(Reading time: 18 - 36 minutes)

‘நான் என்ன செய்து இதை சரி செய்ய போகிறேன்? அவளை மீண்டும் பழையபடி மாற்றமுடியுமா?’ என்ற கேள்வியிலேயே அவநம்பிக்கை தான் அதிகாரமாக நின்றது.  ஏனெனில் அவனுக்கு தெரிந்த சரயூ இவளில்லை! கல்லூரி முதல் நாளன்று தான் யாரென்றே தெரியாத போதும், எவ்வளவு பேசினாள்! இன்றோ, இங்கிருப்போர் அனைவரையும் அவளுக்கு நன்கு தெரியும் ஆனால் ஏன் இந்த மௌனம்?! குழப்பமாக இருந்தது அவனுக்கு.  தன் காதல் அவளுக்கு தன்னை புரிய வைத்திருக்கும் என்று நினைத்தது வெறும் கற்பனையா? சரி...அது நடக்கவில்லை என்றாலும் இத்தனை வருடங்களில் அவளுள் இருக்கும் காதலை அவள் உணரவே இல்லையா? போதா குறைக்கு, எதை நினைத்து மறுகி இப்படி தன்னை தானே வருத்தி கொள்கிறாளோ? அவளை அவள் போக்கிலேயே விட்டு தவறு செய்துவிட்டான்.  இனிமேலும் அந்த தவறு தொடராது....தொடரவும் விடமாட்டேன்! என்ற தீர்மானத்தோடு அவளை கவனிக்க ஆரம்பித்தான்.

அவளை தன்னருகே அமர்த்தி கொண்ட வடிவு, “எப்படியிருக்க சரயூ? உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு...இல்ல...இல்ல...ரொம்ப மாசமாச்சு” என்றவர், “கல்யாணம் முடிஞ்சு, உங்க அண்ணியை இங்க விட வந்த போது பார்த்தது” பெருமூச்சை வெளியேற்றி மகளை முறைத்துவிட்டு, “இப்போ உன்னோட கல்யாணத்தை பத்தி பேசும்போது தான் உன்னை பார்க்கனும்னு இருக்கு போலும்”

இதுவே பழைய சரயூவாக இருந்திருந்தால் வடிவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பத்து வாக்கியமாவது பேசியிருப்பாள்.  ஆனால் இன்று அமைதியாக இருக்க...அவளின் இயல்பு முற்றிலுமாக மாறியிருப்பது எல்லோரையும் வருத்தியது. 

‘எப்படி படபடனு பேசும் பிள்ள...இப்படியிருக்கே! இனிமேல் நீ எதுக்கும் கவலைபட தேவையில்ல...ஜெய் உன்னை நல்லா பார்த்துப்பான்’ என்று நினைத்த வடிவு, பக்கத்திலிருந்தவளின் தலையை வருடியபடி, “சரயூமா...நம்ம ஜெய்யை கல்யாணம் பண்ணிக்க, உனக்கு சம்மதமா?”

அனைவரும் ஆவலாக அவளின் பதிலுக்காக சரயூவின் முகத்தை பார்த்திருந்தனர்.  ஆனால் உணர்வுகளை துடைத்து, கலையிழந்திருந்த முகத்திலிருந்து எதுவும் பிடிபடவில்லை.

“யாரை பார்த்தும் பயப்படாதே சரயூ! உனக்கு பிடிக்கலைனா...தைரியமா சொல்லு! இவங்களை நான் பார்த்துக்குறே” என்று மைத்ரீ தோழியிடம் சொல்லவும்...

அவள் கணவனோ, “மையூ! நீ கொஞ்ச நேர பேசாமதா இரேன்.  அவளுக்கு எது சரினு படுதோ அதையே செய்வா!” என்று மனைவியை அதட்டியவன், “சரயூ! உனக்கு என்ன தோனுதோ அதை சொல்லுடா... யாரு என்ன சொல்றாங்கங்கறது எல்லா முக்கியமில்ல...நீ தைரியமான பொண்ணு! எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு...நீ சரியான முடிவைதா எடுப்ப” என்று தங்கைக்கு தைரியமளித்து...முடிவு அவள் கையில் தான் என்பதை தெளிவு படுத்தினான்.

அண்ணன் பேச்சின் கடைசி வரியில், கண்கள் நிறைந்துவிட, ஆமோதிப்பாய் தலையை அசைத்து, “எனக்கு சம்மதம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்தவள், வழக்கம் போல் தன்னறைக்குள் அடைந்து கொண்டாள்.

தன் யோசனையில் மூழ்கியிருந்த ஜெய்யை, ஆதர்ஷின் மகிழ்ச்சியான அணைப்பும் வாழ்த்துக்களும் மீட்டெடுத்தது.  ஒருவர் மாற்றி மற்றொருவர் என அவனை வாழ்த்த, நடந்ததை புரிந்து கொண்டவனும் மகிழ்ந்து போனான்.  ஆனாலும் சிறிதாக எட்டிப் பார்க்கும் ஆச்சரியத்தை தடுக்க முடியவில்லை...பின்னே, தன்னையும் தன் காதலையும் புரிந்துகொள்வாளோ? இல்லையோ என்று வேதனையில் உழன்றவனுக்கு இந்த ஆச்சரியம் எழுவது இயல்பு தானே!

அடுத்த நொடி அவள் தன்னை புரிந்து கொண்டாள் என்பது உறைக்க, அவளை பார்த்திடும் ஆவலில் அவளை தேட, சற்று முன் சரயூ அமர்ந்திருந்த இடம் காலியாக கிடந்தது.  திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாளே, அவளிடம் பேச வேண்டும் என்று கேட்டால் என்ன... என்று தோன்றிய எண்ணத்தை, உடனடியாக மாற்றி கொண்டான்.  அவள் சம்மதித்திருப்பதே பெரிய சந்தோஷம்....இப்போதில்லை என்றாலும் இனி வாழ்க்கை முழுதும் பேசிகொள்ளலாம்!

ரவிகுமார் மற்றும் சாரதாவிற்கு மகளின் இந்த முடிவு ஆச்சரியத்தை கொடுத்திருக்க.. மைத்ரீக்கோ அதிர்ச்சி! அவளை பொருத்த வரை, ஜெய்யின் செயலுக்கு பின்னும் சரயூ அவனை ஏற்க மாட்டாள் என்றிருக்கையில் அவளின் முடிவில் குழம்பி போனாள்....ஆனாலும் தோழியின் பதிலினால் மனதில் பரவும் நிம்மதியை மறுக்கவும் முடியாது.  அது தன் நண்பனின் வாழ்க்கை அவன் விரும்பியவாறு அமையவிருப்பதில் கிடைத்த நிம்மதி!

மகளின் பெயரை தவிர, எல்லாவற்றிலும் அவளின் விருப்பத்தின் படியே செயல்பட்டிருந்த ரவிகுமார், இந்த திருமணத்திற்கும் சம்மதித்திருந்தார்.  என்ன தான் மகளின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், அவளின் இந்த முடிவு சரி தானா என்ற யோசனையில் சரயூவிடம் பேசிய போது, மகளின் தெளிவு கண்டு வியந்து போனார். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.