(Reading time: 18 - 36 minutes)

மகளுக்கும் ஜெய்யிற்கும் நடுவில் சிக்கி தவித்த மனதில் இடியென இறங்கிய கேள்வி, அவரையும் குற்றம் சாட்டிட...சட்டென சொல்லிவிட்டிருந்தார், “சரயூவோட முடிவு எதுவானாலும் நாங்க அதை ஏத்துக்குவோம்” என்றுவிட்டு ஜெய்யை அழுத்தமாக பார்த்தவரின் பார்வையில், நீயும் அதையே ஏத்துக்கனும் என்ற மறைமுக செய்தி இருந்தது.

ஜெய்யிற்கு அவன் நிலை இன்னும் மோசமடைந்ததாக தோன்றியது.  வீட்டாரின் துணையோடு அவளின் மனதை மாற்றி இந்த திருமணத்தை நடத்திவிடும் எண்ணம் மண்ணில் சரிந்துபோனது.  சரூ நிச்சயமாக இவனுடனான திருமணத்தை ஏற்க போவதில்லை.  ரவிகுமாரோ, அவளின் முடிவு எதுவானாலும் அதற்கு மறுபேச்சில்லை என்றுவிட்டார்.  இப்போது வேறு வழியும் இருப்பதாகவும் இவனுக்கு தெரியவில்லை.

சம்மந்தியின் உறுதியான பேச்சில் செய்வதறியாது அமர்ந்திருந்த சந்திரசேகர், “இப்போ சொன்னீங்களே சம்மந்தி... இதுதான் சரியான முடிவு!” என்று ஆசுவாச பட்டார்.

எல்லோருக்கும் இந்த யோசனையில் மகிழ்ச்சி என்றால், சாரதாவும், மைத்ரீயும் எதுவும் மாறப்போவதில்லை என்று அமைதியாக இருந்தனர்.

ஜெய்யை உட்கார வைத்திருந்த ராகுல், “உன்னோட காதல் மேல நம்பிக்கை வை!” என்றதும் சட்டென அவனை தவிப்போடு நிமிர்ந்து பார்க்கவும்...

“உண்மையான காதல் என்னைக்குமே தோத்ததில்லை ஜெய்!” என்றபடி இவன் கையை அழுத்தி, புன்னகைக்கவும், ராகுலை அணைத்திருந்தான் ஜெய்.

ஜெய்யின் மனதில் ஒரு நம்பிக்கை பூ பூத்தது.  இருக்காதே பின்னே.... எது எப்படி நடந்திருந்தாலும் அவன் காதல் உண்மையாயிற்றே.  அப்படியிருக்கையில் அவன் காதல் நிச்சயம் கைகூடும் என்ற நம்பிக்கை துளிர்க்க, சற்று தெளிந்த மனதோடு நிமிர்ந்து அமர்ந்தான்.

ஏதோ யோசனையில் சிலையென நின்றிருந்தவளை, ராகுல், “மையூ! அப்பா சொன்னது கேட்டுச்சில்ல... போயி சரயூவை அழைச்சிட்டு வா” என்று சொன்னதும், மறுப்பேதுமின்றி உள்ளே சென்றாள் அவன் மனைவி.

என்ன தான் நம்பிக்கை பிறந்திருந்தாலும், மைத்ரீ சென்ற திசையையே தட தடத்த மனதோடு பார்த்திருந்தான் ஜெய்.  தோழியின் கொலுசொலி காதில் விழுந்து, இவன் இதய துடிப்பை அதிகரித்தது.  அன்று ரிசார்ட்டில் பார்த்ததோடு சரி...அதன் பிறகு இன்று தான் காதலியை காணப் போகிறான் என்ற படபடப்பு வந்து ஒட்டி கொள்ள, கண்கள் நிலையில்லாது அலைந்தது.  என்ன சொல்ல போகிறாளோ என்ற மாத்திரத்தில் மனதிலெழுந்த பயத்தில் அவனுக்கு வியர்த்தது.  உள்ளுக்குள் வெடித்து சிதறிய உணர்ச்சிகளை, கீழ்தட்டை கடித்து, தலையை கோதி சமன் செய்ய முயற்சித்தான்.  இவனை கவனித்த ஆதர்ஷ்,

“ரிலாக்ஸ் ஜெய்!” என்றவனுக்கு கஷ்டபட்டு ஒரு சிரிப்பை உதிர்த்தவனின் மனதில் எண்ணிலடங்கா கேள்விகளும் குழப்பங்களும்.

அவள் மறுத்துவிட்டால் என்ன செய்வது? என்ற பெருங்கேள்வி மற்றவைகளை தள்ளிவிட்டு பிரதானமாய் வந்தமர்ந்து கொண்டது.  இல்லை! அவள் மறுக்க மாட்டாள்! அவளால் மறுக்கவும் முடியாது! இத்தனை வருட இடைவெளியில், அவளுள் இருக்கும் காதல் விழித்து கொண்டிருக்கும்....என்னையும் அவளுக்கு புரிந்திருக்கும் என்று தன்னை தானே தேற்றி கொள்ள....  

இத்திருமணத்தை குறித்த ஜெய்யின், நேர் மற்றும் எதிர்மறையான எண்ண போராட்டத்துக்கு முற்றுபுள்ளியாக வந்து சேர்ந்தாள் சரயூ.

இவனை ஈர்க்கும் அழகான கண்கள் ஒளியிழந்து, கருவலையத்தோடு குழிவீழ்ந்திருந்தன. அவள் உதட்டோடு ஒட்டி கொண்டிருக்கும் புன்னகை தொலைந்து போய், அழுத்தம் குடிபெயர்ந்திருக்க, நான் என்னை கவனித்து கொள்வதில்லை என்று பார்த்ததும் புரியும்படியான பழைய பாவாடை சட்டையில் மெலிந்த உடலுமாய்...துள்ளி திரிந்த அவள் கால்கள், அமைதியான நடைக்கு பழகியிருந்தன... எத்தனை பெரிய கூட்டத்திலும் அவளிடம் இருக்கும் தைரியமும் நிமிர்வும் மறைந்து ஒருவித சங்கடமான உடல்மொழியோடு வந்தவளை கண்டு ஜெய்யின் கண்களில் நீரேற்றம்.  தன்னவளுக்கு என்ன நடந்தது? அவள் ஏன் இப்படி மாறி போனாள் என்று மனம் கூக்குரலிட...அவளின் இந்த நிலைக்கு இவன் தானே காரணம் என்ற எண்ணம் வந்து சேர்ந்த மாத்திரத்தில் உயிருக்குள் உருவான வலியில் உடைந்து போனான்.  பார்ப்பவனுக்கே இத்தனை வலியென்றால் அனுபவிப்பவளுக்கு என்று நினைக்கவும் சட்டென அவளை அணைத்து ஆறுதல் சொல்ல துடித்தது நெஞ்சம்.

ஆதர்ஷும் ராகுலும் ஆளுக்கொரு புறமாக இவனை இழுத்து பிடித்து உட்கார வைத்த பின்னர் தான், அவன் எழுந்து நின்றதே அவனுக்கு புரிந்தது. 

“அங்க பாரு! நீ எழுந்த வேகத்துல சரயூ பயந்துட்டா.  இப்படி அவளை பயமுறுத்தினா....அவ மட்டும் என்ன செய்வா? கொஞ்ச நேர அமைதியா இரு ஜெய்” ஆதர்ஷ்தான் இவன் வேகத்தை பார்த்து அதட்டினான்.

பயந்திருந்தவளின் கண்களிலும் சிறு நீரேற்றம்.  அது அன்று ரிசார்ட்டில் பார்த்த அவளின் அழுத முகத்தையும் அன்றைய நிகழ்வுகளையும் நினைவூட்ட, குற்ற உணர்வில் மூழ்கி மூச்சுத்திணறும் நிலை அவனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.