(Reading time: 12 - 24 minutes)

“என்னோட துறை பிரபலமானது கிடையாதே சார்… பின்ன எப்படி நீங்க?...”

தீபன் இன்னும் ஆச்சரியம் மாறாமல் கேட்டிட

“வேர்ல்டு லெவல் சாம்பியன் ஆகப்போறீங்க… உங்களைப் பத்தி தெரியாம இருக்குமா மிஸ்டர் தீபன்?...” என புன்னகைத்தான் கௌஷிக்…

அப்புன்னகை சாருவின் மனதை வருடிச் செல்ல, அவள் இதழும் தானாக விரிந்து மலர்ந்திட்டது…

“நிஜமாவே யூ ஆர் கிரேட் சார்…” தீபன் மனதிலிருந்து கூறிட,

“சுரேஷ் சார்… ஒரு அட் எடுக்கணும்னு சொன்னப்போ, அது உங்க கம்பெனி அட் என்று நான் நினைக்கவே இல்ல சார்… லேட்டா தான் எனக்கே தெரிய வந்துச்சு… இந்த பார்ட்டிக்கு எப்படியும் உங்களை அழைச்சிட்டு வருவேன்னு சுரேஷ் சார் சொன்னார், அதான் தீபனுக்கும் சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு அவங்கிட்ட நான் எதுவுமே சொல்லலை…”

விக்கியும் சிரித்த முகத்துடன் கூற, அனைவரின் முகத்திலுமே புன்னகை நிறைந்திருந்தது…

கௌஷிக்கின் விழிகள் சாருவினையே அடிக்கடி தொடர்ந்தது, விக்கி மற்றும் தீபனிடம் பேசிக்கொண்டிருந்தாலும்…

சிரித்துக்கொண்டே திரும்பிய விக்கி, சாருவினைப் பார்த்துவிட்டு, “சார்… சாரி… முக்கியமானவங்களை உங்க கிட்ட அறிமுகப்படுத்த மறந்தே போயிட்டேன்… இவங்க….” என விக்கி ஆரம்பித்த போது,

“என் மனம் கவர்ந்தவள்….”

கௌஷிக்கின் மனமானது விரைந்து கூறிட, அவனது அதரங்களோ அழுந்த மூடியிருந்தது…

“என் அக்கா சாரு… இசைத்துறையில் வளர்ந்து வரும் பாடகி…” என்றான் தீபன் புன்னகையோடு…

“வணக்கம்….” என கௌஷிக் அவளைப் பார்த்து கரம் குவித்திட, அவளும் கரம் குவித்திட்டாள் மனதில் எழுந்த சிறு ஏமாற்றத்தோடு…

தீபனின் துறையினையும், அவன் கொண்ட வெற்றியினையும் தெரிந்து கொண்ட அவன், தனது பெயர் கூட தெரிந்து கொள்ள முன்வரவில்லையே என்ற உண்மையான ஆதங்கம் அவளை வாட்டியது…

இன்று ஊரில் அவளை தெரியாதவர்களே இல்லை என்றே கூறலாம்… இந்த காலத்தில் பாடலே பிடிக்காதவர்கள் யாரும் இல்லையே… அப்படி இருக்கும் பட்சத்தில், தன் பாடலை எங்கேயாவது ஓர் நொடி கேட்டிருந்தால் கூட தன்னை அடையாளம் கண்டுபிடித்திருக்கலாமே… எனில், அவன் பாடலைக் கேட்கவில்லையா?... இல்லை…. என அவள் மனம் யோசிப்பதற்குள் அவளின் அந்த மாற்றம் கொண்ட முகம் அவனின் கண்ணில் தென்பட்டதோ?...

அந்த ஏமாற்றம் அவளின் முகத்தில் அவன் கண்டானோ?....

“லாஸ்ட் வீக், இவங்களோட பேட்டியைப் பார்த்தேன்… வெரி இன்டிரஸ்டிங்க்… வெற்றியை இவங்க பார்க்குற விதம் ரொம்பவே நல்லா இருந்தது…”

சட்டென ஆச்சரியத்துடன் அவனை பார்த்திட்டாள் அவள்…

தீபனை தெரிந்து கொண்டது முன்னமே… ஆனால் உன்னை தெரிந்து கொண்டது சமீபமே… அதுவும் விதியின் விளையாட்டினால்…

கௌஷிக்கின் மனமானது அவனுக்குள் உரைத்திட, சாருவோ அவன் சொன்ன பதிலில் கூர்மையாக அவனைப் பார்த்திட்டாள்…

அவளின் பார்வையினை அவன் புரிந்து கொண்ட வேளை, “என் மனதை அறிய முற்படாதே பெண்ணே… அது வேண்டாம்…” என முணுமுணுத்து அவனுள் ஒளிந்து கொண்டது அவனது உள்ளம்…

“பார்த்தீங்களா சார்… இன்னும் சொல்ல வேண்டிய விஷயத்தை நான் சொல்லவே இல்லை…” என தன்னைத் தானே திட்டிக்கொண்ட விக்கி,

“சாரு அக்கா தான் இந்த அட்-ல யும் பாடியிருக்குறாங்க... அமேசிங்கா வந்திருக்கு அந்த சாங்க்…” என சொல்லிட, கௌஷிக்கின் முகம் மாற்றத்தை பிரதிபலித்தது…

விநாடியில் பிரதிபலித்த உணர்வுகளை அவன் மறைப்பதற்குள்ளாகவே, சாருவின் விழிகள் அதனை கண்டு கொள்ள, அவளின் புருவ மத்தியில் விழுந்தது ஓர் ஆழமான முடிச்சு…

“நாங்க எல்லாருமே கேட்டாச்சு… நீங்க மட்டும் தான் சார் பாக்கி…”

விக்கி சிரித்துக்கொண்டே சொல்ல,

“அது நடவாத ஒன்று…” என அவளின் பாடலை கேட்க ஆர்வமாய் காத்திருந்த மனதிடம் தெளிவாக உரைத்தான் அவன்…

அவனின் மனதை அவள் படித்துவிட்டாளோ!!!..

பார்வையை அவனிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளாமலே அவள் இருந்திட,

“ஓகே… நேரமாச்சு…..” என்றபடி அங்கிருந்து அவசரமாய் கிளம்ப எத்தனித்தான் கௌஷிக்…

“ஓகே… சார்… இன்னைக்கே ஷூட்டிங்க் ஆரம்பிச்சிடும்… நீங்களும் வந்தீங்கன்னா நல்லாயிருக்கும்…”

விக்கியின் கோரிக்கைக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்ட புன்னகையினை மட்டுமே பதிலாய் கொடுத்துவிட்டு அவன் நகர, கௌஷிக்கினையே பின் தொடர்ந்த்து சாருவின் விழிகள்…

பின் அனைவரும் கிளம்ப ஆரம்பிக்க, தீபனும் சாருவினை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.