என்று சொன்னால், அதுவே காலம் முழுதும் போதும்.. மகியை நினைத்தப்படி அனைவரையும் விட்டு ஒதுங்கி, ஏற்கனவே திட்டமிருந்தப்படி லண்டனுக்கே சென்று விட வேண்டும்.. அப்படி அவன் பதில் இவளுக்கு சாதகமாக இல்லையென்றால், இந்த உலகத்தை விட்டே போய்விட வேண்டும்.. ஏற்கனவே தந்தை அன்பை இழந்துவிட்டாள்.. இப்போது மகியையும் இழந்து அதன்பிறகு அவள் உயிரோடு வாழ்ந்து தான் யாருக்கு என்ன பயன்? மகிழ் வேண்டுமென்று என்னென்னவோ செய்ததற்கு, இரண்டில் ஏதாவது ஒரு தண்டனை ஏற்று தான் ஆக வேண்டும்.. அது மரண தண்டனையாய் இல்லாமல், காலம் முழுதும் மகிழை நினைத்து வாழும் ஆயுள் தண்டனையாக இருந்தால், மகிழ்ச்சியாக இருப்பாள்.

“சொல்லு மகிழ்.. உன்னோட பதில் எதுவா இருந்தாலும் ஏத்துக்குவேன்..”

“இன்னைக்கு எனக்கும் அருளுக்கும் நிச்சயதார்த்தம்.. உன்னை காதலிக்கிறதா இருந்தா, அருளை கல்யாணம் செஞ்சுக்க எப்படி சம்மதம் சொல்லியிருப்பேன்.. நான் என்னைக்கும் உன்னை ப்ரண்டா மட்டும் தான் நினைச்சேன்.. அதை தாண்டி நான் யோசிச்சதில்ல.. இதை முன்னாடியே என்கிட்ட கேட்ருக்கலாம்.. ஆனா என் மனசு தெரியாம, நீ பண்ணதெல்லாம் போதும்.. இப்போ நான் அருளை தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்.. அது தான் என்னோட முடிவு..” என்றான் தீர்மானமாக, அடுத்த நொடி அவள் அலைபேசியை அணைத்திருந்தாள்.

மகி சுடரொளியிடம் பேசியிருந்ததே, அருள்மொழியின் கேள்விக்கு பதிலாக, இனி அவனிடம் அவளுக்கு பேச ஒன்றும் இருக்கவில்லை.. “நீயும் தெளிவா தான் இருக்க மகி.. இப்போ எனக்கு எந்த குழப்பமுமில்ல, உன்கிட்ட கேட்க வேறொன்றுமில்லை.. சரி பங்ஷன்க்கு ரெடியாகனும், வா போகலாம்” என்றவள், கொஞ்சம் தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்த அறிவு, இலக்கியாவின் அருகில் வந்தாள்.

“மச்சி வா போகலாம்..” என்று அவள் இலக்கியாவை கூப்பிட,

“என்னடி அதுக்குள்ள பேசிட்டியா? இங்க இருந்து பார்த்தா நீங்க பேசிக்கிட்ட மாதிரியே தெரியலையே?” என்று பதிலுக்கு கேட்டாள் அவள்,

“அது பேசறதுக்கு முன்னாடியே என்னோட குழப்பம் தீர்ந்துப் போச்சு.. பங்ஷன் முடிஞ்சதும் டீடெய்லா சொல்றேன்.. இப்போ அம்மா வர்றதுகுள்ள நாம ரூம்க்கு போகனும் வா” என்று அவளை அழைத்துக் கொண்டு போனாள்.

மகியின் முகமோ யோசனையில் இருந்தது.. அதை பார்த்த அறிவோ, “என்னடா.. ஏன் ஒரு மாதிரி இருக்க? ஆமாம் யார் கூடவோ போன்ல பேசினீங்களே? யார் அது? சுடரா? மகி என்னடா சொன்னா அவ? அருள் சந்தோஷமா போறா? ஆனா நீ ஒரு மாதிரி இருக்க? என்னடா?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,

“ம்ம் ஒன்னுமில்லடா” என்றவன், அங்கிருந்து சென்றுவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.