(Reading time: 12 - 23 minutes)

விழாவிற்கு வந்த அனைவரும் புதுமையாக இருக்கவே ரசித்து மகிழ்ந்தனர்.

சிறுவன் வருண் குழந்தை வர்ஷினியை கையில் ஏந்தி இருப்பது போல புகைப்படம் தோன்ற அழகான சின்ன தேவதை பாடல் ஒலித்தது.

அந்த நாள் நினைவுகளில் ஆழ்ந்தனர் வருணும் அவன் பெற்றோரும்.

இப்படியே பிள்ளைப் பருவம் தொடங்கி கல்லூரி பருவம் வர அங்கே ஓர் புகைப்படத்தில் வருண் காயத்ரி இருவரும் ஒருவரை இருவர் ஓரப் பார்வை பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருக்க வருண் காயத்ரி இருவரும் இப்படி ஒரு படமே இல்லையே என்று வர்ஷினியைப் பார்த்தனர்.

அவ்ளோ அது போட்டோ எடிட்டிங் என்று ஓசை எழமால் உதட்டை அசைத்துச் சொன்னாள்.

அந்தப் புகைப்படத்திற்கு பொருத்தமாக “முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை. முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை” என்ற பாடல் ஒலிக்கவும் நமுட்டுச் சிரிப்புடன் கண்ணடித்தாள் வர்ஷினி.

இறுதியாக அவர்கள் இருவரையும் கேமராவில் போகஸ் செய்து அதை திரையில் இடம் பெறச் செய்து “இது தானா இது தானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இது தானா” என்ற பாடலுடன் நிறைவு செய்தாள்.

பலத்த கைத்தட்டல் வந்திருந்த அனைவரும் வர்ஷினியை வெகுவாக பாராட்டினர்.

டாக்டர் சிவகுமார் வர்ஷினியை வெகுவாகப் பாராட்டிக் கொண்டிருந்தார்.

“டாக்டர் அங்கிள் ராம் கூட உங்க ஸ்டுடன்ட் தானா” என்று அவரிடம் கேட்க இப்போது ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறாள் என்று கணேஷ் வருண் காயத்ரி அனைவரும் அவளைப் பார்த்தனர்.

“நேரடியா ஸ்டுடன்ட் இல்ல” என்று டாக்டர் சிவகுமார் சொல்ல கணேஷ் அதை மறுத்து “நீங்க எப்போவும் என் குரு தான்” என்றான்.

“உங்க ஸ்டுடன்ட்க்கு ஒண்ணுமே தெரியல அங்கிள்” வர்ஷினி சொல்லவும் அவள் செய்யும் குறும்புத்தனத்தை அறிந்த வருண் காயத்ரி கணேஷிற்கு சைகை காட்ட அவனோ தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்தான்.

“ஏனம்மா அப்படி சொல்ற” டாக்டர் சிவகுமார் வர்ஷினியிடம் கேட்டார்.

“நான் யுஎஸ்ல ப்ராஜக்ட் செய்யும் போது ஒரு தடவை இவர்கிட்ட செக்அப் போனேன் அங்கிள். இவரு ஒழுங்காவே ட்ரீட்மன்ட் தரலை அங்கிள்” ராமை பார்த்துக் கண்ணடித்தபடியே கூறினாள்.

“இல்லையே மா கணேஷ் இஸ் வெரி இன்டலிஜன்ட்” என்று மிகவும் சீரியசாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அங்கே வந்த சுமித்ரா வர்ஷினியின் காதைப் பிடித்துத் திருகினார்.

“வாலு வாலு...அவ சும்மா வம்பிழுக்கிறா ஷிவா” என்றவர் ராம் வர்ஷினிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதை சொன்னார்.

அதைக் கேட்ட டாக்டர் சிவகுமார் மிகவும் ஆனந்தம் அடைந்தார்.

வர்ஷினியை பிறந்த போது முதலில் பார்த்தவர் அவர் தானே. அதிலும் வர்ஷினி அவளது அன்னையோடு இருந்த அந்த சில மணித்துளிகளின் சாட்சி அவர் தானே.

காலம் தான் எத்தனை வேகமாய் உருண்டோடுகிறது.

வெகு விமரிசையாக வருண் காயத்ரி திருமணம் நடைபெற்று காயத்ரி கௌரி இல்லத்தில் பிரவேசித்தாள்.

அம்ரிதவர்ஷினி கணேஷ் ராம் திருமண தேதி குறிக்க சுமித்ரா ரவிசங்கர் கணேஷ் ராமுடன் கௌரி இல்லம் வந்தனர்.

“மேடம், சர், டாக்டர் கணேஷ் வாங்க வாங்க” வீட்டின் மருமகளாய் காயத்ரி வரவேற்றாள்.

“என்ன மா இது இன்னும் மேடம் சர்ன்னு சொல்லிட்டு. கூப்பிடு என் மருமகளை இன்னிக்கு ஒரு பஞ்சாயத்து வச்சிடலாம்” என சுமித்ரா சொல்லவும் காயத்ரி மிரண்டு போனது போல நடித்து சிரித்தாள்.

“அம்முவை கூப்பிட்டு பஞ்சாயத்து செய்தா எப்போ சேம் சைட் கோல் அடிப்பான்னு சொல்ல முடியாது. அதுக்கு நமக்குள்ளேயே தீர்த்துக்கலாம்” காயத்ரி சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“உனக்கு அத்தை மாமா முறை தான் வரணும். ஆனா அம்மு உனக்கு நாத்தனாரா இருப்பதால் எங்களை பெரியம்மா பெரியப்பான்னு கூப்பிடு மா” சுமித்ரா சொல்லவும் காயத்ரி சந்தோஷமாக தலையாட்டினாள்.  

“அப்போ என்னை அண்ணான்னு கூப்பிடனும் காயத்ரி” கணேஷ் சொல்ல காயத்ரி அதற்கும் தலையாட்ட

“அப்போ உங்களை தலையாட்டி பொம்மைன்னு சொல்லணும் அண்ணி” என்று குரல் வந்தது.

குரல் வந்த திசையை எல்லோரும் பார்த்திருக்க பின்னோடு வந்து சுமித்ராவின் கண்களைப் பொத்தி ‘யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்’ என்று விளையாட்டு காண்பித்தாள்.

“அறுந்த வாலு குரங்கு குட்டி” ரவிசங்கர் சொல்லவும்

“சபாஷ். சர் நீங்க தான் அம்முக்கு சரிக்கு சரி” என்று வருண் கைதட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.