(Reading time: 14 - 27 minutes)

ஜெய் எதற்காக வந்திருக்கிறான் என்று தெரிந்திருந்த ப்ரியா, அவசரமாக தோசை வார்த்து எடுத்து வந்து வடிவிடம் கொடுத்தாள்.  நேற்று அவள் சொன்ன விஷயத்தில் அவன் சாப்பிட்டிருக்க மாட்டான் என்பதால் வடிவு கேட்கும் முன்னே தோசை தயாராகியிருந்தது.

மறுபடியும் அவன் உணவை மறுக்க, வடிவு, தோசை வில்லலை பிய்த்து அவன் வாயருகே நீட்டவும் ஜெய்யின் வாய் தானாக திறந்தது.

எல்லா பிரச்சனையும் தீரும் வரை இங்கு வருவதை தவிர்க்க வேண்டி தன்னை தொழிலில் ஈடுபடுத்தினான் ஜெய்.  அவன் சாப்பிட்டானா இல்லையா என்று கேட்க யாருமில்லாது தனிமையில் வெந்தவனுக்கு வடிவின் அன்பு அவன் தொலைத்த நாட்களை திருப்பி தந்தது.  மகிழ்ச்சியில் அவரை இடையோடு கட்டிக் கொண்டு உண்ட தோசைகளின் எண்ணிக்கை அவனுக்கோ வடிவுக்கோ தெரியாது.  அது ப்ரியாவுக்கு மட்டும் தெரிந்த இரகசியம்.

இவர்களின் பாச பரிமாற்றத்தை பார்த்த சந்திரசேகர், “நீ சரியான அம்மா பையன்டா! வாசல்ல உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டிருந்த நானெல்லாம் உன் கண்ணுக்கு தெரியுவேனா? தோசை தர அம்மா மட்டும்தா தெரியுறாளா?” அவனை வம்பிழுத்தவர் சிரிக்க...

வாயிலிருந்த தோசையை அவசரமாக விழுங்கியவன், “அய்யோ! அப்பா அப்படியெல்லாம் இல்லை.  நீங்க இருந்ததை நான் கவனிக்கலைபா”

அதை நம்பாததை போல் அவர் மேலும் சிரிக்க....

ஜெய், “பாருங்கம்மா...அப்பா நான் சொல்றத நம்ப மாட்டிங்கிறார்” என வடிவிடம் புகார் மனு கொடுக்க

“ஏங்க சும்மா, புள்ளைய வம்பிழுக்குறீங்க?! அவன் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் நீங்க எதுவும் பேசக் கூடாது” என்று கணவனுக்கு கட்டளையிட்டவர், ஜெய்யிடம், “அவர் கிடக்கிறார்.... எப்ப பார்த்தாலும் அந்த பேப்பரை கட்டி அழுதுகிட்டு.... நீ சாப்பிடு கண்ணா” என்றபடி மறுபடியும் அவனுக்கு தோசையை ஊட்டினார்.

ஜெய் சாப்பிட்டு முடித்ததும், ஊட்டிவிடும் பொறுப்பை அவன் ஏற்று கொள்ள வடிவு சாப்பிட்டார்.

“சொல்லு கண்ணா! இந்த அம்மாட்ட என்ன சொல்லனும்?”

இத்தனை வடிவின் பாசத்தில் தொலைந்திருந்தவன் அவர் கேள்வியில் தான் எதற்காக வந்தான் என்பது நினைவுக்கு வர முகம் தானாக வாடியது.

ஏக்கமாக வடிவின் முகத்தை பார்த்தபடி, “எனக்கும் சரூக்கும் கல்யாணம் செய்து வைக்கிறீங்களாமா?”

அவன் முகத்திலும் குரலிலும் தெரிந்த மாற்றத்தை கவனித்து, என்ன சொல்வானோ என்று எதிர்பார்த்தவர் இந்த கேள்வியை ஒரு நொடி கூட யூகித்திருக்கவில்லை.

சட்டென முகம் மலர்ந்துவிட, “கண்டிப்பா கண்ணா! சந்தோஷ பட வேண்டிய விஷயத்தை சொல்லிட்டு உன் முகம் ஏன் வாடியிருக்கு?”

இத்திருமணத்திற்கு சரயூ சம்மதிக்க வேண்டுமே என்று எண்ணியவனின் முகம் வாடியிருந்தது.  இதை எப்படி வடிவிடம் சொல்வதென தயங்கியவன், “அது மா....அது வந்து....”

“தெரியும் கண்ணா! எனக்கு எல்லாம் தெரியும் ஜெய் கண்ணா”

இவருக்கு என்ன தெரியும் என்று அதிர்ந்தவனை, உதட்டில் பூத்த புன்னகையோடு, “உங்களுக்குள்ள ஏதோ சண்டை.  அப்படியிருக்க எப்படி இந்த கல்யாணம்னு யோசிக்கிறீயா”

அவரின் பதிலில் அவருக்கு வேறெதுவும் தெரியாது என்று ஆசுவாச பட்டவன், “ஆமாம்மா! சரயூ எம்மேல கோபமாயிருக்கா.  அதான்....” என்று முடிக்காமல் அவன் நிறுத்தவும்

“சின்ன சின்ன சண்டை வருவதெல்லாம் சகஜம்தான் கண்ணா! இதை பற்றி நீ கவலைபட வேணாம்.  இந்த அம்மாவை நம்பு, உங்க கல்யாணம் நடக்கும்” என்று வடிவு வாக்களிக்கவும்...

இவன் செய்த பிழையால், அவநம்பிக்கை மட்டுமே தலைதூக்கியிருந்த மனதில் வடிவின் உறுதி இதத்தை தந்தது.

அதன் பிறகு கணவன், மகன், மருமகளென எல்லாரிடமும் விஷயத்தை சொன்னவர், அன்றே கல்யாண தேதியை குறித்து விடலாம் என்று பரபரப்பாக பஞ்சாகத்தை புரட்டி சில முகூர்த்த தேதிகளையும் குறித்துவிட்டு சரயூவின் வீட்டிற்கு கிளம்பினார்.

தோட்டத்துக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த ராகுல் வந்தவர்களை பார்த்ததும் மைத்ரீயை அழைத்தான்.

“மையு! உனக்கு சர்ப்ரைஸ் தர யாரெல்லாம் வந்திருக்காங்க பாரு?”

ராகுல் குரல் கொடுக்கவும் அங்கு வந்தவள் எல்லோரையும் இன்முகமாக வரவேற்று விட்டு ஜெய்யை மட்டும் நிமிர்ந்து கூட பார்க்கமல் வீட்டினுள் நுழைந்தாள்.

தோழியின் புறக்கணிப்பை அவனால் தாங்கமுடியவில்லை.... அவனால் தானே இந்த நிலை என்ற எண்ணமே மனதை பிளந்தது.

மைத்ரீயின் நட்பு, என்றுமே அவனுக்கு துணையாய் வாழ்கையின் தூணாய் இருக்குமென்று எத்தனை முறை நினைத்திருப்பான்.  ஆனால் அந்த நம்பிக்கை இன்று சிதைந்து போனது.  சிறு வயதில் பெற்றோரை இழந்து, அன்பிற்காக ஏங்கியவனுக்கு அழகானதொரு குடும்பத்தையே கொடுத்து, அவனுக்கு மறுவாழ்வு தந்து, அவனை பாதுகாத்தவள் அவனது உயிர்த்தோழி.  அப்படி பட்டவளின் நட்பை அவனே இழப்பான்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.