(Reading time: 14 - 27 minutes)

அதுவும் தன் காதலே நட்பின் முறிவாய் அமையும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை அவன்.  நான்கு வருடங்கள் கழிந்தும், சற்றும் குறையாத மைத்ரீயின் கோபத்தில், அவன் நொஞ்சோரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த, தங்கள் நட்பு மீண்டும் மலந்திடுமென்ற சிறு ஆசையும் காணாமல் போனது. 

இந்நிலையை மாற்ற முடியுமா? அப்படியே மாற்ற முடிந்தாலும், அதை எப்படி செய்ய போகிறான்?

மனைவியின் செயலையும் ஜெய்யின் முகத்தில் பரவியிருந்த வேதனையையும் கவனித்த ராகுல், “வா சஞ்சய்! ஏன் நின்னுட்ட? உள்ளே வா!” அவன் தோளில் கை போட்டு, வீட்டிற்குள் அழைத்து சென்றான்.  ராகுலின் அன்பான வரவேற்பு வருந்திய மனதுக்கு சற்று நிம்மதியளித்தது.

ஞாயிற்றுக் கிழமையாதலால் ஓய்வாக அமர்ந்து டி.வி நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்த ரவிகுமாரும், வாசலில் சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து வந்த சாரதாவும் சம்மந்தி வீட்டினரை மரியாதையோடு வரவேற்று உபசரித்தனர்.

ஜெய்யை கண்டவுடன் ரவிகுமாரின் மனதில் பல கேள்விகள் எழுந்தன.  கல்லூரி படிப்பு முடிந்த பின் பிஸ்னெஸ்ஸை எடுத்து நடத்தும் ஜெய்யை பார்ப்பதே அரிதாகி விட்டிருந்த நிலையில் இன்று எல்லோருடனும் சேர்ந்து குடும்பமாக வந்திருக்கவும் யோசனை தலை தூக்கியது.

மாம்பழச் சாற்றை எல்லோருக்கும் கொடுத்த மைத்ரீ கடைசி ஒன்றை மட்டும் டீபாயின் மீது வைத்துவிட்டு சென்றுவிட்டாள். 

இதை கவனித்த வடிவு, “மைத்ரீ! என்ன இது? ஜெய்க்கு ஜூஸை கொடுக்காம, அங்க வச்சிட்டு போனா எப்படி? ஒழுங்கா அவன் கையில் கொடு” என்று கடிந்து கொள்ளவும்

“டீபாய் என்ன ஆறு மைல் தாண்டியா இருக்கு? நானே எடுத்துக்குறேன்மா! நம்ம மைதி வீட்ல எதுக்கு இந்த ஃபார்மாலிட்டியெல்லாம் பார்த்துக்கிட்டு?” மனதிலிருந்த வலியை மறைத்து மிகவும் இயல்பாக சொன்னபடி ஜூஸை எடுத்தான்.

ராகுல் மைத்ரீயை முறைக்கவும், இதுக்கெல்லாம நான் அசரமாட்டேன் என்பது போல் நின்றிருந்தாள் அவன் மனைவி.

“எங்க நம்ம யதுவை காணோம்?” என்று சாராதா கேட்கவும்

“அவன் அம்மா வீட்ல இருக்கான்மா.  யஷுதா அவனை தூக்கிட்டு போனா.  யது கூட இருக்கனும்னு என்னையும் சேர்த்து வர சொன்னா.  நான் அவனை மட்டும் அனுப்பி வச்சேன்” என்று ப்ரியா சொல்லவும்

“ஓ... அதான் யஷ்விதா நேத்தைக்கு சீக்கிரமா கிளம்பிட்டாளா? யதுக்கு மூனு வயசுதானே ஆகுது?  குழந்தை உன்னை விட்டு இருந்துப்பானா ப்ரியா?”

“இருந்துப்பாமா.  அவனுக்கு யஷு இருந்தா போதும்.... எல்லாரையும் மறந்துருவான்.  என்னவோ எங்களை விட அவகிட்டதா அதிகமா ஒட்டிக்கிட்டாமா” என்று தன் மூன்று வயது மகனை பற்றி மகிழ்ச்சியாக அவள் பேசவும்

ஆதர்ஷ் சொன்ன எதற்கோ தலையை ஆட்டியபடி ராகுல், மைத்ரீயை அர்த்தத்தோடு பார்த்தான்.  ஜெய் வந்திருப்பதில் கோபமாக இருந்தவளுக்கு கணவன் பார்வையின் அர்த்தம் புரியவேயில்லை.  என்ன என்பதாக கண்களால் வினவவும்... சிறு புன்னகையோடு ஒன்றுமில்லை என்பதாக தலையை மட்டும் அசைத்தான்.

இதற்கிடையில் ரவிகுமாரும் சந்திரசேகரும் அரசியலை அலசிக் கொண்டிருந்தார்கள்.

சரயூவை பார்த்திட வேண்டும், தன்னை அவளுக்கு புரிய வைக்க வேண்டும், அவளை தன்னவளாக்கி ஆயுள் முழுதும் தன் காதலில் அவளை நனைக்க வேண்டும், என்று பல கனவுகளோடு வந்தவனுக்கு மைத்ரீயின் செயல்களே ஏமாற்றத்தை தந்திருக்க சரயூ என்ன செய்வளோ என்று நினைத்த நொடியில் மனதின் பாரம் கூடியது.  மனதின் அவஸ்தையின் பிரதிபலிப்பாய் அவனுக்கு வேர்த்து கொட்டியது.

ஜெய்யின் நிலையறியாதா ஆதர்ஷ், ரகசிய குரலில், “வழக்கமா பொண்ணு பார்க்க வந்தா, பொண்ணுதா டென்ஷன்ல இருக்கும்.... என்ன கேட்பாங்க, என்ன பேசறதுன்னு பயம் வேற.... இங்க என்னடானா, எல்லாமே உல்டாவா இருக்கே! சரியா பேச மாட்டிங்கிற, உன் முகமெல்லாம் வேர்த்திருக்கு.... பார்த்து ஜெய்... இப்போவே இப்படியிருந்தா, அப்றம் ஃப்ர்ஸ்ட் நைட்ல.....” என்று இழுத்தவன் கேலிப் புன்னகையை உதிர்க்க...

ஜெய் – சரயூவுக்கிடையில் ஏதோ மனக்கசப்பு.... அதனால் இருவரும் முன்பு போல் பேசிக்கொள்வதில்லை என்பது இருக் குடும்பத்தினரின் நினைப்பு. காதலிப்போர் சண்டையிடுவதும் பிறகு சமாதானமாவதும் சகஜமும் தானே என்பதால், இவர்களின் திருமணத்தை முடிவு செய்யவிருக்கும் வேளையில் வழக்கமான கேலியில் இறங்கினான் ஆதர்ஷ். 

இந்த கல்யாணம் நடக்குமா? தன் காதல் கைகூடுமா? சரயூ இதற்கு சம்மதிப்பாளா? இவையனைத்துக்கும் மேலாக மைத்ரீயின் கோபமென அவன் குழம்பி தத்தளித்திருக்கையில்.... ஆதர்ஷின் கேலி, திருமணத்தைப் பற்றிய ஜெய்யின் முன்னாள் கற்பனைகளை கிளரிவிட்டது.  மனம் நிறைந்த காதலோடும், பெரியோர்களின் ஆசீர்வாதத்தோடும், அவள் தன் கரம் சேர வேண்டும், மகிழ்ச்சிக் கடலில் மூழ்கும் தருணமாக தங்கள் திருமணம் அமைய வேண்டும், அப்போது தன்னவளுக்கு பல இன்ப அதிர்ச்சிகளை தர வேண்டுமென, இன்னும் எத்தனையோ கற்பனைகளும் கனவுகளும்.... எல்லாமே தலைகீழாக மாற, தானே காரணமாகி போனதை என்னவென்று சொல்வது?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.