(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 06 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

புத்தம் புது வருடம்… மனதினில் நுழைந்த புத்தம் புது காதல்… எத்தனை பேருக்கு வாய்த்திடும்?... அதுவும் தானாக அமைந்திட்ட அந்த நொடிப்பொழுது?...

கௌஷிக்கின் விழிகள் விரிந்து அவளை தன் விழிகளில் நிறைத்துக்கொண்ட வேளை, சாருவின் விழிகளோ அவனை விட்டு விலக மறுத்த்து… ஆடாது அசையாது அவனையே விழி விரிய பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள்…

“ஹேப்பி நியூ இயர்…” என இருவரும் ஒருசேர கூற, இருவரின் முகத்திலும் ஒன்றுபோல் புன்னகையும் ஒருவர் அறியாமல் மலர, அதன் பின் வார்த்தைகளைக் கொண்டு நிரப்பிட முடியாத அழகான மௌனமே அக்கணத்தை அலங்கரித்திட, சொற்கள் ஊமையாகி போன விந்தையும் நிகழ்ந்தது இனிதே…

பார்த்துக்கொண்டே இருந்தால், கண்கள் தான் வலிக்காதா?... இக்கேள்வி இருவருக்குமே எழவில்லை போலும்… கதைகள் பல நூறு, கவிதை பல ஆயிரம் பேசினாலும் அக்கண்கள் சற்றும் சோர்வடையவில்லை…

கண்களானது பார்த்துக்கொண்டிருக்க, இதழ்களோ அழுந்த மூடியிருக்க, பின்னே அங்கே ஒருவரில் ஒருவர் தொலைந்தது தான் எப்படி?...

யார் எப்படி போனாலும் சரி… நான் என் வேலையினை செய்தே தீருவேன் என்ற தீவிர பிடிவாதம் கொண்டு, துடிப்புடன் செயலாற்றிக்கொண்டிருந்தது இருவரின் காதல் கொண்ட இதயமும்…

உள்ளுக்குள்ளேயே இருவரும் பேசிக்கொள்ளும் இதய பாஷையினை புரிந்து கொள்ள அவ்விருவர் அன்றி வேறு யாரால் முடிந்திடக்கூடும்!!!...

அக்கம், பக்கம், சுற்றம் எதுவும் இதயத்திற்கு தென்படவில்லை… அது தன் போக்கில் தனது காதலை பரிமாறிக்கொண்டிருந்த வேளை, அதற்கு இடையூறு ஏற்படுத்துவது போல் சாருவின் தோள் மீது விழுந்தது ஒரு கரம்…

பரிபாஷனைகள் நிமிடத்தில் கலைந்து போக, திடுக்கிட்டவளாய் சட்டென அவள் திரும்ப,

புன்னகை முகமெங்கும் மலர, அதற்காகவே காத்திருந்தவன் போல்

“ஹேப்பி நியூ இயர் சாரு….” என சொன்னதோடு நிறுத்தாமல், அவளை தன் தோள் சேர்த்து அணைத்துக்கொண்டான் தீபன்…

கௌஷிக்கின் எண்ணங்கள் சற்றே பின்னோக்கி செல்ல, அன்று தீபனும் சாருவும் விளையாடிய காட்சிகள் நொடிப்பொழுதில் கண் முன்னே அரங்கேற, தீபனின் குரலில் மீண்டும் நனவுலகுக்கு வந்தான் அவன்…

“ஹேய்… சாரு… என்ன நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கேன்… நீ எதுவுமே சொல்லமாட்டிக்குற?...”

தீபன் சாருவின் தோள் பிடித்து உலுக்க, நினைவு வந்தவளாய், பதிலுக்கு தமையனுக்கு வாழ்த்து கூறினாள் அவள் அவன் கரம் பற்றி…

அந்த சமயம், “ஹேப்பி நியூ இயர் அக்கா…” என்றபடி விக்கி வந்து அவளது கரம் பற்றி குலுக்கிட, அவளும் பதிலுக்கு புன்னகைத்தபடி வாழ்த்துக்கூறினாள்…

பின், தீபனும் விக்கியும் அணைத்துக்கொண்டு தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்…

“எங்கடா போன?... உன்னை எவ்வளவு நேரம் தேடினேன் தெரியுமா?... உங்கிட்ட ஒரு முக்கியமான நபரை அறிமுகம் செய்யணும்…”

விக்கி சொல்லிக்கொண்டே கௌஷிக்கின் அருகே வந்து, புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிவிட்டு,

“சார்… இவன் தீபன்… என்னோட பெஸ்ட் ப்ரண்ட்… எனக்குள்ள இருக்குற டைரக்ஷனை வெளியக் கொண்டு வந்ததே இவந்தான்….” என நண்பனை பற்றி கூறிவிட்டு,

தீபனிடம், “தீபா… சார் யாரு தெரியுமா?...” என அவன் ஆரம்பித்திட

“த கிரேட் யங்க் பிசினெஸ்மேன்… இவ்வளவு சின்ன வயசில யாருமே தொட முடியாத உயரம்… இரண்டு வருஷமா தொடர்ந்து பிசினெஸ் டைமில் இடம்பெற்ற ஒரே யங்க் டேலண்ட்டட் பெர்சன்… சரியா?...” என புள்ளிவிவரத்தோடு தீபன் முடித்திட,

கௌஷிக்கின் விழிகளில் தீபனுக்காக பாராட்டு தெரிந்தது…

தீபனின் வார்த்தைகள், வேறு யார் காதுகளில் தெளிவாக விழுந்ததோ இல்லையோ, சாருவின் செவி மடல் வழி இறங்கி இதயம் சென்று விழுந்தது அவனது வார்த்தைகள்…

“உங்களை மீட் பண்ணினதுல ரொம்ப சந்தோஷம் சார்… இன்பாக்ட் சாதிக்கணும்னு நினைக்குற எல்லோருக்குமே நீங்க ஒரு ரோல் மாடல் தான்…” மனதார சொல்லிவிட்டு, புன்னகையுடன், “ஹேப்பி நியூ இயர் சார்…” என தீபன் கை நீட்ட, ஒருகணம் கூட தாமதிக்காது அதனைப் பிடித்து குலுக்கி, வாழ்த்தி புன்னகைத்தான் கௌஷிக்…

“நிஜமாவே உங்களை மீட் பண்ணதுல எனக்கு தான் ரொம்ப சந்தோஷம் நேஷனல் லெவல் சேம்பியன் மிஸ்டர் தீபன்….” கௌஷிக்கின் விழிகள் ஒருமுறை சாருவினைத் தொட்டு செல்ல, அவளும் அக்கணம் அவனது பார்வையினை சந்திக்க தவறிடவில்லை…

“சார்… என்னைப் பத்தி உங்களுக்கு எப்படி?...”

தீபன் கேள்விக்குறியோடு அவனைப் பார்த்திட,

“உங்க வெற்றியைப் பத்தி நிறைய தெரியலைன்னாலும் கொஞ்சம் தெரியும்… டூ வீக்ஸ் பிபோர் கூட அமெரிக்காவில் நடந்த போட்டியோட சாம்பியன்… சரியா?...”

கௌஷிக் மிகச்சரியாக தீபனைப் பற்றி கூறிட, தீபனின் மனதில் கௌஷிக் ஒருபடி உயர்ந்து நின்றான்…

அவன் மேல் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் தீபனுக்கு கூடிட்ட அதே வேளையில், சாருவின் மனதில் கௌஷிக்கின் மேல் இருந்த காதல் கூடியதோடு மட்டுமல்லாது, அவனின் மேல் ஒரு பெரு மதிப்பும் உண்டானது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.