(Reading time: 14 - 27 minutes)

21. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு....

ஜெய்! நீ எங்க இருக்க? எங்க இருந்தாலும் சரி, உடனே பெங்களூரூ கிளம்பி வா! சரயூ கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாளாம்.... எங்க கசின் பத்தி சொல்லவானு, என் தங்கச்சி ஃபோன் பண்ணி கேட்குறா.  என்ன நடக்குதுனே புரியலை! உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைனு தெரியும்... ஆனா இப்படி கல்யாணம் வரைக்கும் போகும்னு நினைக்கலை” பதற்றம், குழப்பம், ஆதங்கம், ஆதரவு என்று பல உணர்வுகள் கலந்திருந்தது, ப்ரியாவின் சில நிமிட பேச்சில்.

அவள் வேறு என்ன பேசினாலோ, அது இவனை சேரும் முன் அலைபேசி சுக்கு நூறாக உடைந்திருந்தது.  அடுத்ததாக அவன் முன்னிருந்த கண்ணாடி மேஜையில் பாய்ந்திருந்தது வலது கை.  கண்ணாடி கையை பதம் பார்த்திருப்பது கூட வலியை கொடுக்கவில்லை.   மனம் கொண்ட ரணம் அதை வென்றிருந்தது.  நான்கு வருடங்களாக யாரிடமும் எதையும் பகிர வழியில்லாது மலை போல் மனதில் குவிந்திருந்த உணர்வுகளை இப்போது கோபமாக வெளிவந்தது.  கண்ணில் பட்ட எல்லா பொருட்களையும் உடைத்திருந்தவன், தலையை பிடித்து கொண்டு கால்களை மடித்து தரையில் சரிந்தான். 

பித்து பிடித்தவன் போல் கண்களை மூடியிருந்தவன் சில நிமிடங்களுக்கு பின் இமைகளை பிரிக்க அவனை பார்த்து குறும்பாக சிரித்து கொண்டிருந்தாள் அவன் அழகி. 

“ஏன்டி...ஏன்டி...பார்க்காம, பேசாம, என்னை சித்ரவதை பண்ணது பத்தாதுனு இப்போ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி, என்னை உயிரோடு கொல்ற? புரியாதா?! உனக்கு புரியவே புரியாதா? என்னைதா புரிஞ்சுக்கல, உன்னையும் உன் மனசையுமா? எத்தனை முறை உங்கிட்ட பேச ட்ரை பண்ணியிருப்ப.... ஒரே ஒரு தடவை எனக்கு சான்ஸ் கொடுத்தியா? ரிசார்ட்ல நடந்ததை வச்சு, என்னை தப்பானவன்னு, நீயே முடிவு பண்ணிட்டியா?”

மாலைப் பொழுதின் மங்கிய ஒளியும், உடலை நனைத்த மழைச்சாரலும், அன்றிருந்த மனநிலையில், அத்தனை அருகினில் அவளின் மதிமுகத்தைக் கண்டவன் மயங்கி நின்ற வேளையில், மனதில் கரை புரண்ட காதல் முத்தமாக வெளிப்பட்டது.  அதை புரியாதவளாக இத்தனை வருடங்களாக இவனை பார்க்காமலும் பேசாமாலும் தவிர்த்து விட்டிருந்தாள் சரயூ.

“முட்டாள்டி நீ! எனக்கும் வலியை கொடுத்து நீயும் அனுபவிச்சு இப்போ இன்னொருத்தனுக்கும் கொடுக்கலாம்னு நினைச்சிருக்கியா? அது மட்டும் நடக்காது! நடக்கவும் விட மாட்டேன்! நீ எனக்கு மட்டும்தா, சரூ!” ஆவேசமாக சொல்லியபடி அந்த புகைபடைத்தை தன் மார்போடு அழுத்திக் கொண்டான்.  அந்த செயலில் ஒரு பிடிவாதம்.  அவள் தனக்கு மட்டும் தான்.  யாரும் அவனிடமிருந்த அவளை பிரிக்க முடியாது என்ற உறுதியிருந்தது.

“எங்கிட்ட வந்துடுடா! இந்த வலியும் வேதனையும் போதும்.  உன்னோட சந்தோஷமா வாழனும்னு ஆசையா இருக்கு... ப்ளீஸ் எங்கிட்ட வந்திடு சரூ! வந்திடு ப்ளீஸ்” சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவன் வாய் அதன் பாட்டில் பிதற்ற, மூடிய கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்தது கண்ணீர்.

ல்லோரையும் கவனித்து விட்டு, இரண்டு தோசையை தட்டில் போட்டு கொண்டு சாப்பிட உட்கார்ந்தார் வடிவு.  புயலென வீட்டினுள் நுழைந்த ஜெய் அவர் பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.  அவன் வந்த வேகத்தினால் உண்டான அதிர்ச்சியை விடவும் ஆச்சரியாம் மேலிட்டது.

காலேஜ் முடித்த பின் ஜெய் அந்த வீட்டிற்கு வருவது மிகவும் குறைந்து போனது.  பிஸ்னெஸ் பொறுப்பை கையிலெடுத்திருந்தவனுக்கு அவன் தந்தையின் விசுவாசிகள் துணையாக இருந்தாலும் புதிதாக கற்க வேண்டியவைகள் மலையளவு இருந்தன.  தன்னுடைய முழு கவனத்தையும் அதில் செலுத்தியவனுக்கு இங்கு வந்து போவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை.  அவ்வப்போது எல்லோரிடமும் ஃபோனில் பேசுபவன் இன்று காலையில் வீட்டிற்கு வரவும் வடிவுக்கு ஆச்சரியமும் அவன் மீதான பாசமும் ஒரே நேரத்தில் வெளிபட கண்களில் நீர் திரண்டிட இதழ்களில் புன்னகை மின்ன ஜெய்யை வரவேற்றார்.

“ஜெய் கண்ணா! எப்படி இருக்க? பார்த்து எத்தனை மாசமாச்சு... என்ன சாப்பிட்ற? தோசை வார்க்கவா இல்லை உனக்கு பிடிச்ச குழி பனியாரம் செய்யட்டுமா? புள்ளை என் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு?” என்று கேள்வி மேல் கேள்விகளை அடுக்கியவர் அவசரமாக எழுந்து சமையலறை நோக்கி நகர்ந்தார்.

அவரின் கையை பிடித்து தன்னருகில் நிறுத்தி கொண்டவன், “இல்லம்மா! எனக்கு இப்ப எதுவும் வேணா”

“என்ன கண்ணா? இப்படி சொல்லிட்ட? ஏதாவது சாப்பிடு ஜெய்” என்றபடி அவன் தலையை வருடினார்.

நிமிர்ந்து அவரை பார்த்தவன், “உங்கட்ட கொஞ்ச பேசனும்”

“தாராளமா பேசு! ஆனா இரண்டு தோசையை சாப்பிட்டு பேசு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.